வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (30/07/2018)

கடைசி தொடர்பு:20:18 (30/07/2018)

வரிக்குதிரைகளைக் காப்பாற்ற நாடோடியாக மாறிய கென்யா பழங்குடிகள்! - நெகிழ்ச்சிக் கதை

வரலாற்றின்படி இந்த மூன்று இனத்தவர்களும் வடக்கு கென்யாவின் வன விலங்குகளுடன் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர்கள். இவர்கள் அரை மேய்ச்சல்வாதிகள் (Semi-Pastoralists). அப்பகுதியில் மட்டுமே காணக்கூடிய கால்நடைகளை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

வரிக்குதிரைகளைக் காப்பாற்ற நாடோடியாக மாறிய கென்யா பழங்குடிகள்! - நெகிழ்ச்சிக் கதை

ஜீப்ராக்கள். ஆப்ரிக்காவின் தனித்தன்மை வாய்ந்த குதிரை இனம். அதிலும் கிரேவி ஜீப்ராக்கள் அதிகச் சிறப்பு வாய்ந்தவை. மற்ற வரிக்குதிரைகளில் உடலிலிருக்கும் நீள்வரிக் கோடுகளைவிட இவற்றிலிருக்கும் கோடுகள் கொஞ்சம் சன்னமாக இருக்கும். இன்று கென்யாவில் மட்டுமே பெருவாரியாக வாழ்ந்துவரும் கிரேவி ஜீப்ராக்கள் சில பத்தாண்டுகளுக்குமுன் வரையிலும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் வேட்டை, வாழிடம் குறைதல், வாழிடங்களில் மனித ஆக்கிரமிப்புகளென்று பல்வேறு காரணங்களால் எண்ணிக்கையில் சுருங்கித் தற்போது கென்யாவின் வடக்குப் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. உலகளவில் அவற்ற்றின் தற்போதைய எண்ணிக்கை 3000 மட்டுமே. அதில் 90% வடக்குக் கென்யாவின் சம்புரு (Samburu), மார்சாபிட் (Marcabit), இசியோலோ (Isiolo), மெரு (Meru), லைகிபியா (Laikipia)போன்ற மாவட்டஙகளில் வாழ்கின்றன. ஆங்காங்கே சில காப்பிடங்களில் மீதி 10% கிரேவி ஜீப்ராக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

கென்யாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகப் பார்ப்பது சில பகுதிகளைத்தான். மசாய் மாரா காட்டுமான்களின் இடப்பெயர்வு காட்சி, அம்போசெலி யானைக்கூட்டம் கிளிமஞ்சாரோவின் மலைத்தொடரில படர்ந்திருக்கும் பனிப்போர்வைகளால் சூழப்பட்ட அழகான காட்சி, ரிஃப்ட் பள்ளத்தாக்கு ஏரிகளில் கூட்டமாகக் கூடியிருக்கும் ஃப்ளெமிங்கோ (Flemingo) பறவைகள் போன்றவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் சம்புரு (Samburu), ரெண்டிலே (Rendille), டுர்கானா (Turkana) போன்ற பழங்குடி மக்கள் வாழும் வடக்கு கென்யாவின் இந்தப் பகுதிகள் பெரும்பாலும் வேட்டைக்காரர்களைத் தவிர மற்றவர் கண்களுக்குப் பட்டதில்லை. இந்த மூன்று பழங்குடியினங்களின் வாழ்வும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

வரலாற்றின்படி இந்த மூன்று இனத்தவர்களும் வடக்கு கென்யாவின் வன விலங்குகளுடன்  நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர்கள். இவர்கள் அரை மேய்ச்சல்வாதிகள் (Semi-Pastoralists). அப்பகுதியில் மட்டுமே காணக்கூடிய கால்நடைகளை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவை அப்பகுதியின் மோசமான தட்பவெப்பநிலையிலும் இயல்பாகத் தகவமைத்துக் கொள்ளும் திறன்கொண்டவை. அந்த மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக இவர்கள் ஒரே பகுதியை வைத்திருந்ததில்லை. தொடர்ச்சியாக இடம்மாறிக் கொண்டேயிருந்தனர். புதுப்புது நிலப்பகுதிகளைத் தேடிச் சென்றுகொண்டேயிருந்தனர். அதன்மூலம் முன்பு பயன்படுத்தப்பட்ட நிலங்கள் புத்துயிர்பெற அவகாசம் கொடுத்தனர்.

