Published:Updated:

`` அந்தக் குழந்தைகள் எல்லாம் என் கண் முன்னே நிற்கற மாதிரி இருக்கு!’’

`` அந்தக் குழந்தைகள்  எல்லாம் என் கண் முன்னே  நிற்கற மாதிரி இருக்கு!’’
பிரீமியம் ஸ்டோரி
`` அந்தக் குழந்தைகள் எல்லாம் என் கண் முன்னே நிற்கற மாதிரி இருக்கு!’’

ஆர்.வைதேகி - படங்கள்: ஜெ.வேங்கட்ராஜ்

`` அந்தக் குழந்தைகள் எல்லாம் என் கண் முன்னே நிற்கற மாதிரி இருக்கு!’’

ஆர்.வைதேகி - படங்கள்: ஜெ.வேங்கட்ராஜ்

Published:Updated:
`` அந்தக் குழந்தைகள்  எல்லாம் என் கண் முன்னே  நிற்கற மாதிரி இருக்கு!’’
பிரீமியம் ஸ்டோரி
`` அந்தக் குழந்தைகள் எல்லாம் என் கண் முன்னே நிற்கற மாதிரி இருக்கு!’’

மொட்டைத் தலையுடன், மூக்கிலும் கழுத்திலும் செருகப்பட்ட டியூபுடன், எலும்புகளை எண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு உருகிய உடலுடன்... இப்படிப் பார்வை படுகிற இடங்களில் எல்லாம் பரிதாப உருவங்கள். அவர்களின் கண்களில் மரண பயத்தைத் தாண்டிய நம்பிக்கை. இவர்களைக் கடந்து உள்ளே நுழைகிற யாருக்கும் உடலும் மனமும் நடுங்கும்.

அதே மருத்துவமனையின் மாடியில் எளிமையான சூழலில் வசிக்கிறார் டாக்டர் சாந்தா. அவரது அறைக்குப் பக்கத்து அறைகளிலும் புற்றுநோயாளிகள். நமக்கு அந்நியமாகப்பட்ட அந்த மருந்து வாடையும் மக்கள் வாடையும்தான் அவருக்கு சுவாசம்.

மக்கள் சேவகி டாக்டர் சாந்தாவுக்கு 91 வயதாம். ஆயுளையே அன்பால் ஆள்பவர் இவர். அவரது பேச்சிலும் அன்பைத் தவிர வேறில்லை.

‘`மருத்துவப் படிப்பை முடிச்சுட்டு, எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கொஞ்சகாலம் வேலை பார்த்தேன். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டை ஆரம்பிச்சாங்க. அந்த அமைப்புல நானும் ஓர் அங்கமா இணையற வாய்ப்புக் கிடைச்சுது. டாக்டர்ஸ், நர்ஸ் எல்லோரையும் சேர்த்து அப்போ மொத்தமே பத்துப் பேர்தான். நானே சில நேரத்துல நர்ஸாகவும் சில நேரத்துல டாக்டராகவும் இருந்திருக்கேன். 1984-லேர்ந்து கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் தலைமைப் பொறுப்புல இருக்கேன்’’ 91 வயதிலும் சாந்தாவின் குரலில் நடுக்கமில்லை.

`` அந்தக் குழந்தைகள்  எல்லாம் என் கண் முன்னே  நிற்கற மாதிரி இருக்கு!’’

``ஒரு காலத்தில் அபூர்வமான நோயா இருந்த கேன்சர், இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் வர ஆரம்பிச்சுருக்கு. புற்றுநோய் இவ்வளவு வேகமாகப் பரவக் காரணம் என்ன?’’

‘`கேன்சர் எல்லா காலத்துலேயும் இருந்திருக்கு. கி.மு. 2500-லகூட இருந்திருக்கு. ஆனா, அது கேன்சர்னு தெரியாமலேயே இருந்திருக்கு. கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் ஃபவுண்டர் முத்துலட்சுமி ரெட்டியோட சகோதரியே புற்றுநோயாலதான் இறந்துபோனாங்க. இன்னைக்கு, மனிதர்களோட ஆயுள்காலம் அதிகமாகியிருக்கு. சுதந்திரம் வாங்கினபோது மனிதனோட ஆயுள் சராசரியா 40 வயது. இன்னிக்கு ஆபிச்சுவரி பகுதியில் 80 வயதைத் தாண்டினவங்களைத்தான் அதிகமா பார்க்கிறோம்.

 வாழ்நாள் அதிகரிக்கக் காரணம் மருத்துவ அறிவியலின் முன்னேற்றம். நீரிழிவு, இதய நோய்கள், இன்ஃபெக்‌ஷன்னு எல்லாத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது. ஆயுள் அதிகரிக்க அதிகரிக்கப் புற்றுநோய் பாதிக்கிற வாய்ப்புகளும் அதிகரிக்கும்னு புரிஞ்சுக்கணும்.

