சென்னையில் களைகட்டிய சூஃபி இசை தஜல்லி! | Article about Sufi Music Concert TAJALEE -2018 in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (14/08/2018)

கடைசி தொடர்பு:18:32 (14/08/2018)

சென்னையில் களைகட்டிய சூஃபி இசை தஜல்லி!

இசை, மொழி, சமயம் கடந்து அந்த இசை அனைவரின் மனதிலும் நிறைந்தது. மொத்த நிகழ்வில் ஒரு பாடல் மட்டுமே தமிழில் பாடப்பட்டது என்றாலும், நிகழ்ச்சி முடியும் வரை அரங்கம் நிறைந்தே இருந்தது

சென்னையில் களைகட்டிய சூஃபி இசை தஜல்லி!

உள்ளம் நெகிழும் ஒலி அலைகளின் வழியே நமக்கான உற்சாகத்தை அளிக்கவல்லது இசை. அதில் சூஃபி இசையின் பங்கு அளப்பரியது. இஸ்லாமிய மரபில் வந்திருந்தாலும் மதங்களைக் கடந்து சூஃபி இசையின் மீதான காதல் பரவியிருக்கிறது. அதுவும் 90-களுக்குப் பிந்தைய இன்றைய இளம் தலைமுறையினருக்கு சூஃபி இசையின் அறிமுகம் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூலமே கிடைத்திருக்கும். `ஜோதா அக்பர்' படத்தில் ரஹ்மான் இசையமைத்த `க்வாஜா எந்தன் க்வாஜா...’ பாடல்தான் பலருக்கும் சூஃபி இசையின் முதல் அறிமுகமாக இருக்கும். அது தொடங்கி, `ராக்ஸ்டார்' திரைப்படத்தின் குன் ஃபாயா, மர்ஹபா என ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி ஆல்பம் அனைத்தும் சூப்பர் ஹிட். அவ்வாறு சூஃபி இசையின் மீதிருந்த தாகத்துக்கு விருந்தாக அமைந்தது `தஜல்லி – 2018.'

சூஃபி

சென்னைப் பல்கலைக்கழக அரபுத் துறையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் `கீற்று' பதிப்பகத்தினர் இணைந்து ஆழ்வார்பேட்டை ரஷ்யக் கலாசார மையத்தில் `தஜல்லி - 2018’ எனும் சூஃபி இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கேரளாவைச் சேர்ந்த சூஃபி இசைப் பாடகர்களான சமீர் பின்ஸி, இமாம் மஜ்பூர் மற்றும் அவர்களின் இசைக் குழுவினர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழ் உட்பட நான்கு மொழிகளிலிருந்தும் பாடல்கள் இடம்பெற்றன.

சூஃபி

கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சமீர் பின்ஸி மற்றும் இமாம் மஜ்பூர், கடந்த 12 ஆண்டுகளாக சூஃபி இசைத் துறையில் இயங்கிவருகின்றனர். பல்வேறு நாடுகளில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்கள், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகர் நாசர், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி முதலானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய கீற்றுப் பதிப்பகத்தின் ஹாமிம் முஸ்தஃபா, ``சூஃபிச் சிந்தனை உடையவர்கள் மத எல்லைகளை மிக எளிதாகக் கடந்துவிடுவர். சகிப்புத்தன்மையையும் இணக்கட்டுப்பாட்டையும் மக்களிடையே ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகவும் அவசியம்” என்றார்.

இசை

அடுத்து பேசிய பேராசிரியர் அப்துல் ரஹ்மான், ``சூஃபிசம் என்பது, தெய்விகத்தைத் தேடிய ஒரு பயணம். முரண்பாடுகள், மோதல்கள் நிறைந்த இந்த உலகில் சூஃபிசம் மூலம் ஒற்றுமைக்கான ஓர் அடித்தளத்தை அமைத்து, மனிதன் வகுத்த எல்லைகளைக் கடந்து செல்வதை உணர்கிறோம்” என்றார்.

இசை

பாடல்களின் நடுவே திருக்குறள், ரூமி கவிதைகள் என தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற பல மொழிக்கவிதைகளும் இணைத்து அமைக்கப்பட்ட பாடல்கள் மேலும் சுவை சேர்த்தன. பாரசீகக் கவி ஜலாலுதீன் ரூமி வரிகளுடன் தொடங்கிய இசை நிகழ்ச்சியின் முதல் பாடலாக `யார் ஹோ ஹம்னே ஜா பஜா தேகா...' பாடினர். பிறகு, தொடர்ச்சியாக உருது, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களிடையே ரூமி கவிதைகள், வள்ளுவரின் திருக்குறள், நுஸ்ரத் ஃபதே அலி கான் பாடல்கள் எனச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மானின் `க்வாஜா...’ பாடல் வந்தபோது உச்சம் பெற்றது. இறுதியாக அவர்கள் பாடிய `மஸ்த் கலந்தர்’ பாடலுக்கு அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது. அதே உற்சாகத்துடனே அடுத்த நிகழ்ச்சியில் விரைவில் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெற்றனர்.

மொழி, சமயம் கடந்து  அந்த இசை அனைவரின் மனதிலும் நிறைந்தது. மொத்த நிகழ்வில் ஒரு பாடல் மட்டுமே தமிழில் பாடப்பட்டது. இருந்தும் நிகழ்ச்சி முடியும் வரை அரங்கம் நிறைந்தே இருந்தது. அதுதான் இசையின் பலம். மழை சூழ்ந்த சென்னையின் இனிமையான ஒரு மாலைப்பொழுதை, சூஃபி இசையும் சூழந்துகொண்டது.


டிரெண்டிங் @ விகடன்