வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (10/08/2018)

கடைசி தொடர்பு:15:40 (10/08/2018)

கண்காட்சியில் கும்பகோணத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வெளியிடப்பட்ட அஞ்சல் உறை!

அஞ்சல் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான `குடந்தை பெக்ஸ் 2018' என்ற தலைப்பிலான தபால் தலை கண்காட்சி கும்பகோணத்தில் நடக்கிறது. இதில் கும்பகோணத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் கணிதமேதை சீனிவாச ராமானுஜர், நாச்சியார்கோயில் கல்கருடசேவை, அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோயில் மற்றும் படங்கள் அச்சிடப்பட்ட சிறப்பு தபால் கவரை அஞ்சல் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.

கோயில் நகரமான கும்பகோணத்தில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் தலை கண்காட்சி `குடந்தை பெக்ஸ் - 2018' என்கிற தலைப்பில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை தொடங்கிய இந்தக் கண்காட்சி வரும் 11-ம் தேதி வரை நடக்கிறது. மகாமக குளத்தின் தெற்கு கரையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் காலை 10 மணி தொடங்கி  இரவு 8 மணி வரை நடக்கிறது இந்தக் கண்காட்சி. இதில் அஞ்சல் துறைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல அரிய வகையிலான தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி நிகழ்ச்சியில் கும்பகோணத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் கணிதமேதை சீனிவாச ராமானுஜர் சிலை போட்டோ மற்றும் அவரை பெருமைப்படுத்தும் வகையிலும், நாச்சியார்கோயில் கல்கருடசேவை, அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோயில் கோபுரங்கள் மற்றும் சாமி போட்டோவுடன் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவர் சம்பத் வெளியிட்டார். அதை சாஸ்த்ரா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்  நரசிம்மன் மற்றும் அய்யாவாடி கோயில் அர்ச்சகர் சங்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் அஞ்சல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டதோடு கும்பகோணத்தின் சிறப்புகள் குறித்தும் அஞ்சல் துறையின் வளர்ச்சி மற்றும் பெருமைகள் குறித்தும் பேசினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க