வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (02/08/2018)

கடைசி தொடர்பு:12:35 (02/08/2018)

விபத்து ஏற்பட்டால் காரின் இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு உதவும்?!

காரில் சென்று விபத்து ஏற்பட்டால், காரின் இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு உதவும்?

ஒருவர் தன் உழைப்பினால் சேமித்த பணத்தைக் கொண்டு, கார் வாங்கும்போது கிடைக்கும் பெருமிதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், அவர் தனக்கான இன்சூரன்ஸ் விஷயத்தில் காட்டும் அக்கறையை, தன் காரின்மீது காட்டுகிறாரா என்பது கேள்விக்குறியே! எனவே வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசென்ஸ் எவ்வளவு முக்கியமோ, அதேபோல நீங்கள் வைத்திருக்கும் எந்த வாகனத்துக்கும் இன்சூரன்ஸ் அவசியம். இன்னும் சொல்லப்போனால் ஆக்ஸசரீஸ் மற்றும் கோட்டிங் ஆகியவற்றைத் தாண்டி, இன்சூரன்ஸ்தான் உங்கள் புதிய வாகனத்துக்குத் தரக்கூடிய சிறந்த பரிசு!

கார் டீலர் சொல்லும் இன்சூரன்ஸ்தான் சிறந்தது என்றில்லை; Insurance Regulatory & Development Authority India (IRDAI) ஆணைப்படி, உங்கள் காருக்கு வேண்டிய இன்சூரன்ஸை, நீங்களே எடுத்துக்கொள்ளக்கூடிய முழு அதிகாரமும் உங்களுக்கு உண்டு. எனவே, விபத்து நேரத்தில் கார் இன்சூரன்ஸின் பங்கு குறித்த அடிப்படை விவரத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்.

உங்கள் காரை உங்களின் நண்பர் ஓட்டிச்சென்று, அப்போது ஏதேனும் விபத்து நேர்ந்தால்...

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்துக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தைக் கருத்தில் கொள்ளும்போது, விபத்துநேர சேதங்களுக்கு என கார் இன்சூரன்ஸில் க்ளெய்ம் செய்ய வழிவகை உண்டு. பெரும்பாலான கார் இன்சூரன்ஸ்களில் இந்த வசதி இருக்கிறது. இதன்படி உங்கள் நண்பர்தான் விபத்து நேரத்தில் டிரைவராக இருந்தாலும், Driver's Clause பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தால், காருக்கான சேதத்தைப் பொறுத்து க்ளெய்ம் வழங்கப்படும். 

லைசென்ஸ் இல்லாதவர், காரை எடுத்துச்சென்று விபத்து ஏற்படுத்தினால்...

Insurance

இந்திய மோட்டார் வாகனச் (1988) சட்டப்படி, முறையான ஆவணங்கள் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்டப்படி குற்றம். எனவே, கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாத ஒருவர் உங்கள் வாகனத்தை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்திவிட்டால், காரில் ஏற்பட்டிருக்கும் சேதத்துக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.  மேலும், இதுபோன்ற சூழலில் காரின் இன்சூரன்ஸ் பாலிஸியும் முன்கூட்டியே காலாவதியாகிவிடும். எனவே, லைசென்ஸ் இல்லாமல் புதிதாகக் கார் ஓட்டக் கற்றுக் கொள்பவர்கள், சரியாக கார் ஓட்டுபவரையோ/அந்த காரின் உரிமையாளரையோ உடன் வைத்துக்கொண்டு பயணிப்பது நலம்.

உங்கள் காரில் நீங்கள் ரேஸில் பங்கேற்றால்...

 

Insurance

 

ரேஸ் டிராக்கில் வேண்டுமானால், அதிவேகத்தில் ஒரு காரை மற்றொரு கார் முந்திச் செல்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கும்; ஆனால் அதுவே சாலையில் என்றால், உங்கள் பாதுகாப்புக்கும், உங்களைச் சுற்றியுள்ள மற்ற நபர்களுக்கும் அது பங்கம் விளைவிக்கும். எனவே உங்கள் காரில் சட்ட விரோதமான ரேஸ்கள் அல்லது தனியார் அமைப்பினர் நடத்தும் ராலிகள் ஆகியவற்றில் பங்கேற்று விபத்து ஏற்படுத்தினால், காரில் ஏற்பட்டிருக்கும் சேதத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் க்ளெய்ம் கொடுக்காது. 

புவியியல் வரம்பை மீறிச் சென்று, உங்கள் காரில் விபத்து ஏற்பட்டால்...

Insurance

 

ஒவ்வொரு கார் இன்சூரன்ஸுக்கும், புவியியல் வரம்பு உண்டு. அதாவது உங்கள் காரை நீங்கள் சென்னையில் வாங்கியிருந்தால், பெரும்பாலும் இந்தியா வரை மட்டுமே அந்த இன்சூரன்ஸ் செல்லுபடியாகும். எனவே, நீங்கள் வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்ல நேரிட்டாலோ அல்லது நீண்ட ரோடு ட்ரிப் செல்லும் ப்ளான் இருந்தாலோ, உங்கள் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இதுகுறித்துப் பேசிவிட்டு, பின்னர் பயணத்தை மேற்கொள்வது நல்லது.

 டிரைவர் உங்கள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினால்...

Insurance

 

விபத்து ஏற்பட்ட காரின் உரிமையாளராக இருப்பவருக்கு, அவரின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு, இன்சூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். ஒருவேளை உங்கள் காருக்கு நீங்கள் டிரைவர் வைத்திருந்து, அவரின் பெயர் காரின் பெர்சனல் இன்சூரன்ஸ் பாலிஸியில் இடம்பெற்றிருந்தால், அவர் காரில் விபத்து ஏற்படுத்தி காயம்பட்டிருந்தால், அவருக்கும் மருத்துவச் செலவுகளுக்கான க்ளெய்ம் கிடைக்கும். 

உங்களிடம் Third Party இன்சூரன்ஸ் இல்லாவிட்டால்...

 

Insurance

 

ஒருவர் தன் புதிய காரை டீலரிலிருந்து சாலைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, அது Third Party இன்சூரன்ஸ் கொண்டிருக்க வேண்டும் என்பது, இந்திய மோட்டார் வாகனச் (1988) சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி செப்டம்பர் 1, 2018 முதலாக, இது கார்களுக்கு என்றால் 3 ஆண்டுகளும் / டூ-வீலர்களுக்கு என்றால் 5 ஆண்டுகளும் செல்லுபடியாகும். எனவே, உங்கள் காருக்கு நீங்கள் நடுத்தர விலையில் இருக்கும் Comprehensive இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும், அதில் விலை குறைவான விபத்து நேர Third Party-க்கான சேதாரம் மற்றும் சொந்தச் சேதாரத்திற்கான கவரேஜ் இருப்பது அவசியம். இது இல்லையெனில் பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் மற்றும் விலை அதிகமான Zero Depreciation இன்சூரன்ஸ் ஆகியவையும் நல்ல சாய்ஸ்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்