வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (01/08/2018)

கடைசி தொடர்பு:21:20 (01/08/2018)

`புதிய டிசைனில் டட்ஸன் கார்கள், அடுத்த ஆண்டில் வெளிவரும்' - நிஸான் அறிவிப்பு!

தனது பட்ஜெட் இமேஜைத் துடைத்தெறிந்து, டிரெண்டுக்கு ஏற்ப மாடர்ன் கார்களை வடிவமைக்க டட்ஸன் முடிவெடுத்திருக்கிறது.

டட்ஸன்... ஃப்னீக்ஸ் பறவைபோல மீண்டு வந்த நிறுவனம் இது. 2013-ம் ஆண்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை உலகளவில் துவக்கிய இந்த நிறுவனம், அந்தச் சூட்டோடு இந்தியாவில் களமிறக்கிய ஹேட்ச்பேக்தான் கோ. பின்னர் இதே காரை அடிப்படையாகக் கொண்டு, இதே நிறுவனம் 2014-ம் ஆண்டில் கோ ப்ளஸ் எம்பிவியை அறிமுகப்படுத்தியது. பின்னர் மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்குச் சவால்விடும் படியாக, 2016-ம் ஆண்டில் ரெடி-கோ காரை வெளியிட்டது டட்ஸன். இது எல்லாமே 'பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்' படியான டிசைனைக் கொண்டிருப்பதால், போட்டியாளர்களைவிடக் குறைவான விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கொண்டிருந்தும், அந்த நிறுவனம் எதிர்பார்த்த வரவேற்பை இந்தக் கார்கள் பெறவில்லை என்பது முரண். 

டட்ஸன்

எனவே, தனது பட்ஜெட் இமேஜைத் துடைத்தெறிந்து,  டிரெண்டுக்கு ஏற்ப மாடர்ன் கார்களை வடிவமைக்க டட்ஸன் முடிவெடுத்திருக்கிறது. சர்வதேச கார் சந்தையில் இருக்கும் மாடல்களைப் போல, டட்ஸன் கார்களை ஸ்டைலாக மாற்றவிருக்கும் பணியை, நிஸான் நிறுவனத்தின் டிசைன் பிரிவு இயக்குநரான அல்ஃபோன்ஸோ அல்பைஸா (Alfonso Albaisa) மேற்கொள்ளவிருக்கிறார். கார் டிசைனில் ஆர்வமாக இருக்கும் பள்ளி மாணர்வர்களுக்குப் பயிற்சியளிக்கக்கூடிய 'Roots Of Design' அமைப்பை சென்னையில் நிறுவுவதற்காக வந்திருந்த இவர், மோட்டார் விகடனிடம் டட்ஸனின் எதிர்காலம் குறித்து மனம் திறந்துப் பேசினார். அது இங்கே அப்படியே! இந்தோனேசியாவில் அறிமுகமான கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பேஸ்லிஃப்ட் மாடல்கள், இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டட்ஸன்

'டட்ஸனின் டிசைன் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வெளியே இருந்து பார்க்கும்போது தெரியாவிட்டாலும், புதிய ப்ளாட்ஃபார்ம்தான் இதற்கான மூலக்காரணி. எனவே, அடுத்த ஆண்டில் புதிய 'Dynamic Purity' டிசைனுடன் புதிய ஃப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட கார்களை நீங்கள் பார்க்கமுடியும். இவை முன்பைவிட அதிக இடவசதி மற்றும் பாதுகாப்பு, குறைவான எடை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால், டட்ஸன் நிறுவனத்தின் வரலாறுக்கு (240Z/Fairlady) ஏற்றபடியான கார்களாக அவை இருக்கும் என என்னால் உறுதிபடச் சொல்லமுடியும்' என்றார். அநேகமாக இது கோ க்ராஸ் காராக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்!. மேலும், போர்ஷே 911 சீரிஸ் கார்களுக்குப் போட்டியாகப் புதிய GT-R மற்றும் டொயோட்டா சுப்ராவுக்குப் போட்டியாகப் புதிய 370Z ஆகிய கார்களையும் அறிமுகப்படுத்தும் முடிவில் நிஸான் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க