ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் நம்பர் - மன்னிப்பு கோரிய கூகுள்! | Google Apologises For Storing UIDAI Number On Android Smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 05:34 (04/08/2018)

கடைசி தொடர்பு:07:55 (04/08/2018)

ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் நம்பர் - மன்னிப்பு கோரிய கூகுள்!

பொதுமக்களின் ஆண்ட்ராய்டு போன்களில் பயனாளர்களிடம் கேட்காமலேயே ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் எண் மற்றும் அவசர உதவிக்கு தேவைப்படும் 112 எண்ணையும் இணைத்துவிட்டதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தனிமனிதரின் அந்தரங்கத்தில் தலையிடுவதைப் போன்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனம், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பயனாளர்களின் ஒப்புதல் இன்றி ஆதார் ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், அவசர கால உதவிக்குப் பயன்படும் 112 எண்ணையும் இணைத்ததற்காக மன்னிப்பு கேட்பதாகக் கூறியுள்ளது. தங்களது கவனக்குறைவால் கான்டக்ட் லிஸ்டில் இந்த எண்களைச் சேர்த்துவிட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கூகுள்

இதுதொடர்பாக நாங்கள் நடத்திய விசாரணையில், கடந்த 2014ஆம் ஆண்டில் இவ்விரு எண்களும் ஆண்ட்ராய்டு செல்போனின் செட்டப்பிலுள்ள கான்டக்ட் லிஸ்டில் தானாகவே முன்கூட்டியே சேர்க்கப்பட்டுள்ளதாகக் தெரியவந்துள்ளது. எனவே இந்த எண்கள் அடுத்தடுத்த புதிய மொபைல்களுக்கும் எளிதில் இடம்மாறிக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இந்த எண்களை விரும்பாதவர்கள் அவர்களாகவே கைப்பட இந்த எண்களை அழித்துவிடலாமென்றும், இனிவரும் அடுத்த வெர்ஷன் செல்போன் தயாரிப்புகளில் அந்த எண்களை நீக்கிவிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.