வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (13/08/2018)

கடைசி தொடர்பு:16:44 (13/08/2018)

''பரீட்சைக்கு முந்தைய நாள் கை மேல லாரி ஏறிடுச்சு!'' கால்பந்து நட்சத்திரம் சங்கீதா

``நைட்ல, லாரிங்க எல்லாம் போனதுக்கப்புறம்தான் நாங்க தூங்கமுடியும். என் பெரியம்மாவும் அவங்க பொண்ணும் ரோட்ல தூங்கினப்போ லாரி ஏறி செத்தே போயிட்டாங்க.''

தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கான, உலக அளவில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தில், இந்திய அணியின் கேப்டனாக ரஷ்யாவுக்குச் சென்றுவந்தவர், சென்னை வால்டாக்ஸ் தெருவைச் சேர்ந்த சங்கீதா. தற்போது, இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார். அவரிடமே பேசினேன்.

ரஷ்யாவில் சங்கீதா

``தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, இப்போ நான் என எனக்குத் தெரிஞ்சே மூணு தலைமுறையா இந்தத் தெருவோரத்தில்தான் வாழ்ந்துட்டிருக்கோம். எங்க தெருவோர ஆண்கள், கெட்டப் பழக்கங்களுக்கு ஆளாகியிருப்பாங்க. இல்லைன்னா, குடும்பத்தைவிட்டு ஓடிப்போயிடுவாங்க. என் அப்பா இதுல ரெண்டாவது ரகம். அவர் எங்களைவிட்டு ஓடிப்போனதுக்கு அப்புறம் அம்மாதான் எல்லாமே. சென்ட்ரல் பகுதியில் இருக்கும் ஹோட்டல்களில் தண்ணி பிடிச்சு ஊத்தறது, வீட்டு வேலைகளுக்குப் போறது, ஸ்டீல் பட்டறை வேலை எனக் கிடைக்கும் எல்லாத்தையும் செஞ்சு என்னையும் அக்காவையும் வளர்த்தாங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அம்மா கண்ணுல பிரச்னை வந்து, அறுவைசிகிச்சை அளவுக்குப் பெருசாயிடுச்சு. என் அக்காதான் வீட்டு வேலைக்குப் போய் என்னையும் அம்மாவையும் பார்த்துக்க ஆரம்பிச்சா. அந்த வருமானம் பத்தலை. அப்போ, நான் ஒன்பதாவது படிச்சுட்டிருந்தேன். படிப்பை விட்டுட்டு ஸ்டீல் பட்டறை வேலைக்குப் போயிட்டேன்'' என சங்கீதா இயல்பான குரலில் சொல்கிறார். நமக்கோ வலிக்கிறது.

விளையாடுகையில்

``நைட்ல, லாரிங்க எல்லாம் போனதுக்கப்புறம்தான் நாங்க தூங்கமுடியும். என் பெரியம்மாவும் அவங்க பொண்ணும் ரோட்ல தூங்கினப்போ லாரி ஏறி செத்தே போயிட்டாங்க. ஒருதடவை பரீட்சைக்கு முந்தின நாள் என் கை மேலே லாரி ஏறியிருக்கு. இந்த மாதிரி விபத்து எல்லாம் எங்களுக்கு வாடிக்கையாகிப் போச்சு. நைட்ல தூங்கிட்டிருக்கும்போது தப்பான எண்ணத்துல பக்கத்துல வந்து படுக்கும் ஜென்மங்கள் இருக்கு. பப்ளிக் டாய்லெட்ல குளிக்கப் போனால், எட்டிப் பார்க்கிறது, மொபைல்போனில் போட்டோ எடுக்கிறது என தினமும் நிறைய கடக்கிறோம். பப்ளிக் டாய்லெட்டை பூட்டினதுக்கு அப்புறம் பேட் வைக்க மறைவிடம் இல்லாமல் தவிக்கிற வலியை வார்த்தையால் சொல்ல முடியாது மேடம். 

