ஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்! | Simple money habits that will help you build wealth

வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (31/07/2018)

கடைசி தொடர்பு:11:54 (31/07/2018)

ஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்!

பணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

வேலையோ, சொந்தத் தொழிலோ அல்லது பிசினஸோ எந்த வகையில் பணம் ஈட்டினாலும், அதைப் பல மடங்காகப் பெருக சில புத்திசாலித்தனமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாலே போதும், செல்வத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள். உண்மையில் சொல்லப்போனால் பழக்க வழக்கங்கள்தாம் செல்வம், வறுமை, மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான நல்லுறவு மற்றும் பகை போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

முதலீடு

அப்படிப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் 10 பழக்க வழக்கங்கள் இங்கே...

1) உங்களது சேமிப்பு, மாதாந்திரக் கட்டணங்களை ஆட்டோமேஷன் ஆக்குங்கள்

உங்களது எஸ்ஐபி முறையிலான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, வங்கி சேமிப்பு, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற எந்த வகையிலான சேமிப்பு, முதலீடுகளுக்கு உங்களது வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை, ( ECS போன்று) குறிப்பிட்ட கணக்குக்குத் தானாகவே பணம் செல்லுமாறு ஆட்டோமேஷன் செய்து விடுங்கள். இதுவரை அப்படிச் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அதைச் செய்து விடுங்கள்.

மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், அவ்வாறு பணப் பிடித்தம் செய்யும்போது உங்களுக்கும் அந்த முதலீடு அல்லது சேமிப்பு மீது அக்கறை இருக்கும். தாமதத்துக்காக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவேனும் போதுமான பணத்தை உங்கள் கணக்கில் விட்டு வைக்கும் பழக்கம் வந்துவிடும். மேலும் இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.

2) டீ, சிகரெட் போன்ற சில்லறைச் செலவுகளில் கவனம்

அலுவலகம் வந்த பின்னர் வெளியே தேநீர் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்துவதாக இருந்தால், நாளொன்றுக்கு 2 அல்லது அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதுவுமே வேலைப் பளு அல்லது வேலையால் ஏற்படுகிற சலிப்பு போன்றவற்றிலிருந்து `ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக மட்டும்' என்ற அளவிலேயே இருக்கட்டும் ( அறவே இப்பழக்கம் இல்லாமல் இருந்தால் அது இன்னமும் உத்தமம்). அதிக முறை தேநீர் அருந்தும் மற்றும் சிகரெட் புகைக்கும் பழக்கம் உங்களது பணத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடும். நாளொன்றுக்கு, கூடுதலாக 50 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, மாதத்துக்கு ரூ.1,500, வருடத்துக்கு ரூ. 18,000. இதையே வருடத்துக்கு 10 சதவிகிதம் லாபம் தரக்கூடிய நிதித் திட்டங்களில் சுமார் 30 அல்லது 40 வருடங்களுக்கு முதலீடு செய்தால், அது உங்களது மகன் அல்லது மகளின் உயர் கல்வி செலவுக்கோ அல்லது அவர்களின் திருமணச் செலவுக்கோ மிகவும் கைகொடுக்கும்.

சில்லறை செலவுகளில் கவனம்

3) எதிர்பாராமல் கிடைக்கும் பணத்தைச் சேமியுங்கள்

பிறந்த நாள் பரிசு, சம்பள போனஸ், அரியர்ஸ், பரம்பரைச் சொத்து விற்பது அல்லது பாகப்பிரிவினை மூலமாகக் கிடைக்கும் பணம் போன்று எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும் பணத்தைச் செலவழித்து விடாதீர்கள். அது எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் எதிர்பாராத செலவினங்களுக்காகவோ, மருத்துவச் செலவுக்காகவோ ஒதுக்கி வையுங்கள். அல்லது ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்ற வட்டிச் செலுத்தக் கூடிய கடன் ஏதேனும் இருந்தால், குறைந்தபட்சம் அதை அடைக்கவாவது அந்தத் தொகையைப் பயன்படுத்துங்கள்.

4) பணக்காரர் ஆகும் தகுதி உள்ளதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்

பணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

நம்மில் பலர், ``பணக்காரர் ஆவதற்கு நானெல்லாம் தகுதியே இல்லாத ஆள்... நானெல்லாம் அதை நினைத்தே பார்க்க முடியாது..." என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், அதுபோன்று சொல்வதை விட்டு, ``நான் ஏன் பணக்காரர் ஆகக் கூடாது?" என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்களெல்லாம் செய்தது இதைத்தான்.