இளம் தலைமுறையினரிடம் கேன்சர் அதிகரிக்கக் காரணம் லைஃப் ஸ்டைல். ஆல்கஹால், உணவுப் பழக்கம், சுய சுகாதாரம்னு பலதும் இதுல அடக்கம். உடம்பு சுத்தமா குளிச்சா மட்டும் போதாது. வாய்சுத்தம் அதைவிட முக்கியம். அந்தரங்க உறுப்புச் சுத்தம் அதையும்விட முக்கியம். ஹெச்.ஐ.வி. இருக்கிற பெண்களுக்கு, கர்ப்பப்பை புற்றுநோய்த் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தது சுற்றுப்புற மாசு. பாசிவ் ஸ்மோக்கிங்குக்கு இதுல பெரிய பங்குண்டு. வீட்டுக்குள்ள ஒருத்தருக்கு புகைப்பழக்கம் இருந்தாலும், அந்த வீட்டுக்குள்ள இருக்கிற எல்லா ஆட்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அந்த வீட்டுல கர்ப்பிணிகள் இருந்தா, கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும்.
இன்றைய மக்கள் உடற்பயிற்சிகளே இல்லாத வாழ்க்கை முறைக்குப் பழகிட்டாங்க. ஜங்க் ஃபுட் என்ற பேர்ல அதிகக் கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுறாங்க. பருமன் பிரச்னை ரொம்ப அதிகமாயிட்டிருக்கு.

ஐ.சி.எம்.ஆர். புள்ளிவிவரம் வருடந்தோறும் புற்றுநோயின் தாக்கம் இந்தியாவுல ஒரு சதவிகிதம் அதிகரிச்சுட்டிருக்கிறதா சொல்லுது.’’

``எல்லாமே மாசுபட்டுப் போயிருக்கிற சூழல்ல புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கிறது சாத்தியமா?’’

‘`ஆரோக்கியமான சாப்பாடுன்னா ஆர்கானிக் சாப்பாடுதான்னு அர்த்தமில்லை. சுத்தமான சாப்பாடுதான் முக்கியம். அதிக எண்ணெய், அதிக இனிப்பு தவிர்க்கணும். கொழுப்பு அதிகமான அசைவ உணவுகளைத் தவிர்க்கணும். எதுக்கெடுத்தாலும் ஸ்வீட் சாப்பிடுற பழக்கம் வேண்டாம். குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட் கொடுக்கக் கூடாது. ஆர்கானிக் கடைகளைத் தேடிப் போய்தான் கீரை வாங்கிச் சாப்பிடணும்னு இல்லை. உங்க வீட்டுலேயே சின்னத் தொட்டிகள்ல கீரை வளர்த்துப் பயன்படுத்தலாம்.’’

``இவ்வளவு வளர்ந்துவிட்ட மருத்துவ முன்னேற்றத்தில் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த, மருந்துகள் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?’’


‘`அப்படிச் சொல்லிவிட முடியாது.   1954-ல நாங்க இந்த அமைப்பை ஆரம்பிச்சபோது பலவகையான புற்றுநோய்களைக் குணப்படுத்த முடியாத நிலை இருந்தது. நிறைய குழந்தைகள் இறந்து போனாங்க. மருத்துவம் வளர்ந்திருக்கிற இன்றைய தேதியில அந்த மாதிரி நோய்க்கூறு உள்ள குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம். இதையும் தாண்டின மருத்துவ முன்னேற்றம் வேணும்ங்கிறதுதான் எங்க விருப்பம். இப்போ மூன்று பேர்ல ஒருவரைத்தான் காப்பாத்த முடியுது. மற்ற ரெண்டு பேரும் தாமதமா, நோய் முற்றிய நிலையில சிகிச்சைக்கு வந்தவங்களா இருப்பாங்க. அந்த நிலை மாறணும்னா இன்னும் அதிக விழிப்புஉணர்வு அவசியம்.’’

`` அந்தக் குழந்தைகள்  எல்லாம் என் கண் முன்னே  நிற்கற மாதிரி இருக்கு!’’

``கேன்சரை நிரந்தரமாகக் குணப்படுத்த மருந்து இருக்கிறதாகவும், இலவசமா கேன்சர் இன்ஸ்டிடியூட்ல கொடுக்கிறதாகவும் சோஷியல் மீடியாவில் அடிக்கடி செய்திகள் பரவுகிறதே... அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை?’’

 ‘`எனக்கும்கூட தினமும் அத்தனை போன் கால்ஸ் வருது. இப்படிப்பட்ட தவறான பிரசாரங்களை யார், எதுக்குப் பண்றாங்கன்னு தெரியலை. அதனால அவங்களுக்கு என்ன கிடைக்குது?

