ரெனோ க்விட்டுக்கு போட்டியாக மைக்ரோ எஸ்.யூ.வி.... களத்தில் ஹூண்டாய்!

'மாருதி சுஸூகி Future S-க்குப் போட்டியாக ஒரு மைக்ரோ எஸ்யூவி' - ஹூண்டாய் அறிவிப்பு!

ரெனோ க்விட்டுக்கு போட்டியாக மைக்ரோ எஸ்.யூ.வி.... களத்தில் ஹூண்டாய்!

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மஹிந்திரா TUV 3OO ஆகிய 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, QXI எனும் அடைமொழியில் அழைக்கப்படும் இந்தக் காரை (கார்லினோ) ஹூண்டாய் களமிறக்க இருப்பது தெரிந்ததே. இந்நிலையில் இதற்கும் சிறிதாக ஒரு மைக்ரோ எஸ்யூவியையும், அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது. 

ஹூண்டாயின் எதிர்காலத் திட்டம் என்ன?

ஹூண்டாய்

இந்தியாவில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை வெளியிடும் முடிவில் ஹூண்டாய் நிறுவனம் இருந்தாலும், அதனை அறிவித்தபோது பட்டியலில் இந்த மைக்ரோ எஸ்யூவி அப்போது இல்லை. ஆனால், இப்போது இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவிகளுக்கு இருக்கும் வரவேற்பு மற்றும் போட்டியாளர்கள் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளது ஹூண்டாய். 

ஹூண்டாய்

அடுத்த ஆண்டில் மேம்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக, கூடுதல் இடம் தேவைப்படாமலேயே கார்களின் உற்பத்தி எண்ணிக்கையை வருடத்துக்கு 7.5 லட்சம் கார்களாக இந்த நிறுவனம் உயர்த்தும் முடிவில் இருக்கிறது. முதலில் சான்ட்ரோ - பின்னர் கார்லினோ (QXI) - இடையே எலான்ட்ரா மற்றும் டுஸானின் பேஸ்லிஃப்ட் மாடல்கள் - அடுத்தபடியாக வெர்னா ஃபேஸ்லிஃப்ட் - கடைசியாக மைக்ரோ எஸ்யூவி என்பதே ஹூண்டாயின் அடுத்த கட்ட பாய்ச்சலாக இருக்கும். கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஐயோனிக் ஹைபிரிட், நெக்ஸோ ஃப்யூல் செல் கார் ஆகியவை ஆச்சர்ய அறிமுகங்களாக இருக்கலாம். இதற்கெல்லாம் அதிக முதலீடு மற்றும் அதை உற்பத்தி செய்யக்கூடிய ப்ரொடெக்‌ஷன் லைன் தேவைப்படும்.  

ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவியை தயாரிக்க என்ன காரணம்?

ஹூண்டாய்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தனது போட்டியாளரான மாருதி சுஸூகி நிறுவனம் காட்சிபடுத்திய ஃப்யூச்சர் எஸ் (Future S) கான்செப்ட் காருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்துப் பார்க்கும்போது, ஹூண்டாயும் மைக்ரோ எஸ்யூவி செக்மென்ட்டில் கால் பதிப்பது ஏறக்குறைய உறுதி என்றே தோன்றுகிறது. Y1K என்ற சங்கேத பெயரைக் கொண்ட மாருதி சுஸூகியின் அந்த மைக்ரோ எஸ்யூவி, 2020-ம் ஆண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே, எஸ்யூவி செக்மென்ட்டில் க்ரெட்டா வாயிலாக அசூர வெற்றியைச் சுவைத்திருக்கும் ஹூண்டாய், மைக்ரோ எஸ்யூவி மூலம் அந்த செக்மென்ட்டில் தனது முன்னிலையை அதிகரித்துக் கொள்ளும் என நம்பலாம். ஏனெனில், ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் டாப்-10 கார்களில் இது தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது. மேலும் 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புக்கிங் எண்ணிக்கை, 40 ஆயிரம் கார்களைக் கடந்துவிட்டது மேலும் 20 ஆண்டுகளாக சென்னையில் கார்களை தயாரித்து, அதை இந்தியா முழுக்க விற்பனை மற்றும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் ஹூண்டாய், 8 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையிலான கார்களை இதுவரை உற்பத்தி செய்திருக்கிறது. 

ஹூண்டாய்

இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி என்ற செக்மென்ட் உருவாவதற்கு ரெனோ க்விட்தான் பிரதான காரணம் என்றால் அது மிகையில்லை. எனவே அந்த கார்தான், ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவிக்கு முதல் போட்டியாளராக இருக்கும். க்விட்டில் Easy-R என்ற பெயரில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பதுபோல, சான்ட்ரோவைத் தொடர்ந்து தனது மைக்ரோ எஸ்யூவியிலும் Smart Auto என்ற பெயரில் AMT கியர்பாக்ஸை ஹூண்டாய் பொருத்துவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. வருகின்ற  2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இந்த மாடலின் ப்ரோட்டோடைப்/கான்செப்ட் காட்சிபடுத்தப்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!