வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (01/08/2018)

கடைசி தொடர்பு:16:38 (01/08/2018)

இனோவா, எர்டிகாவுக்குப் போட்டியாக வருகிறது மஹிந்திரா மராட்ஸோ!

இனோவா, எர்டிகாவுக்குப் போட்டியாக வருகிறது மஹிந்திரா மராட்ஸோ!

வெகுகாலமாக டெஸ்டிங்கில் இருக்கும் மஹிந்திராவின் U321 காருக்கு மராட்ஸோ என்று பெயர் வைத்துள்ளார்கள். மராட்ஸோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் சுரா என்று அர்த்தமாம். இந்தப் பெயருக்கு காரணம் மராட்ஸோ சுராவின் உடலமைப்பை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டதாம். மஹிந்திராவின் வழக்கப்படி 'ஓ'-வில் முடியும் பெயர் கிடைத்துவிட்டது.

மஹிந்திரா மராட்ஸோவின் சுரா ஆன்டெனா

 ப்ரீமியம் எம்பிவி காரான இதை மஹிந்திராவின் அமெரிக்க டெக்னிக்கல் சென்டரில் வடிவமைத்துள்ளார்கள். இந்த காருக்கான வடிவமைப்புகளில் மஹிந்திராவின் இந்திய டிசைன் ஸ்டூடியோவும், பின்னின்ஃபரினாவும் கூட சேர்ந்து உழைத்துள்ளது. பெயர் வைக்கும் விழா மட்டுமே இப்போது முடிந்துள்ளது. இந்தக் காரை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்கள்.

சுரா கண் போன்ற பனி விளக்குகள்

7 மற்றும் 8 சீட் வேரியன்டுகளில் வரவிருக்கிறது. ஏற்கெனவே பலமுறை இக்காரைப் பற்றி எழுதியுள்ளோம். ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, தற்போது இருக்கும் சைலோவைவிட மராட்ஸோவின் நீளம் அதிகம். இதனால், கடைசி வரிசையில் அதிக இடவசதி இருக்கும். படங்களில் பார்க்கும்போது ப்ரீமியம் என்ற பெயருக்கு ஏற்றவாறு பீஜ் நிற இன்டீர்யர்களைக் கொடுத்துள்ளார்கள்.

மராட்ஸோவின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

டேஷ்போர்டில் பியானோ பிளாக் நிறம், இரட்டை டயல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் ரூஃப் ஏசி என ப்ரீமியம் அம்சங்கள் என விலை உயர்ந்த காருக்குத் தேவையான எல்லாமே உள்ளது. ஆன்டிராய்டு ஆட்டோ-ஆப்பிள் கார்பிளே வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமெடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரெஜக்டர் ஹெட்லைட் மற்றும் DRL போன்றவை கட்டாயமாக காரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

ரூஃப் ஏசி

மராட்ஸோவில் 121bhp பவர் மற்றும் 300Nm டார்க் உருவாக்கும் மஹிந்திராவின் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வரவுள்ளது. இதற்கு கூட்டணியாக 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வருகிறது. ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது. மராட்ஸோ, தற்போது விற்பனையில் இருக்கும் சைலோவுக்கு மாற்றாக வரவில்லை என்று இந்நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கா கூறியுள்ளார்.

ப்ரீமியம் எம்பிவி என்பதால் ஸ்பேஸ் முன்பை விட அதிகம்

மாருதியின் இரண்டாம் தலைமுறை எர்டிகா தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், போட்டியாக மராட்ஸோவும் இதே சமயத்தில் வரவுள்ளது. இந்த இரண்டும் எம்பிவிகளின் வருகையும் செக்மன்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் இனோவா க்ரிஸ்டாவின் விற்பனையை அசைத்துப் பார்க்குமா?