புதிய பார்ட்னர்... புதிய பைக்ஸ்... இது இந்தியாவுக்கான பெனெல்லியின் ஸ்கெட்ச்!

முன்னே சொன்ன மாடல்களில் லியோன்சினோ மற்றும் TRK சீரிஸ், இத்தாலியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதே நம்பிக்கையில் இந்தியாவில் அவற்றைக் களமிறக்கவிருக்கும் பெனெல்லி, விலை விஷயத்தில் உஷாராகவே இருக்கும் எனத் தெரிகிறது.

`டெர்மினேட்டர்' படத்தில் அர்னால்டு, புகழ்பெற்ற இந்த வசனத்தைப் பேசுவார்... `I am Back'. அதே பாணியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக டூ-வீலர்களைத் தயாரித்து, உலகெங்கும் விற்பனை செய்துகொண்டிருக்கும் இத்தாலியைச் சேர்ந்த பெனெல்லி நிறுவனம், இந்தியாவில் மீண்டு(ம்) வந்திருக்கிறது! ஆம், இதுவரை DSK குழுமத்துடன் இணைந்து தனது பைக்குகளை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்துவந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக DSK குழுமம் பாதிக்கப்பட்டதால், ஏறக்குறைய கடந்த ஓராண்டாகவே பெனெல்லியின் செயல்பாட்டில் மந்தநிலை நீடித்தது. எந்த அளவுக்கு என்றால், பைக்குகளை முன்கூட்டியே புக் செய்தவர்கள் மற்றும் ஏற்கெனவே இந்த நிறுவன பைக்குகளை வைத்திருப்போர் ஆகியோருக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.

பெனெல்லி

இந்நிலையில்தான், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக்கொண்ட மஹாவீர் குழுமம், பெனெல்லியுடன் கைகோத்தது. தற்போது, `Benelli QJ & Adishwar Auto Ride India (AARI)' எனும் கூட்டணி உருவாகியிருக்கிறது. 300சிசி முதல் 600சிசி பிரிவில் தனக்கென ஓர் இடத்தை பெனெல்லி பிடித்திருந்தது தெரிந்ததே. பெனெல்லி பின்தங்கிய இடைப்பட்ட காலத்தில், டிரையம்ப் மற்றும் கவாஸாகியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இந்நிலையில் போட்டியாளர்களிடம் இழந்துவிட்ட தனது இடத்தை மீண்டும் பிடிக்க, பெனெல்லி தீட்டியுள்ள அதிரடித் திட்டங்கள் குறித்த ஆழமான பார்வை இது...

யார் மஹாவீர் குழுமம்? பெனெல்லிக்கு அவர்கள் செய்யப்போவது என்ன?

நீங்கள் தென்னிந்தியப் பகுதிகளில் இருப்பவர் என்றால், உங்களுக்கு மஹாவீர் குழுமம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். காரணம், அவர்கள் அங்கேதான் ஸ்கோடா, மெர்சிடீஸ் பென்ஸ், இசுஸூ, பெனெல்லி டீலர்களை வைத்திருக்கிறார்கள். கார் மற்றும் பைக் டீலர்ஷிப்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மஹாவீர் குழுமம், தற்போது பெனெல்லிக்காக பைக்குகளை உற்பத்தி செய்துகொடுக்க இருக்கிறது. இதற்காக, தெலங்கானா அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, ஹைதராபாத் நகர எல்லையில் 3 ஏக்கர் இடம் வாங்கியிருக்கிறது. வரும் அக்டோபர் 2018 முதல், CKD முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பைக் பாகங்கள், இங்கே முழு பைக்காக அசெம்பிள் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹாவீர் - AARI நிறுவனம், இந்தியாவில் பெனெல்லி பைக்குகளுக்கான விற்பனை - சர்வீஸ் - உதிரிபாகங்கள் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும். `DSK-பெனெல்லி' எனக் கூட்டணியின் பெயர் இருந்த நிலையில், சர்வதேச டிரெண்டுக்கு ஏற்ப இந்தப் புதிய கூட்டணிக்கு `பெனெல்லி இந்தியா' என்றே பெயரிடப்பட்டிருக்கிறது.  

