வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (01/08/2018)

கடைசி தொடர்பு:11:27 (06/08/2018)

”இந்தக் காட்டுக்கு நாய்தான் ராஜா!” - 6 நொடிகளில் ஒரு காரையே ஸ்கேன் செய்யும் நாய்

இப்பகுதியில் வரும் வாகனங்களும், ஆட்களும் கேஜ் போன்ற நாய்கள் இருக்கும்வரை ஆயுதங்களுடன் உள்ளே சென்றதாகவும், வெளியே பொருட்களை கடத்தியதாகவும் வரலாறு இல்லை. 

”இந்தக் காட்டுக்கு நாய்தான் ராஜா!” - 6 நொடிகளில் ஒரு காரையே ஸ்கேன் செய்யும் நாய்

து தென்மேற்குக் கென்யாவின் மாசாய் மாரா எனும் தேசிய வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதி. அப்பகுதிக்குள் செல்லும் ஒரு கார் திரும்பி வருகிறது. அந்தக் காரை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அவர்கள் சோதனை முடித்த நேரம் கேஜ் எனும் பெயர் கொண்ட லேப்ரடார் ரிட்ரைவர் (Labrador retriever) ரக நாய் ஒன்று மீண்டும் சோதனைக்காக வருகிறது. காரை முழுவதுமாக சோதனையிட்ட நாய் திடீரென காரின் அடிப்பாகத்திற்குள் நுழைகிறது. மீண்டும் வெளியே வந்த அந்த நாய் வாயில் சிறிய யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை எடுத்து வருகிறது. இதனால் அவ்வாகனமும், அதில் பயணம் செய்த ஆட்களும் சிறைபிடிக்கப்படுகிறார்கள். 

நாய் பயிற்சி

யானைத் தந்தத்தின் துண்டுப் பகுதியை கடத்தியவர்களுக்கு, காரின் அடிப்பகுதியில் யானைத்தந்தம் கடத்திச் செல்லப்படுவதை இந்த நாய் எப்படிக் கண்டுபிடித்தது என ஒரே ஆச்சர்யம். யானைத் தந்தத்தை கண்டுபிடிக்க நாய் எடுத்துக் கொண்டது வெறும் ஆறு வினாடிகள்தான். இதுதான் அந்த வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளின் பலம். அவர்கள் எப்போதும் கேஜ் போன்ற நாய்களைத்தான் அதிகமாக நம்புகிறார்கள். ஏனெனில் இதுபோல அதிகமான சம்பவங்கள் அப்பகுதியில் நடப்பது வழக்கம் என்பதால்தான். கேஜ் யானைத்தந்தம் மட்டுமல்ல, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் உள்பட எதையும் கவனமாக கண்டுபிடித்துவிடும். இப்பகுதியில் வரும் வாகனங்கள் கேஜ் போன்ற நாய்கள் இருக்கும்வரை ஆயுதங்களுடன் உள்ளே சென்றதாகவும், பொருட்களைக் கடத்தியதாகவும் வரலாறு இல்லை. 

"வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற பணியை மேற்கொள்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களும் குறைவுதான். அவ்வாறு இருக்கும் சிறிய குழுவினர்தான் அந்தக் காடு முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நுழைவு வாயில் தவிர, மீதம் இருக்கும் அனைத்துப் பகுதிகளையும் அவர்கள் கண்காணித்தாக வேண்டிய கட்டாயம். வனப்பகுதிக்குள் ஊடுருவும் ஆயுதம் தாங்கிய வேட்டைக்காரர்களையும் சமாளித்தாக வேண்டும். அதற்கு கேஜ் போன்ற நாய்கள்தான் சரியான தீர்வாக இருக்கும். அவைதான் தீவிரமாகக் கண்காணிக்கும் திறன் படைத்தவை. பல பெரிய இடர்பாடுகளிலும், அவற்றின் வேலையைச் சிறப்பாக செய்து முடிக்கின்றன. 

