ஃபார்ச்சூனர், எண்டேவர் பீ கேர்ஃபுல்... வருகிறது நிஸான் டெர்ரா!

ஹுண்டாய் க்ரெட்டாவுக்குப் போட்டியாக, கிக்ஸ் எனும் எஸ்யூவியை நிஸான் களமிறக்கும் முடிவில் இருப்பது தெரிந்ததே. ஆனால், என்னதான் காம்பேக்ட் எஸ்யூவி, மிட் சைஸ் எஸ்யூவி, பிரிமியம் எஸ்யூவி என எஸ்யூவி செக்மென்ட் வளர்ந்துகொண்டே சென்றாலும், XL சைஸ் எஸ்யூவிகளுக்கான வரவேற்பு இம்மியும் குறைவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. Body On Frame அல்லது லேடர் ஃப்ரேம் அமைப்பைக் கொண்டிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், இசுஸூ MU-X, மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில் தனது சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்ளும் முடிவில் இருக்கும் நிஸான், கிக்ஸ்-க்கு அடுத்து டெர்ரா (Terra) எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நிஸான்

 

இதுவும் கிக்ஸ் பாணியில் இந்தியாவுக்கு வரஉள்ளது. அதாவது, உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மாடலுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வெளிவரப்போகும் மாடலில் நம் நாட்டுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. 7 சீட்டர் எஸ்யூவியான டெர்ராவில் இருப்பது, 188bhp பவர் மற்றும் 45kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் - 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும் டெர்ராவில், பெட்ரோல் இன்ஜின் கிடையாது. பெட்ரோல் கார்களின்மீது மக்களின் கவனம் திரும்பிக் கொண்டிருப்பதால், இந்தியாவுக்கு இந்த எஸ்யூவி வரும்போது, ஃபார்ச்சூனரை போலவே இதுவும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனைக் கொண்டிருக்கும் எனலாம். ஆனால், விலைதான் வெற்றியைத் தீர்மானிக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!