Published:Updated:

''பட்டனைத் தட்டி ஓட்டுறது இல்ல... கை கயிறுல இருக்கு சூட்சமம்!"- மாட்டு வண்டி ஓட்டும் ராணியம்மாள்

''பட்டனைத் தட்டி ஓட்டுறது இல்ல... கை கயிறுல இருக்கு சூட்சமம்!"- மாட்டு வண்டி ஓட்டும் ராணியம்மாள்
''பட்டனைத் தட்டி ஓட்டுறது இல்ல... கை கயிறுல இருக்கு சூட்சமம்!"- மாட்டு வண்டி ஓட்டும் ராணியம்மாள்

ணுக்கு இணையாக இன்று பெண்கள் ராணுவப் போர் விமானமும் ஓட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், ``பட்டனைத் தட்டினா விமானம் பறக்கப்போவுது. மாட்டுவண்டி ஓட்டறது ரொம்ப கஷ்டம்பா. மாடுகளை அரவணைச்சு அதுக மனசு அறிஞ்சு அதட்டி, கயிற்றைச் சரியான நேரத்துலவிட்டு, இழுத்துப் பிடிச்சு, சூதானமா ஓட்டணும். இல்லைன்னா, ரோட்டோரத்துல வண்டியோட நம்மளை தள்ளிவிட்டிரும். நான் 10 வருஷமா மாட்டு வண்டி ஓட்டறேன். நானும் புருஷனும் மணலை வண்டியில் ஏத்திட்டுப்போய் வித்து வயித்துப் பொழப்ப ஓட்டுறோம். இந்த மாடுகள் ஓடினாத்தான் எங்களுக்குச் சோறு. இல்லைன்னா, வயித்துல ஈரத்துணி கட்டிக்கிட வேண்டியதுதான். ராமன், லட்சுமணன்னு இந்த மாடுகளுக்குப் பேர் வெச்சு, எங்க புள்ளைகளா வளர்க்கிறோம்" என்று நெக்குருகிப் பேசுகிறார், ராணியம்மாள்.

 கரூர் மாவட்டம், மேலப்பாளையம் நத்தமேட்டைச் சேர்ந்தவர் ராணியம்மாள், மணலுடன் சாரை சாரியாகச் செல்லும் ஆண்களின் மாட்டுவண்டிகளுக்கு மத்தியில், ஒற்றைப் பெண்ணாக ராணியம்மாள் வண்டி, தனித்தும் கம்பீரத்துடனும் நகரும் அந்தக் காட்சியைக் கண்டோம். தனது வீட்டை அடைந்து. கணவர் வீரப்பன் உதவியோடு வண்டியிலிருந்த மணலைத் தரையில் தள்ளினார். கடும் உழைப்பின் வலியைப் பெருமூச்சுவிட்டு ஆசுவாசத்துடன் பேச ஆரம்பித்தார்.

.

