நெகிழி இல்லா நெல்லை... மாவட்ட நிர்வாகம் புது முயற்சி!

தமிழக அரசு வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளது. பால் மற்றும் பால் பொருள்களை பேக் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், மருந்துப்பொருள்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

Nellai no plastic

திருநெல்வேலி மாவட்டத்தில் பல மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டு முயற்சியால் எளிதில் மக்கக் கூடிய பொருள்களான துணிப்பை, செய்தித்தாள்கள், சணல் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு வகையான பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களது முதல் விற்பனையைத் தொடங்கினர்.

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் விற்பனை நடைபெறுவதைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்கள்  ``இந்த சுதந்திர தின விழா அன்று திருநெல்வேலியில் முற்றிலும் பிளாஸ்டிக் தடை செய்வதற்கான அறிவிப்பு வருமா?" எனக் கேட்டனர். அதற்கு ``அது மாதிரியான திட்டம் இல்லை. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து துணிப்பைகளைப் பயன்படுத்தும் எண்ணம் மக்கள் மனங்களில் வர வேண்டும். அதை நோக்கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என ஆட்சியர் பதிலளித்தார்.

Nellai no plastic

மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகளை அணுகியபோது ``அரசு பிளாஸ்டிக் தடையை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. அதனால் நாங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்தோம். முதற் கட்டமாக துணிப்பைகள், காகிதப்பைகள், சணல் பைகள் என உற்பத்தி செய்து இன்று விற்பனையைத் தொடங்கியுள்ளோம். மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பொருத்தே உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். " என்றார்கள்.

Nellai no plastic

துணிப்பைகள் ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும் சணல் பைகள் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும் பல்வேறு வகைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. துவக்கம் முதலே மக்கள் ஆர்வத்துடன் பைகளை வாங்கிச் சென்றனர். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இது மாதிரியான துணிப்பைகளின் உற்பத்தியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பதே அங்கிருந்த மக்களின் கருத்தாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!