மாசாய் மாரா வனவிலங்குகளின் இருப்பிடத்திற்கு அதிகமாகப் புகழ்பெற்றது. சுமார் ஒரு மில்லியன் விலங்குகளுக்கு மேல் வசித்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான வேட்டைக்காரர்களால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அதனைத் தடுப்பதற்காக இப்போது அதிகாரிகளும், வேட்டைத்தடுப்பு நாய்களும் அதிகமான அளவில் செயல்பட்டு வருகின்றன" என்கிறார், மாரா வனவிலங்கு பாதுகாப்பு பகுதியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹீத். 
இப்பகுதியில் நாய்கள் இரண்டு குழுக்களாக அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றன. இவர்கள் நாய்களை நம்பியிருக்கக் காரணம், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே அதிகமாக ரத்தம் சிந்தியிருப்பதுதான். வேட்டையாடுபவர்கள் அதிகாரிகளைத் தாக்கும்போது கொடூரமாகச் செயல்பட்டு தாக்குவர்.

மாசா மாரா வனவிலங்கு பகுதி

எப்போதுமே ஆறு ஆய்வாளர்களுக்கு ஒரு நாய் என்ற அளவில் முகாம்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள், விடுதிகள் எனப் பல இடங்களில் சோதனை நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். 2009-ம் ஆண்டுதான் சொந்தமாக நாய்கள் வாங்கப்பட்டன. அதன் பின்னர்தான் பல குற்றச் செயல்கள் தடுக்கப்பட்டன. இவை வேட்டையாடுபவர்களைக் கண்டுபிடிக்க வனவிலங்கு அதிகாரிகள் கொடுக்கும் பயிற்சிகள்தான் காரணம். நாய்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்கும் முன்னர் வேட்டையாடுபவர்களின் கால்தடங்கள், அவர்களின் செயல்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக கண்காணித்தனர். அவர்களின் செயலுக்கு ஏற்ற வகையில் பயிற்சிக் கொடுக்கிறார்கள்.

அதேபோல இங்கிருக்கும் வனவிலங்குகளில் எதை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை முறையாகக் கண்டறிந்து அவற்றைக் கண்டுபிடிப்பது பற்றிய பயிற்சிகளையும் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறார்கள். இதன் பலனாகத்தான் ஆறு வினாடிகளில் காருக்கு அடிப்பகுதியில் இருக்கும் தந்தத்தை கண்டுபிடிக்கிறது. ஒரு குழுவில் இருக்கும் நாய் தொடர்ந்து முன்னேறிப் பயணிக்கும். தொலைவில் இருக்கும் ஆபத்தைத் தனது குழுவினருக்கு உடல் மொழியால் உணர்த்திவிடும். அதனைப் பின்பற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கவனமாக தனது பயணத்தை தொடர்வர். 

ஒருமுறை இரவில் வேட்டைக்காரர்கள் வனப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சிக்கிக் கொண்டார். மீதம் இருந்த அனைவரும் தப்பித்துவிட்டனர். அவர்களை ஒரு காவல் நாய் இரண்டு கி.மீ தொலைவுக்கு துரத்திச் சென்றிருக்கிறது. ஒருமுறை வரும் வேட்டைக்காரர்கள் பாதுகாப்பில் ஈடுபடும் நாய்களின் பார்வைபட்டால் அடுத்தமுறை வனப் பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க அவர்களுக்கு மனசே வராதாம். நாய்கள் வேட்டையாளர்களை தாக்கச் செல்லும்போது குரைத்துக் கொண்டு செல்லாதபடி பயிற்சி கொடுக்கப்படுகிறது. 

வேட்டைக்காக காத்திருக்கும் லேப்ரடார்

இதுபோக பயிற்சிக் குழுவில் இருக்கும் வீரர்களுடன் வேட்டைத்தடுப்பு நாய்கள் விளையாடுவதும் வழக்கமான ஒன்று. அப்போதுதான் நாய்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது அவர்களின் கருத்து. இதுவரை பயிற்சி நாய்கள் மூலமாக விலங்குகள் வேட்டையாடுபவர்கள் 200 பேரைப் பிடித்திருக்கிறார்கள், வனப்பகுதி அதிகாரிகள். நாய்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக அமெரிக்காவிலிருந்தும் அதிகாரிகள் வந்து செல்கிறார்கள்.