எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு பிரேக் தேவை... கார் பிரேக்கின் ஆயுளுக்கு என்ன தேவை?!

எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு பிரேக் தேவை... கார் பிரேக்கின் ஆயுளுக்கு என்ன தேவை?!

கார், பைக் என எந்த வாகனமாக இருந்தாலும், இந்தியாவில் ஹார்னுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படுவது பிரேக்தான். டிராஃபிக் சிக்னல், மேடு பள்ளம், திடீர் ஸ்பீடு பிரேக்கர், ஓவர்டேக் பேர்வழிகள் என, காலை ஆபீஸுக்குக் கிளம்பும்போதும் வீட்டுக்கு திரும்பும்போதும் நம்மைக் கடுப்பேற்ற, சாலையில் பல விஷயங்கள் காத்திருக்கும். எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க, நமக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் பிரேக்.

கார் பிரேக்

வீலோடு சேர்ந்து வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பிரேக் டிஸ்க்கை, பிரேக் பேடுகள் அசால்ட்டாகப் பிடித்து காரை நிறுத்துகிறது. இந்த நேரத்தில் பேடுகளில் ஏற்படும் உராய்வுகளால் அவை வெப்பமடைந்து தேய்ந்துவிடும். பெட்ரோல், இன்ஜின் ஆயில், கூலன்ட்போல பிரேக் பேடுக்கும் ஆயுள் குறைவு. நம் டிரைவிங்கைப் பொறுத்து பிரேக் பேடுகளின் ஆயுள் 5,000 கிலோமீட்டர் முதல் 20,000 கிலோமீட்டர் வரை வரும். பிரேக்கை சரியாகப் பயன்படுத்தினால் அதிக ஆயுள் கிடைக்கும். 

டிரைவிங் ஸ்கில்

சிலருக்கு கார் எப்படி ஓட்டுவது எனத் தெரியும். ஆனால், ஒரு காரைக் கொடுத்து ஓட்டச் சொன்னால் திணறுவார்கள். காரணம், ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச், கியர் என டிரைவிங்கைப் பற்றித்  தெரிந்திருந்தாலும், கார் ஒரு சாலையில் எப்படி ரியாக்ட் செய்யும், சில தருணங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற டிரைவிங் ஸ்கில் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. உதாரணத்துக்கு, டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்கு இருக்கும்போது கடந்துவிடலாம் என வேகமாகச் சென்று சிவப்பு விளக்கு வந்தவுடன் பிரேக்கை அடித்து நிற்பார்கள். ஒரு திருப்பத்தை வேகமாகக் கடந்துவிடலாம் என நினைத்து, அருகில் வந்தவுடன் மடமடவென பிரேக் அடித்து வேகத்தைக் குறைத்து அந்த வளைவு எடுப்பார்கள்... நன்றாக கார் ஓட்டிப் பழகியவர்கள், தூரத்தில் இருந்தே சிவப்பு விளக்கு வருவதற்குள் கடக்க முடியாமா என்பதைக் கணித்திடுவார்கள்; எந்த வளைவுகளில் எவ்வளவு வேகம் வேண்டும் என்று பார்த்த உடனேயே தெரிந்துகொள்வார்கள்; எந்த ஸ்பீடு பிரேக்கருக்கு எவ்வளவு வேகம் என சாலையில் பிரேக் தேவைப்படும் எல்லா இடங்களிலும் சரியாக வேகத்தை மெயின்டெயின் செய்வார்கள். இதனால், பிரேக் பேடுகளின் தேய்மானம் குறையும்.

