ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் பாய்ந்த கங்காரு! - இரவு நேரத்தில் நடந்த மனிதநேயம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கங்காரு ஒன்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள்  வந்திருக்கிறது. 

மாபி அஹோனவோ  (Mafi Ahokavo) என்பவர், டீர் பார்க் என்கிற இடத்தில் தனது குடும்பத்தினரோடு நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்துக்கொண்டு திடீரென கங்காரு ஒன்று வந்துள்ளது. வீட்டுக்குள் வந்திருப்பது என்ன மிருகமென்றே தெரியாத மாபி, உடனே எழுந்து வீட்டெங்கும் தேடியுள்ளார். வீடு முழுவதும் அதன் ரத்தம் சிந்தியிருந்தது. வீட்டின் கழிவறையில் அடிபட்ட நிலையில் இருப்பதைப் பார்த்த மாபி, உடனடியாக கதவைப் பூட்டிவிட்டு, காவல்துறைக்கும் விலங்குகளை மீட்கும் குழுவினருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் வந்த விலங்குகள் மீட்பு குழுவினர், அடைபட்டிருந்த கங்காருவுக்கு முதலுதவி அளித்தனர். கண்ணாடியில் மோதியதால், கங்காருவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. பிறகு, குழுவினர் கங்காருவை மீட்டு விலங்குகள் பராமரிக்கும் இடத்துக்கு எடுத்துச்சென்றனர். 

கங்காரு

இந்நிகழ்வுகுறித்து மீட்புக் குழுவைச் சார்ந்த மேன்பிரட் ஜாபின்ஸ்காஸ் என்பவர் கூறுகையில், “நாய்கள் துரத்தியதாலோ அல்லது கார்களின் சத்தங்களுக்குப்  பயந்தோ, கங்காரு ஓடி வந்து ஜன்னல் கண்ணாடியின்மீது பாய்ந்திருக்கலாம்” என்கிறார். நகர்மயமாக்களின் ஆபத்துகள் இப்போதுதான் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. கங்காருக்களின் வாழ்விடத்தில் வீடுகளை அமைத்திருப்பதே இந்த விபத்துக்குக் காரணமென முதற்கட்ட விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!