5) எஞ்சிய பணத்தை முதலீடு செய்யுங்கள்

உங்களது செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை, அது 500 அல்லது 1,000 ரூபாய் என மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட அதனை முதலீடு செய்யுங்கள். ஏனெனில் சிறிய தொகை முதலீடு கூட, கூட்டுவட்டி முறையில் நாளடைவில் பெரிய தொகையாகச் சேர்ந்து உங்களை ஆச்சர்யப்படுத்திவிடும். பெரும்பாலானோர் நினைப்பது போல முதலீட்டைத் தொடங்குவதற்கு பெரிய தொகையெல்லாம் தேவையில்லை. மைக்ரோ முதலீட்டுக்கென்றே பல ஆப்ஸ்கள் இப்போது உள்ளன. அதில் ஒன்றை டவுன்லோடு செய்து எளிய முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.

6)  எவ்வளவு பணம் தேவை என இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

நம்மில் பலர் தமது தேவை என்னவென்றே அறியாமல் அல்லது சொல்லத் தெரியாமல் இருக்கின்றனர். எனவே, உங்களது தேவைகள் என்னவென்பதை சொல்லிப் பழகுங்கள். அப்படியான பழக்கம் இருந்தால்தான் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதையும் சொல்லி, அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அதாவது நமது ஆண்டு வருமானம் அல்லது சொத்து எவ்வளவு சேர்க்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டு செயலாற்ற முடியும். அதே சமயம் இலக்குகளை நிர்ணயிப்பதில் சாத்தியமானவற்றை நிர்ணயித்து, பின்னர் மெள்ள மெள்ள இலக்குகளை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.

முதலீடு

7) உங்கள் கடிகார அலாரம் முன்கூட்டியே அடிக்கட்டும்

வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், பணக்காரர்களெல்லாம் நேரத்தின் அருமை உணர்ந்து, அதனை உபயோகமாகப் பயன்படுத்தி, தங்களது லட்சியங்களை நிறைவேற்றியவர்கள். எனவே, பணக்காரர் ஆவதற்கான உழைப்புக்கான நேரத்தைச் செலவிடவும், திட்டமிடவும் அன்றைய நாளின் தொடக்கத்தை அதிகாலையிலேயே, குறைந்தபட்சம் காலை 5 மணிக்காவது தொடங்கிடுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர் சூரிய உதயத்துக்கு முன்னர் கண் விழித்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் 3 மணி நேரத்துக்கு முன்னரே தங்கள் பணிகளைத் தொடங்கி விடுபவர்களாக இருப்பார்கள்.

8) உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்

உங்களது வங்கிக் கணக்கில் அல்லது பணப்பெட்டியில் வந்து சேரும் பணத்தைக் காட்டிலும் அதிகமான தொகை வெளியேறிக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகும் லட்சியத்தை அடைய முடியாது. எனவே, உங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணித்து, அநாவசியமான செலவுகளுக்குக் கட்டாயம் 'நோ' சொல்லிப் பழகுங்கள்.

9) அதிக வட்டிக் கடனை வைத்திருக்காதீர்கள்

அனைத்து வகையான கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதம் கொண்டவையாக அல்லது வட்டியே இல்லாததாகவும் இருக்கும். எனவே, அதிக வட்டிகொண்ட கடன் ஏதேனும் இருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனை விரைவாகக் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுங்கள். பின்னர் படிப்படியாக அனைத்துக் கடன்களையும் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடன் இருக்கும் வரை முதலீடோ அல்லது சேமிப்போ செய்ய முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை ஒழித்துக் கட்டுங்கள்.

10) வெற்றியாளர்கள், அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும்

பணக்காரர் ஆக வேண்டும் என்ற உங்களது லட்சியம் ஒருபுறம் இருந்தாலும், அதனைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் வெற்றியாளர்கள் மற்றும் அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களிடையே இருப்பது நீங்களும் வெற்றியாளராகவும், அதிகம் சம்பாதிப்பவராகவும் மாற உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அப்படியான நபர்கள் உங்களுக்கு அருகில் இல்லையென்றால், அதுபோன்ற நபர்கள் வரும் க்ளப்பில் சேருங்கள். அல்லது நகரில் அவர்கள் வரும் உயர்தரமான ஓட்டலுக்கு மாதம் ஒருமுறை, குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தவாவது செல்லுங்கள். அப்படிச் செல்வது அதுபோன்ற நபர்கள் புழங்கும் இடம், சூழல் ரீதியாக உங்களை அந்நியமாக்காது. அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்.

வெற்றியாளர்களைச் சுற்றி இருங்கள்....

கடைசியாக ஒன்று... மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் படிப்பதோடு விட்டுவிடாமல், செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் பணக்காரர் ஆவது சாத்தியமான ஒன்றே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close