மஹாவீர் குழுமம்

தற்போது இந்தியா முழுவதும் `DSK-பெனெல்லி' குழுமத்துக்கு 20 டீலர்கள் இருக்கிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில்  இருந்த டீலர், மூடுவிழா நடத்திவிட்டதால், தற்போது 19 டீலர்களே இருக்கிறார்கள்! இதில் 18 டீலர்கள், புதிய கூட்டணிக்குத் தமது ஆதரவைத் தந்ததுடன், தொடர்ந்து பெனெல்லி பைக்குகளுக்கான விற்பனை - சர்வீஸ் - உதிரிபாகங்கள் போன்ற சேவைகளை வழங்கத் தயாராக இருக்கிறார்கள். இதனுடன் வருடத்துக்கு 20 டீலர்கள்வீதம் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் 40 புதிய டீலர்களை இந்தியாவில் நிறுவும் திட்டத்தில் இருக்கிறது மஹாவீர் - AARI நிறுவனம். இதற்கேற்றபடி புதிய பைக்குகளும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

புதிய தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 7,000 பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் எனவும், தேவைப்பட்டால் அதை 10 ஆயிரமாக அதிகரித்துக்கொள்ளலாம் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து உள்நாட்டுப் பாகங்களைக்கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பைக்கையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது. மேலும், கவாஸாகி பாணியில் ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் பைக்குகளில் இறக்குமதி செய்யப்படும் பாகங்களைக் குறைத்து, உள்நாட்டு உதிரிபாகங்களைப் பொருத்தி, நாளடைவில் விலையைக் குறைக்கும் எண்ணமும் இருக்கிறது. இது எதிர்கால ஐடியாதான்!

பெனெல்லி அறிமுகப்படுத்தப்போகும் புதிய பைக்குகள் என்ன?

TNT 250, TNT 300, 302R, TNT 600i, TNT 600GT ஆகிய 5 பைக்குகளை, இந்தியாவில் DSK-பெனெல்லி விற்பனை செய்துவந்தது. TNT 899 மற்றும் TNT 1130R ஆகிய பைக்குகள் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாததால், அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், TNT 300, 302R, TNT 600i ஆகிய பைக்குகளின் விற்பனையைத் தொடர மஹாவீர் - AARI நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. குறைவான விற்பனையினால் TNT 250 மற்றும் TNT 600GT ஆகிய பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும், இதற்கான மாற்று மாடல்கள் வரும். 

302 S

TNT 300 பைக்கின் பேஸ்லிஃப்ட் மாடலாக, 302 S விரைவில் வெளிவரவுள்ளது. 2017 EICMA மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக், டிசைன் மற்றும் வசதிகளில் கணிசமான மாற்றத்தைப் பெற்றிருந்தது. புதிய LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பின்பக்க பாடிபேனல்கள் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், இன்ஜின் - சேஸி - சஸ்பென்ஷன் - ஏபிஎஸ் பிரேக்ஸ் - பெட்ரோல் டேங்க் - வீல்கள் ஆகியவை முந்தைய மாடலில் இருப்பவையே! பைக்கின் எடை கூடிவிட்டதும் நெருடல்.