டிஸ்க் பிரேக்

முற்போக்குச் சிந்தனை

அரசியலில் மட்டுமல்ல, பிரேக் போடும்போதும் நமக்கு முற்போக்குச் சிந்தனை வேண்டும். எப்போதுமே லேசான அழுத்தத்தை பிரேக்கில் பயன்படுத்தவேண்டும். தேவையென்றால், அழுத்தத்தைப் பொறுமையாக அதிகரிக்கலாம். திடுக்கென பிரேக்கைப் பிடித்து வீலை லாக் செய்தால், பிரேக் பேடுகளில் அதிக தேய்மானம் ஏற்படும். இப்படிச் செய்வது பேடுகளுக்கு மட்டுமல்ல, சஸ்பென்ஷன், டயர் என தொடர்சங்கிலியாக இருக்கும் எல்லா பாகங்களையும் பாதிக்கும். காரில் பயணிப்பவர்களுக்கும் தேவையில்லாத அதிர்வுகள் இருக்காது. ஏபிஎஸ் இல்லாத காரில் இதுபோல நிதானமாக பிரேக் பிடிப்பது அவசியம்.

வேகம்

அதிக வேகத்திலிருந்து உடனே வேகத்தைக் குறைக்க பிரேக்கைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், பிரேக் பேடுகளுக்கு என மாதச் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமித்துவையுங்கள். பட்ஜெட் போட்டு கார் சர்வீஸ் செய்பவர்களே, அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடிப்பதால் தேய்மானமும் அதிகமாகவே இருக்கும். இன்ஜின் பிரேக்கிங் மூலம் வேகத்தை முடிந்த அளவுக்குக் குறைத்துவிட்டு, பிறகு பிரேக்கைப் பயன்படுத்தினால் பிரேக் பேடுகள் அதிக நாள் வரும்.

பிரேக் பராமரிப்பு

வெப்பம்

மலையிலிருந்து இறங்கும்போது பிரேக்கை அதிக நேரம் பயன்படுத்த நேரிடும். அப்போது பேடுகளில் அதிக வெப்பம் உருவாகும். வெப்பம் அதிகமாக இருந்தால் பேடுகள் சீக்கிரம் தேய்ந்துவிடும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பிரேக் பிடித்தால் கார் நிற்காது. அதனால், பிரேக்கின் ஆற்றல் குறைவதுபோலத் தெரிந்தால் கியரைப் பயன்படுத்தி பொறுமையாக காரின் வேகத்தைக் குறைத்து காரை நிறுத்திவிட்டு பிரேக்கைக் குளிரவிட வேண்டும். காரை நிறுத்தும்போது பேட் டிஸ்க்குடன் லாக் ஆகாமல் இருக்க வேண்டும். பிரேக் பேடுகளில் வெப்பம் டிஸ்க்கைச் சூடாக்கும். அதனால், வீல் டிஸ்க்கின் திறன் குறையும்.

பராமரிப்பு

எதில் குறை இருந்தாலும் காரை ஓட்டிச் செல்லலாம். ஆனால், பிரேக்கில் குறை இருந்தால் ஆபத்தோ ஆபத்து! பிரேக்கைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பிரேக் பராமரிப்பு என்றால், அதில் முதலில் இருப்பது பிரேக் பேடுகளின் தேய்மானம். ``பேடுகள் இன்னும் 500 கி.மீ ஓடும்'' என்று மெக்கானிக் சொன்னால், உடனே பேடை மாற்றிவிடுங்கள். முழுவதும் தேய்ந்த பிறகு மாற்றுவது கூடாது.

பிரேக் ஆயில்

பிரேக் பேடுகள் நன்றாக இருந்தும் காரை நிறுத்துவதில் சிக்கல் இருந்தால் பிரேக் டிஸ்க்/டிரம்மை ரீ-சர்ஃபேஸ் செய்யவேண்டும். 

பிரேக் ஆயிலை, தொடர்ந்து சரியான இடைவெளியில் மாற்ற வேண்டும். பிரேக் மெத்து மெத்தென இருந்தால் பிரேக் சிலிண்டரில் ப்ளீடிங்  செய்யவேண்டும்.

மாஸ்டர் சிலிண்டரிலிருந்து செர்வோ மோட்டாருக்குச் செல்லும் வேக்கம் ஹோஸை அவ்வப்போது செக் செய்யவேண்டும். ஏதாவது விரிசல் தென்பட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!