கேன்சருக்கான இலவச மருந்துங்கிறதை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. சேவை நோக்கத்துலதான் இந்த அமைப்பை ஆரம்பிச்சோம். ஏழை, பணக்காரங்க எல்லோருக்கும் ஒரேவிதமான சிகிச்சைங்கிறது தான் எங்க குறிக்கோள். வசதியிருக்கிறவங்க கொடுக்கிறதை வெச்சு இல்லாதவங்களுக்குச் சிகிச்சை கொடுக்கிறோம். நோயின் தீவிரத்தைப் பொறுத்துதான் அதை முழுமையா குணப்படுத்த முடியுமா, முடியாதானு சொல்ல முடியும். வாட்ஸ்அப் தகவல்கள் மட்டுமில்லை, இன்டர்நெட்ல பரவுற தவறான சிகிச்சைகளையும் பிரசாரங்களையும்கூட மக்கள் நம்ப வேண்டாம்.’’

``காரணங்களே இல்லாமலும் சிலருக்குப் புற்றுநோய் வருவது ஏன்?’’

‘`அதுக்குக் காரணம் பாரம்பர்யம். கேன்சர் என்பது ஒரே ஒரு நோயல்ல. பல நோய்களின் கூட்டு. இது காலரா, டைஃபாய்டு மாதிரி புறக்காரணிகளால ஏற்படுறதுமில்லை. மரபியல் ரீதியான விஷயத்துடன், புறக்காரணிகளான உணவு, லைஃப் ஸ்டைல், உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை மாதிரியான விஷயங்களும் சேரும்போது கேன்சருக்கான வாய்ப்புகள் அதிகம். புறக்காரணிகள் சரியா இருந்தா, புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் குறைவு.’’

``கேன்சர்னாலே வலியைத் தவிர எதுவுமில்லைங்கிற நிலைமையில் கூடுதலான வலியைக் கொடுக்கிற கீமோதெரபி, ரேடியேஷன் மாதிரியான சிகிச்சைகளுக்கு மாற்று வந்திருக்கா?’’

‘`கேன்சர்னா வலின்னு யார் சொன்னது?  ஆரம்பநிலைப் புற்றுநோய்ல வலியே இருக்காது. வலி என்பது புற்றுநோய் முற்றினதோட அறிகுறி. கீமோதெரபியோ, ரேடியேஷனோ வலியைக் குறைக்குமே தவிர, அதிகரிக்காது. அதே மாதிரி கேன்சர்னா மரணம்னு நினைக்க வேண்டாம். மார்புல கட்டி உருளும். ஆனாலும் வலிதான் இல்லையேன்னு டெஸ்ட்டே பண்ணியிருக்க மாட்டாங்க. வலி இல்லாத கட்டிதான் புற்றுநோயின் ஆரம்பநிலை.’’

``கேன்சர் இல்லாத இந்தியா சாத்தியமா?’’

‘`எப்போதுமே சாத்தியமில்லை. மரணத்தை நம்மால் நிறுத்த முடியாதில்லையா? மனுஷன் பிறந்தா, ஒருநாள் இறந்தாகணும். கேன்சர் என்பது நம் செல்களிலிருந்தே உருவாவது. அதை 100 சதவிகிதம் தடுத்துவிட முடியும்ங்கிறது கற்பனையில வேணா சாத்தியமாகலாம். பெருமளவு தடுக்க முடியும். அது மட்டும்தான் நிச்சயம்.’’

``தினம் தினம் பார்க்கிற மனிதர்களும் மரணங்களும் உங்களுக்கு அலுப்பைக் கொடுக்கவில்லையா?’’


‘`இத்தனை வருஷங்களா போராடியும் பெரிய அளவுல ரிசல்ட் பார்க்க முடியலையேன்னு நினைக்கிறபோதுதான் அலுப்பா இருக்கு.  முன்னே 50 சதவிகித மக்கள் சிகிச்சைக்கு லேட்டா வந்தாங்க. இப்போ அது 10 சதவிகிதமா குறைஞ்சிருக்கு. 1955-60கள்ல சின்னக்குழந்தைகள் நிறைய பேர் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்திருக்காங்க. அந்தக் குழந்தைகள் எல்லாம் இப்போதும் என் கண்முன்னே நிற்கிற மாதிரி இருக்கு. இன்னிக்கு இருக்கிற மருத்துவ வசதிகளை வெச்சு அவங்களைக் குணப்படுத்தியிருக்கலாமே... அது முடியலையேங்கிற வருத்தம் உண்டு.

இப்போ கேன்சர்லேர்ந்து குணமாகிறவங்க 65 சதவிகிதம் பேர். அது 90 சதவிகிதமா மாறினாதான் எனக்குச் சந்தோஷம். இன்னிக்குக் குணமாகிற குழந்தை வளர்ந்து கல்யாணமாகிக்  குழந்தைகளோடு வந்து  என்னைப் பார்க்கிறதுதான் உண்மையான சந்தோஷம்.’’