3-வது குழந்தைக்குத் தாயாகும் ரம்பா- கோலாகலமாக நடந்த சீமந்தம்! | Actress Rambha shared bright and beautiful pictures from her baby shower

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (14/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (14/08/2018)

3-வது குழந்தைக்குத் தாயாகும் ரம்பா- கோலாகலமாக நடந்த சீமந்தம்!

கணவருடன் ரம்பா

மூன்றாவது குழந்தைக்குத் தாயாகிறார் நடிகை ரம்பா. அவரின், வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் முன்னணியாக வலம்வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தைத் திரட்டியவர். இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்களுக்கு, லான்யா மற்றும் சாஷா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ரம்பா

முன்னதாக, திருமணமான சில ஆண்டுகளில் கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், விவாகரத்து கோரினார் ரம்பாவின் கணவர். இந்தநிலையில், கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் நடிகை ரம்பா. இதில் தன்னுடைய கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து, நடந்த சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர். தற்போது, கனடாவில் வசித்துவரும் ரம்பா மூன்றாவது குழந்தைக்குத் தாயாக உள்ளார். அதனால், உறவினர்கள் புடைசூழ, இந்திரன் பத்மநாதன் தன் மனைவிக்குக் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிய ரம்பா

அப்போது, எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடும் காட்சிகளை, தனது இஸ்டாகிராமில் ரம்பா பதிவு செய்துள்ளார். அதனுடன், `எனது கடந்த காலத்தைத் திருப்தியுடன் நான் மீண்டும் பார்க்கிறேன், அதேவேளையில் என் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறேன்' எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரம்பா வெளியிட்டுள்ள புகைப்படங்களில், நீல நிறப்புடவையில், கைகள் நிறைய வளையல் அணிந்து ரம்மியமாக உள்ளார். இந்தச் சீமந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டரும் கலந்துகொண்டுள்ளார்.