Leoncino

302 S பைக்கைத் தொடர்ந்து, லியோன்சினோ 500 மற்றும் TRK 502 ஆகிய பைக்குகள், இந்த நிதியாண்டுக்குள்ளாகக் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவை இரண்டிலும் பெனெல்லியின் புதிய 499.6சிசி - லிக்விட் கூல்டு - ட்வின் சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. 47.6bhp பவர் மற்றும் 4.5kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. லியோன்சினோ ஸ்க்ராம்ப்ளர் வகை பைக் என்றால், TRK 502 அட்வெஞ்சர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு 500சிசி பைக்கிலும் இரண்டு மாடல்கள் வரவிருக்கின்றன. இதில் ஸ்டாண்டர்டு மாடல்கள் ஆன்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே லியோன்சினோ ட்ரெய்ல் மற்றும் TRK 502X ஆகியவை ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ப காட்சியளிக்கின்றன. TNT 250 பைக்குக்கு மாற்றாக லியோன்சினோ 250 மற்றும் TNT 600 GT பைக்குக்கு மாற்றாக TRK 502 பொசிஷன் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!

Imperiale

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350/500 பைக்குக்குப் போட்டியாக, இம்பீரியல் 400 எனும் பைக்கை, அடுத்த ஆண்டில் வெளியிடுகிறது பெனெல்லி. இந்த நிறுவனத்தின் விலை குறைவான பைக்காக அறியப்படவிருக்கும் இதில்19.7bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் 373.5சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், இந்த ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 192 கிலோ எடையுள்ள க்ளாசிக் 350 பைக்குடன் ஒப்பிடும்போது, CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படவிருக்கும் 200 கிலோ எடையுள்ள இம்பீரியல் 400 பைக்கின் விலை, நிச்சயம் அதிகமாகவே இருக்கும். எனவே, பின்னாளில் கூடுதல் திறன்மிக்க இம்பீரியல் 530 மாடல் களமிறக்கப்படலாம். அதேபோல லியோன்சினோ 250 பைக்கைத் தொடர்ந்து, TRK 250 மாடல் 2019-ம் ஆண்டின் இறுதியில் வெளிவரலாம். இவை இரண்டிலும் இருப்பது, 25.8bhp பவர் மற்றும் 2.12kgm டார்க்கை வெளிப்படுத்தும் 249சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி; லிக்விட் கூலிங், Fi உண்டு.

இந்தியாவில் பெனெல்லியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

முன்பு குறிப்பிட்ட மாடல்களில் லியோன்சினோ மற்றும் TRK சீரிஸ், இத்தாலியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதே நம்பிக்கையில் இந்தியாவில் அவற்றைக் களமிறக்கவிருக்கும் பெனெல்லி, விலை விஷயத்தில் உஷாராகவே இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் இத்தகைய பைக்குகளுக்கான சந்தையில் 21 சதவிகிதத்தைத் தன்வசம் வைத்திருந்த இந்த நிறுவனம், தான்விட்ட இடத்தை மீண்டும் எட்டிப்பிடிக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. அதன் வெளிப்பாடாக, ஏற்கெனவே பெனெல்லி பைக்குகளை வைத்திருப்பவர்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை, சர்வீஸ் சென்டர்களுக்கு அனுப்பிவிட்டது மஹாவீர் - AARI நிறுவனம்.

TRK 502

2021-ம் ஆண்டுக்குள் 30 சதவிகிதச் சந்தைமதிப்பு என்பதே, இந்த நிறுவனத்தின் ஆசைகளுள் ஒன்று! தவிர ரைடிங் க்ளப், விளம்பரதார நிகழ்வுகள், டீலர் அனுபவம் ஆகியவற்றையும் முன்னேற்ற ஆர்வம்காட்டும் என நம்பலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பெனெல்லி தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய அறிமுகங்களின் காலதாமதத்தால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் பொருட்டு, அதிரடியான தயாரிப்புகள் மற்றும் அசத்தலான திட்டங்களுடன் மீண்டும் களம் புகுந்திருக்கிறது. பைக்குகளின் விலை, டீலர் நெட்வொர்க் மற்றும் சர்வீஸ் சென்டர்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், தனது சந்தைமதிப்பை இந்த நிறுவனம் நிச்சயமாக மீண்டும் தன்வசப்படுத்தும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!