Published:Updated:

ரயிலில் இருந்து தவறி விழுந்த 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எரிப்பு!

ரயிலில் இருந்து தவறி விழுந்த 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எரிப்பு!
ரயிலில் இருந்து தவறி விழுந்த 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எரிப்பு!

விருத்தாசலம்: கடலூர்  மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள்கள்  எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27ஆம் தொடங்கிய 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வை கடலூர் மாவட்டத்தில் 97 மையங்களில் 44 ஆயிரத்து 416 மாணவர்கள் எழுதி வருகிறார்கள்.

தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் அன்றைய தினமே குறிப்பிடப்பட்ட மண்டல தேர்வு மையத்திற்கு தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 28ஆம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வு விடைத்தாள்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அனுப்பும் பணியில் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்துநகரில் உள்ள தேர்வு மையத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் ரயில்வே சந்திப்பிற்கு கொண்டு வரப்பட்டது.

##~~##
ரயில் என்ஜினுக்கு அருகே உள்ள பெட்டியில் மாணவர்களின் விடைத்தாள்கள் அடங்கிய பண்டல்கள் அனைத்தையும் ஏற்றினர். அதன்பின் ரயில் அங்கிருந்து 2.35 மணி அளவில் புறப்பட்டு சென்றது.
ரயில் திருச்சியை சென்று அடைந்தபின், அங்கு இறக்கப்பட்ட பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு பண்டலை காணவில்லை என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து விருத்தாசலம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த விருத்தாசலம் அதிகாரிகள் ரயில் நிலையம் முழுவதிலும் தேடிப் பார்த்தபோது, விடைத்தாள்கள் தண்டவாள பகுதியில் அங்கும், இங்குமாக காற்றில் பறந்தும், கிழிந்தும் கிடந்தது தெரியவந்தது.
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் விடைத்தாள் பண்டல்களை ஏற்றிய பெட்டியின் கதவு சரியான முறையில் பூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் சென்றவுடன், ஒரு பண்டல் ரயில் பெட்டியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என்றும், அதன்பின், எதிர்மார்க்கத்தில் சென்னைக்கு சென்ற அனந்தபுரி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் என்ஜினில் சிக்கி விடைத்தாள்கள் கிழிந்து இருப்பதும் தெரியவந்தது.
இந்த தகவல் வெளியே தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்று கருதிய அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு ரயில் நிலையத்தில் பறந்த அனைத்து பேப்பர்களையும் ஒன்று விடாமல் சேகரித்தனர். இதில் மிஞ்சிய பேப்பர்கள் மட்டும் ரயில் வழி அஞ்சல் பணி அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டன.
மேலும் ஆங்காங்கே துண்டு துண்டாக கிழிந்து கிடந்த விடைத்தாள்கள், ரயில் நிலையத்தின் வெளிப்புறத்திற்கு கொண்டு சென்று முட்புதர்களில் கொட்டி, அடையாளம் தெரியாத வகையில் தீயிட்டு எரிக்கப்பட்டன.
ரயிலில் அனுப்பிய மாணவர்களின் விடைத்தாள்கள் எண்ணிக்கை எவ்வளவு? ரயிலில் சிக்கி கிழிந்த பேப்பர்கள் எத்தனை? எஞ்சிய விடைத்தாள்கள் எத்தனை உள்ளன? என்று ரயில்வே வழி அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
மேலும் இது தொடர்பாக கல்வித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பொதுவாக தேர்வு மையத்தில் இருந்து அனுப்பப்படும் விடைத்தாள்கள் எந்த மையத்திற்கு செல்கிறது என்றே எங்களுக்கு தெரியவராது. இருப்பினும் திருச்சி, சென்னை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே தற்போது பாதிக்கப்பட்டுள்ள விடைத்தாள் கடலூர் மாவட்டத்தில் எந்த மையத்தில் எழுதப்பட்டது என்பது குறித்த விவரம் தற்போது உடன் தெரியவராது என்றார்.
இதில் கல்வித்துறையினை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் தான், பாதிக்கப்பட்ட மையம் எது? பாதிப்புகள் என்ன? என்பது தெரியவரும்.