கிரேவி ஜீப்ரா

கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்கள் பாரம்பர்யமான இயற்கையைப் புதுப்பிக்கும் கலாச்சாரத்தைத் தவிர்த்து, சூழலியல் சமநிலை ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை மறந்து வாழத் தொடங்கிவிட்டனர். ஒரே இடத்தில் வாழ்ந்து ஒரே பகுதியில் மாடுகளையும் மற்ற கால்நடைகளையும் வளர்க்கத் தொடங்கினர். தொடர்ச்சியான மேய்ச்சலும், மாறிக்கொண்டேயிருந்த காலநிலையும் அவர்களின் நிலங்களைத் தரிசாக்கத் தொடங்கின. கென்யாவில் அதுவும் அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே வாழ்பவைதான் கிரேவி ஜீப்ராக்கள். பழங்குடிகள் பல்வேறு கிராமங்களாகப் பிரிந்து ஆங்காங்கே தங்களுக்கான மேய்ச்சல் நிலங்களை வகுத்துக்கொண்டு ஒரே பகுதியில் வாழத்தொடங்கிவிட்டதால் ஜீப்ராக்கள் குறுகிய மேய்ச்சல் பகுதியையே பயன்படுத்திக் கொள்ளவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டன. இறுதியில் ஜீப்ராக்களின் எண்ணிக்கையும் போதிய வாழிடமின்மையால் அதிகமாகக் குறைந்தன. பழங்குடிகளின் கால்நடைகளும் தரிசாகிவிட்ட மேய்ச்சல் நிலங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அத்தோடு முற்றிலுமாக வறண்டுவிட்ட வடக்கு கென்யாவில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வறட்சிக்கான காரணங்கள் உள்ளூரைச் சேர்ந்த சிலரால் ஆராயப்பட்டது. உள்ளூரைச் சேர்ந்த சிலர் இணைந்து கிரேவி ஜீப்ரா அறக்கட்டளையை (Grevy Zebra Trust) 2007-ம் ஆண்டு தொடங்கினர். நீண்டகாலத்திற்கு ஏற்றவாறான நிலப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மக்களின் வாழ்க்கைமுறைய மாற்ற அவர்கள் முயற்சி செய்தனர். அவர்கள் தங்கள் கலாசாரத்தை, இயற்கையோடு இயைந்த வாழ்வை மீட்டெடுக்க முயன்றனர். அங்கு வாழ்ந்த பழங்குடிகளையே பணிக்கு அமர்த்திக்கொண்டார்கள். கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தும் நிலப்பகுதிகளையும், ஜீப்ராக்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் கண்காணித்தனர். இதன்மூலம் நீண்டகால பயன்பாட்டிற்கான இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க முனைந்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான திரு.அலெக்ஸ் டுட்லே (Alec Dudley) தற்போது கென்யாவில் தங்கி ஜீப்ராக்களுக்காக வடக்கு கென்யா பழங்குடியின மக்கள் மாற்றிவரும் வாழ்க்கைமுறை அதனால் விளைந்துள்ள நன்மைகளைப் பதிவுசெய்து கொண்டிருக்கிறார்.

கென்யா

ஆலன் சவோரி என்ற சூழலியலாளரின் கூற்றுப்படி சிறப்பான கால்நடை பராமரிப்பிற்கும் அவற்றின் மூலம் நன்மை பயப்பதற்கும் இடம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதுமட்டுன்மின்றி கால்நடைகள், ஜீப்ராக்கள் என்று மேய்ச்சல் நிலங்களை மாறி மாறிப் பயன்படுத்தும்போது அந்நிலப் பகுதிக்கு நன்றாக உரமூட்டிப் பண்பட வைத்துவிடும் என்கிறார் அலெக்ஸ் டுட்லே. அதை மீண்டும் ஜீப்ராக்கள் பயன்படுத்தும் அவை விட்டுச் சென்றபின் மீண்டும் மக்க, என்று சுழற்சிமுறையில் விலங்குகளும் மனிதர்களும் நிலங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டுமென்கிறார் அலெக்ஸ். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சொந்தமாக்கி வாழ்வதென்பது மேய்ச்சல்வாதிகளின் வாழ்க்கைமுறை இல்லை. தொடர்ச்சியான மேய்ச்சல் நிலங்களைத் தரிசாக்கிவிடும், அங்கு மீண்டும் புற்களே வளராது. அவை வளர்வதற்கான அவகாசம் அங்கே கொடுக்கப்படாமல் போவதால் ஏற்படும் விளைவு இது. ஆகவேதான் மேய்ச்சல்வாதிகள் தொடர்ச்சியாக இடம்மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

