கண் நோய்களைத் துல்லியமாக கண்டறியும் மென்பொருள்! - கூகுள் அசத்தல்

கண்ணில் தோன்றும் 50 நோய்களை செயற்கை நுண்ணறிவின் மூலம் மிக துல்லியமாக கண்டறியும் மென்பொருளைக் கூகுள் நிறுவனம் தயாரித்து அசத்தியுள்ளது. 

கூகுள்

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான டீப் மைண்ட் (DeepMind) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் லண்டனில் உள்ள மோர்ஃபைல்டு கண் மருத்துவமனை மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதக் கண்களில் ஏற்படும் 50 நோய்களைக் கண்டறியும் அதிநவீன மென்பொருளைத் தயாரித்துள்ளனர். 

இந்த மென்பொருள் கண்ணில் உள்ள விழித்திரையை ஸ்கேன் செய்து அதன் மூலம் நோய்களைக் கண்டறியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மற்றும் இவற்றின் செயல்பாடுகள் தி ஜெர்னல் நேட்சர் மெடிசின் (The Journal Nature Medicine) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவு நோயாளிகளின் கண்களை 3D முறையில் ஸ்கேன் செய்து அதில் குறைபாடுகள் இருந்தால் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் வேலையை மட்டுமே செய்கிறது. மேலும் நோய் எந்த அளவு பாதிப்புள்ளாக்கியுள்ளது என்ற அளவையும் இது துல்லியமாக கணித்துவிடுகிறது. முன்னதாக இந்த மென்பொருளை வைத்து சுமார் 14,884 பேரின் கண்களில் சோதனை செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. 

மனிதர்களின் கண்களில் உள்ள விழித்திரையை ஏற்கும் இந்த செயற்கை நுண்ணறிவு பல பாகங்களைக் கொண்ட ஓ.சி.டி ஸ்கேனுக்கு உட்படுத்தப்படுகிறது. பிறகு அதன் மூலம் எடுக்கப்படும் முப்பரிமாண மேப் மூலம் கண்ணில் உள்ள நோயின் பெயர், அளவு, சிகிச்சை பெறும் முறை போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிவித்துவிடுகிறது. இந்த நுண்ணறிவு இன்னும் அதிகாரபூர்வமாக எங்கும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் துல்லியமான முறையில் நோயின் அளவைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!