``நான் பொறந்த ஊரும், வாக்கப்பட்ட ஊரும் இதே மேலப்பாளையம் நத்தமேடுதான் தம்பி. பொறந்த வீட்டுலேயும் சரி,வாக்கப்பட்ட வீட்டுலயும் சரி, மூணு வேளை கஞ்சிக்கு அல்லாட்டம்தான். அமராவதி ஆத்துப் பாசனத்துல இங்கே நிலம் வெச்சுருக்கிறவங்க நல்லா விவசாயம் பார்ப்பாங்க. அதுல கூலி வேலைக்கு நானும் கணவரும் போவோம். பெருசா வருமானம் வராது. ஆனால்,ரெண்டு வேலை கஞ்சிக்குப் பிரச்னை இருக்காது. எங்களுக்கு ஒரு மகள் பொறந்தா. அவளை நல்லபடியா வளர்க்கவே கஷ்டம். அதனால, இன்னொரு குழந்தை பெத்துக்குற ஆசை இருந்தாலும், ஒண்ணே போதும்ன்னு நிறுத்திட்டோம். காலப்போக்குல அமராவதி ஆத்துல தண்ணீர் வராமல் கடும் வறட்சி. எங்களுக்குச் சோலி கிடைக்கலை.
பல நாள் பட்டினியா கெடந்திருக்கோம். அப்போதான், ஆத்துல மாட்டுவண்டி மூலம் மணல் அள்ள கூலி வேலைக்கு ஆள் தேவைன்னு கேள்விப்பட்டு அங்க போனோம். ஆத்துக்குள்ள கூடையில நிரப்பப்படுற மணலைத் தலையில் தூக்கிட்டு வந்து கரையில் இருக்கிற வண்டியில் கொட்டுறத்துக்குள்ளே உசிரு போய் திரும்ப வரும் தம்பி. அடுத்த வேளை சாப்பிடுணுமே. நம்மை நம்பி ஒரு பெண் குழந்தை இருக்காளே'னு நினைச்சுட்டுச் செய்வேன். அப்படி வேலை செஞ்சாலும் ரெண்டு வேளை சோத்துக்கே கஷ்டம். அதனால், வட்டிக்குக் கடன் வாங்கி இந்த மாடுகளை கன்னுக்குட்டியா இருந்தப்ப வாங்கினோம். வண்டியை மட்டும் வாடகைக்கு எடுத்து, மாடுகளை பூட்டி மணல் அள்ளினோம். அதுவும் கட்டுப்படியாகலை. மேற்கொண்டு கடன் வாங்கி டயர் வண்டி ஒண்ணையும் வாங்கினோம். 10 வருஷமா நாங்க சொந்தமா மணல் அள்ளுறோம். ஒருநாளைக்கு மூணு நடை மணல் அடிப்போம். அதை வித்தா 1200 ரூபாய் கிடைக்கும். மாடுகளுக்கு தினமும் பராமரிப்பு செலவே 800 ரூபாய் வந்துரும். 400 ரூபாய் கையில் நிக்கும்'' என்றபடி தொடர்கிறார், ராணியம்மாள்.


 

``ஆரம்பத்துல, அக்கம்பக்கத்துல உள்ளவங்க வயல்களில் போட்டிருக்கிற வெள்ளாமையை வீட்டுக்குக் கொண்டுவர எங்க வண்டியைச் சத்தம் பிடிப்பாங்க. நல்லது கெட்டதுகளுக்காக அசலூர் உறவுகள் வீட்டுக்குப் போய்வர வண்டியைக் கூலிக்குக் கூப்பிடுவாங்க. ஆனால், குட்டியானை வண்டி வந்த, எங்க பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. எங்களை யாரும் சீந்துறதில்லை. அதனால், மணல் அள்ளுற பொழப்பை மட்டும் பார்க்கிறோம். நான் எல்லா விஷயத்துலயும் கொஞ்சம் விவரமா இருப்பேன். அதனால், மாட்டுவண்டியை நானே ஓட்டறேன். என் கணவர் மணல்முட்டுல உட்கார்ந்து வருவார். எங்க வருமானம் அன்றாடம் செலவுக்கே பத்துறதில்லை. இந்த மாடுகளையும் வண்டியையும் வாங்கறதுக்குப் பட்ட கடனையே இன்னும் அடைக்கலை. வட்டியை மட்டும் கட்டிட்டிருக்கோம். எங்களுக்கும் என் மகளுக்கும் மூணு வேளை சோறு போடுறது இந்த மாடுகதான். இதுங்களுக்கு ராமன், லட்சுமணன்னு பேர் வெச்சு,எங்க புள்ளைங்களா பார்த்துக்கிறோம். அதுகளுக்கு ஒண்ணுன்னா எங்களுக்குத் தாங்காது. வருமானம் இல்லாத நாளிலும், நாங்க பட்டினி கெடந்தாவது, இதுகளுக்கு தீனி போட்டுருவோம். இதுகளுக்கு உடம்பு சரியில்லன்னா, மாட்டு டாக்டர்கிட்ட காண்பிச்சிருவோம். மூத்த பிள்ளைகளுக்குப் பாவம் பண்ணினா, அந்தக் குடும்பம் விளங்காது தம்பி. எங்களுக்கு மூணு வேளை சோறு போடும் இந்த மாடுங்கதான் எங்க மூத்த பிள்ளைங்க" என்றபோது, ராணியம்மாள் கரங்கள் மாடுகளின் கழுத்தை வாஞ்சையோடு தடவிகொடுக்கிறது.


 `ஆடு மாடு மேல உள்ள பாசம்... வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்' என்ற நா.முத்துகுமார் வரிகள் நினைவுக்கு வந்து நம் இதயத்தைத் தழுவுகிறது.