சங்கீதா

இந்த நிலைமையில் அம்மாவுக்குக் கண்ணுல பிரச்னை வந்ததும், எங்களுக்கு உலகமே இருண்ட மாதிரி ஆகிருச்சு. அவங்களை நல்லபடியா பார்த்துக்கணும்னு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போதான், `கருணாலயா' என்கிற என்.ஜி.ஓ., தெருவோரப் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய வந்தாங்க. என்னை மறுபடியும் ஸ்கூலுக்குப் போகச்சொன்னாங்க. நான் மறுத்துட்டேன். கருணாலயாவுல இருக்கிறவங்க சாயங்காலத்தில் தெருவோர ஆம்பளை பசங்களுக்கு ஃபுட் பால் விளையாட கத்துக்கொடுப்பாங்க. நான் அதை வேடிக்கை  பார்த்துட்டு நிப்பேன். ஒருநாள், `நீயும் ஸ்கூலுக்குப் போனால், உனக்கும் ஃபுட்பால் கோச்சிங் தர்றோம்'னு சொன்னாங்க. சந்தோஷமா ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சேன்'' என்கிற சங்கீதா, பத்தாம் வகுப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்கிறார். ப்ளஸ் டூ பரீட்சை தேர்வின்போதுதான் சங்கீதாவின் கை மேல் லாரி ஏறியது. அந்த நிலையிலும் 50 சதவிகிதம் மதிப்பெண் வாங்கியிருக்கிறார்.

``நான் நல்லா ஃபுட்பால் விளையாடறதைப் பார்த்த கருணாலயா, கேர்ள்ஸ் டீம் ஒண்ணும் ஆரம்பிச்சாங்க. பகலில் பள்ளிக்கூடம், சாயங்காலத்தில் ஃபுட்பால், ராத்திரியில் தெருவிளக்கில் படிப்புன்னு இருந்தேன். ஒருதடவை தண்டையார்பேட்டை டீமின் கேப்டனா, அதிகமா ஸ்கோர் பண்ணினேன். அப்புறம், `ஹோம்லெஸ் வேர்ல்டு கப்' செலக்‌ஷனில் தேர்வானேன். அதில், தமிழ்நாட்டிலிருந்து செலக்ட்டான ஒரே ஸ்டீர்ட் சைல்டு நான்தான். நாக்பூர், கொல்கத்தா எனப் பல மாநிலங்களுக்குத் தமிழ்நாடு சார்பாக விளையாடியிருக்கேன்'' என்கிற சங்கீதா, 2018 மே மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற, `தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கால்பந்தாட்டம்' போட்டிக்கு, இந்திய அணியைத் தலைமையேற்றுச் சென்றிருக்கிறார்.

அம்மாவுடன்

``இப்போ, குயின் மேரீஸ் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் எகனாமிக்ஸ் படிக்கிறேன். தமிழ்நாட்டுல நிறைய ஸ்கூல்களில் ஸ்போர்ட்ஸ் டேவுக்கு என்னை இன்வைட் பண்றாங்க. சந்தோஷமா கலந்துக்கிறேன். சிலர், `ஸ்ட்ரீட் சில்ட்ரனுக்கான ஃபுட்பால் விளையாட்டுக்குப் பெரிய மதிப்பு கிடையாது. மாவட்ட அளவுல, மாநில அளவுல விளையாடணும். அப்போதான், உலக அளவிலான போட்டிகளில் விளையாட முடியும்'னு சொன்னாங்க. கடுமையா முயற்சி பண்ணி, ஜூனியர் லெவல் சென்னை மாவட்ட டீமுக்குத் தேர்வாகி இருக்கேன். அடுத்து ஸ்டேட், நேஷனல்னு விளையாடுவேன்'' என்கிற சங்கீதா குரலில் நம்பிக்கையும் உறுதியும் சுடர்விட்டது.

வீதி தாண்டி விண்ணை எட்ட வாழ்த்துகள் பெண்ணே! 

 


டிரெண்டிங் @ விகடன்