வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (01/08/2018)

கடைசி தொடர்பு:18:05 (01/08/2018)

``சிம்பிள்...கழுதைக்கு பெயின்ட் அடிச்சா வரிக்குதிரை!” - ஏமாற்றிய உயிரியல் பூங்கா

மேற்கொண்ட விசாரணையில் பூங்காவில் இருந்த வரிக் குதிரை இறந்து விட்டதால் அதற்குப் பதிலாக கழுதைக்குக் கறுப்பு பெயின்ட் அடித்து வரிக் குதிரையாக மாற்றியிருப்பது தெரிய வந்தது.

``சிம்பிள்...கழுதைக்கு பெயின்ட் அடிச்சா வரிக்குதிரை!” - ஏமாற்றிய உயிரியல் பூங்கா

கிப்து நாட்டின் தலைநகரமான கைரோவில் உள்ளது சர்வதேச உயிரியல் பூங்கா. பல விலங்குகளும் அங்கு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வழக்கம் போல கடந்த ஜூலை மாதம் 21 தேதி மக்கள் பார்வைக்குத் திறந்திருந்த பூங்காவுக்கு மஹமூத் சர்ஹான் என்பவர் சென்றிருந்தார். ஒவ்வொரு விலங்குகளாகப் பார்த்துக் கொண்டே வந்தவர் வரிக்குதிரை இருந்த இடத்துக்கு வந்து வரிக் குதிரையைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், வரிக் குதிரையின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சர்ஹான் அதை உற்று நோக்க ஆரம்பித்தார். அது வரிக் குதிரை அல்ல கழுதை என்பதை உறுதி செய்த சர்ஹான் உயிரியல் பூங்காவில் இருந்த ஊழியரான முகமது சுல்தான் என்பவரிடம் முறையிட்டார். ஆனால், அவரோ அது வரிக்குதிரைதான் எனச் சொல்லி சமாளித்து அனுப்பிவிட்டார். பிறகு சர்ஹான் அங்கிருந்த மற்ற விலங்குகளையும் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். 

வரிக்குதிரையாக மாறிய கழுதை

அன்றைய இரவு எகிப்திய நேரப்படி இரவு ஏழு மணிக்கு சர்ஹான் உயிரியல் பூங்காவில் தான் பார்த்த வரிக் குதிரையின் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்து இப்படி எழுதினார். ``உயிரியல் பூங்காவில் வரிக் குதிரையைப் பார்த்தேன், அதன் நடவடிக்கையில் சந்தேகமடைந்து கவனித்துப் பார்த்ததில் கழுதைக்கு பெயின்ட் அடித்து வரிக் குதிரையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்” எனப் பதிவிட்டார். புகைப்படம் அடுத்த நொடியே வைரலானது. அப்போதும் பூங்கா நிர்வாகம் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. 

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பூங்காவில் இருந்த வரிக் குதிரை இறந்து விட்டதால் அதற்குப் பதிலாக கழுதைக்குக் கறுப்பு பெயின்ட் அடித்து வரிக் குதிரையாக மாற்றியிருப்பது தெரிய வந்தது. வரிக் குதிரை இறந்ததற்கும் பின்னாலும் ஒரு காரணமிருக்கிறது. வரிக் குதிரைகள் சாப்பிடுகிற உணவை வேகமாகச் செரிமானம் செய்துவிடக் கூடிய உயிரினம். அதனால் அதற்கு மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிக உணவு தேவைப்படும். இன்னொரு பிரச்னை வரிக் குதிரைகள் எப்போதும் சாப்பிட்டு கொண்டேயிருக்கும். வரிக் குதிரை 600 கிலோ வரை எடை கொண்டவை. அதற்கு ஒரு நாளைக்கு 10 கிலோ தானியமும், 20 கிலோ வைக்கோலும் சாப்பிட கொடுக்க வேண்டும்.  அப்படிப் பார்த்தால் ஒரு வரிக் குதிரைக்கு வாரத்துக்கு 210 கிலோ உணவு வழங்க வேண்டும். இன்னும் சற்று பெரிய வரிக் குதிரையாக இருந்தால் உணவின் அளவு மாறுபடும். சம்பாதிக்கிற பணத்தை வரிக் குதிரையின் வயிற்றுக்கே கொடுக்க வேண்டும் என்கிற விரக்தியில் பூங்கா நிர்வாகம் பட்டினி போட்டே கொலை செய்திருக்கலாம் என America’s Teaching Zoo at Moorpark College சேர்ந்த பேராசிரியர் கேரி வில்லியம்சன் குற்றம் சாட்டியிருக்கிறார். 

காஸா கழுதை

இதற்கு முன்பாக காஸாவைச் சேர்ந்த உயிரியல் பூங்கா ஒன்று இதே போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்டது. காஸாவைச் சேர்ந்த மாரா லேண்ட் உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு வரிக் குதிரைகள் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம்  இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது கொல்லப்பட்டன. வரிக் குதிரைகள் இறந்து போனதும் வேறு வரிக் குதிரைகள் வாங்குவதற்குப் பூங்காவின் உரிமையாளர் முகம்மது என்பவரிடம்  பணமில்லாமல் போனது. அப்படியே பணத்தைப் புரட்டி வரிக் குதிரை வாங்க முயற்சி செய்தாலும் இஸ்ரேல் பிளவுபட்டிருப்பதால் காஸாவுக்கு வரிக் குதிரைகளை கொண்டு வரவும் முடியாது. வேறு வழியின்றி இரண்டு கழுதைகளுக்கு பெயின்ட் அடித்து வரிக் குதிரை எனச் சொல்லி ஏமாற்றி பிறகு மாட்டிக் கொண்டார். இதெல்லாம் பரவாயில்லை சீனாவில் ஒரு பூங்கா உரிமையாளர் சிங்கம் என்று சொல்லி ஒரு நாயைக் கூண்டில் அடைத்து காசு பார்த்த கதையெல்லாம் இருக்கு பாஸு! 

இப்படியே போனால் பூங்காவுக்கு வேடிக்கை பார்க்க வருகிறவர்களைப் பிடித்து உள்ளே போட்டு கொரில்லானு சொன்னாலும் சொல்லுவாய்ங்க…


டிரெண்டிங் @ விகடன்