கிரேவி ஜீப்ரா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் வெஸ்ட்கேட், கலாமா, நமுன்யாக் போன்ற பகுதிகளில் இதைப் போன்ற நிலங்களைப் பராமரித்து வருகிறார்கள். அதன்மூலம் கால்நடைகளுக்கும், ஜீப்ராக்களுக்குமான மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கிறார்கள். புற்களின் அளவு குறையும்போதே இந்தப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் தடைவிதிக்கப்படுகின்றது. மீண்டும் நிலை மாறும்போது தடை நீக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பழங்குடியினத் தலைவர்களின் குழு கூட்டப்பட்டு அறக்கட்டளை சார்பில் அவரவர்களுக்கான மேய்ச்சல் நிலப்பகுதிகளும், விலங்குகளுக்கான நீர்நிலைகளும் ஒதுக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு கென்யாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போதுதான் இந்த முயற்சிகளின் பயன்களைப் பற்றி மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது, கடுமையான வறட்சியால் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், சில பகுதிகளில் தேவைக்கு அதிகமான புற்கள் வளர்ந்திருந்தன. அது அப்பகுதியில் வாழ்பவர்களுக்குத் தேவையானதுபோக அதிகமாகவே இருந்தது. இது பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்க உதவியது. அத்தோடு அவதிப்பட்ட ஜீப்ராக்களுக்கு இடமளித்ததோடு அவை சுதந்திரமாக பழகுவதற்காக அவற்றோடு தங்கள் கால்நடைகளையும் சுதந்திரமாகத் திறந்துவிட்டனர். இது கிரேவி ஜீப்ராக்களை அந்த மக்களின் பகுதிக்குள் வந்து மேய்ந்துகொள்ளவும், அவர்களின் கால்நடைகளோடு இணைந்து மேயவும் உதவியது. இப்போது ஜீப்ராக்களும் அப்பகுதியின் பழங்குடி மக்களும் ஒருவருக்கொருவர் இணைந்தே வாழ்ந்துவருகின்றனர். இதனால், எண்ணிக்கையில் தொடர்ச்சியாகக் குறைந்துவந்த கிரேவி ஜீப்ராக்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 2500 ஆக் இருந்தது. தற்போது அங்கு மட்டுமே அவை 3000 வாழ்கின்றன. இதற்குக் காரணம் அந்த மக்கள் தங்கள் நிலப்பகுதியையும் அதில் வாழும் விலங்கையும் புரிந்துகொண்டதே.

கிரேவி ஜீப்ரா அறக்கட்டளை

Photo Courtesy: James Warwicky

தற்போது அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் புற்களுக்கான விதைகளைச் சேகரித்து வருகிறார்கள். வறட்சிக் காலங்களில் தாமே செயற்கையாக வளர்ப்பதற்காக. அத்தோடு உணவுத் தட்டுப்பாட்டால் சிரமப்படும் ஜீப்ராக்களுக்காக அவர்களே புற்கட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் பள்ளிக் குழந்தைகளையும், பழங்குடிக் குழந்தைகளையும்கூட இணைத்து கல்வியாகவும் போதித்து வருகின்றனர். அத்தோடு சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தடுப்பதிலும், அவர்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்பு உணர்வு செய்வதிலும்கூட முனைந்துள்ளனர் கிரேவி ஜீப்ரா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள். ஜீப்ராக்களைத் தங்களோடு சேர்த்து வாழ வைப்பது மட்டுமின்றி அவற்றின் எண்ணிக்கை, நடவடிக்கைகள், தேவைகளைக் கண்காணிப்பதிலும் பழங்குடியின மக்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். வாம்பா (Wamba) என்ற பகுதியில் 29 குழுக்கள் இதைப்போல் கண்காணித்து வருகின்றனர். அதில் அதிகமான எண்ணிக்கையிலிருப்பது பெண்களே. அதிலும் அதிகமாக இருப்பவர்கள் விதவைகளும், சிங்கிள் மதர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பழங்குடியின மக்கள் கலாச்சாரமென்ற பெயரில் பிற்போக்குத்தனமாகச் செயல்படாமல், முற்போக்குச் சிந்தனைகளுடன் நடந்துகொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு வாழும் ஒவ்வொரு பழங்குடியினத்திலிருந்தும் ஜீப்பராக்களுக்காக ஒரு தூதரை (Zebra Ambassadors) நியமித்துள்ளார்கள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்.

99 சதவிகித கிரேவி ஜீப்ராக்கள் தேசியப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றிற்கு வெளியே பாதுகாப்பில்லாமலே வாழ்ந்து வருகின்றன. பல நூறு வருடங்களாக விலங்குகளோடு இணக்கமாக வாழ்ந்துவரும் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் கையில்தான் அந்த விலங்குகளின் பாதுகாப்பும் உறைந்துள்ளது. அந்தப் பழங்குடியின மக்களும் தங்களுக்குள்ளிருந்த வேறுபாடுகளை மறந்து, பொறுப்புணர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

மேய்ச்சல் நிலம்

Photo Courtesy: James Warwicky

தங்களை நாகரிகமானவர்களாகக் காட்டிக்கொள்ளும் நகர மக்களைவிட ஜீப்ராக்களைக் காப்பாற்றத் தங்கள் வாழ்க்கைமுறையையே மாற்றிக்கொண்ட இந்தப் பழங்குடிகள் நிச்சயம் மேன்மையானவர்களே.


டிரெண்டிங் @ விகடன்