‘சுவாசிக்க மறந்த நிமிடங்கள் அது’ - புகைப்படக் கலைஞரின் ஓர் உணர்ச்சிகரப் பயணம்! | US Suicide Survivor underwent Historic Face Transplant

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (17/08/2018)

கடைசி தொடர்பு:15:10 (17/08/2018)

‘சுவாசிக்க மறந்த நிமிடங்கள் அது’ - புகைப்படக் கலைஞரின் ஓர் உணர்ச்சிகரப் பயணம்!

கேத்தி ஸ்டெபிள்ஃபில்டு என்ற 18 வயது இளம் பெண், அதிக மன அழுத்தம் காரணமாகத் தன் வீட்டில் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அவரின் முயற்சி கை கொடுக்கவில்லை. மருத்துவர்களால் கேத்தி காப்பாற்றப்பட்டார். ஆனால் அவரின் மூக்கு, வாய் மற்றும் கண் பகுதிகள் சிதைந்துவிட்டன. மூச்சுவிடுவதில் சிரமம், உணவு உண்ண முடியாத நிலையில் இரண்டு வருடங்கள் தவித்துவந்த கேத்திக்கு அவரின் பெற்றோர்கள் முழு ஆதரவளிக்கத் தொடங்கினர். அவர்களின் முயற்சியால், தற்போது கேத்திக்கு முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு முதல் இதுவரை அவருக்கு 17 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.  

கேத்தி

இரண்டு ஆண்டுகளாகத் தேடிய பிறகு, தற்போதுதான் கேத்திக்கு ஏற்ற கொடையாளர் கிடைத்துள்ளார். சுமார் 31 மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு கேத்தி புதுமையடைந்துள்ளார். அவருக்கு முழுமையான முகம் கிடைத்துள்ளது.  அவருக்கு அறுவை சிகிச்சைசெய்யும் முன், பல தொழில்நுட்பங்கள் மற்றும் 3D பிரின்டிங்ஸ் மூலம் பலமுறை சோதனை செய்யப்பட்டது. கேத்தி, தற்போது தன் பெற்றோர்களுடன் ஒரு புதுமையான வாழ்வைத் தொடங்கியுள்ளார். உலகில், நாற்பதாவதாக முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்தவர் இவர். சவாலான காரியத்தை ஏற்று, அதில் வெற்றிபெற்றுள்ளனர் க்லிவெலாண்டு மருத்துவமனை மருத்துவர்கள். 

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், மியாமி பகுதியில் வாழும் கேத்தி ஸ்டெபிள்ஃபில்டின் வாழ்க்கையை ஆவணப் படமாக்க நேஷனல் ஜியோகிரஃபிக் (National Geographic) தொலைக்காட்சியின் முதுபெரும் புகைப்படக் கலைஞரான லென் ஜான்சன் ( Lynn Johnson) கேத்தியின் வாழ்க்கையில் அவருடன் சில காலம் பயணித்துள்ளார். கேத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு அறுவைசிகிச்சை நடந்து முடியும் வரை அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படமெடுத்துள்ளார். கேத்தியின் வாழ்வில் மறக்கமுடியாத சில தருணங்களை அழகாக்கியுள்ளார். இவருடன் மேகி ஸ்டெபர் என்ற புகைப்படக் கலைஞரும் இணைந்து செயல்பட்டுள்ளார். ஆனால், இவர் இரண்டு வருடங்களாக கேத்தியுடன் பயணித்துள்ளார்.  

‘நாங்கள் அனைவரும் அறுவைசிகிச்சை அறையில் இருந்தோம். கேத்தியின் அறுவைசிகிச்சைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. நான், அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாகப் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது, உறுப்பு தானம் செய்பவரின் முகத்தை மட்டும் தனியாக எடுத்து, மருத்துவர்கள் ஒரு டேபிளில் கிடத்தினர். அந்த நொடி, அறை முழுவதும் மிகவும் அமைதியாகிவிட்டது. நான் சுவாசிக்க மறந்த நிமிடம் அது. அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். சற்று அமைதிக்குப் பிறகு, மருத்துவர்கள் அறுவைசிகிச்சைக்கான விவாதத்தைத் தொடங்கினர். உடனடியாக நானும் சுதாரித்துக்கொண்டு என் வேலையைச் செய்யத்தொடங்கினேன்’ என லென் ஜான்சன் அந்த நிகழ்வில் இருந்து இன்னும் வெளிவராத திகைப்புடன் கூறினார்.

இவரை அடுத்து மேகி பேசும்போது, ‘' கேத்தியின் பெற்றோர்கள் அவர்களின் அனைத்து உணர்வுகளையும் என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள். நான் அவர்களின் குடும்ப உறுப்பினராக மாறத் தொடங்கினேன். நான் அப்போது துபாயில் இருந்தேன். கேத்திக்கு ஏற்ற உறுப்புதானம் செய்வபர் கிடைத்துவிட்டார் என எனக்குத் தகவல் வந்தது. நீ இங்கு வந்த பிறகுதான் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என கேத்தியின் பெற்றோர்கள் என்னிடம் கூறினர். அதைக் கேட்டு எனக்கு அழுகை வந்தது. எனக்காக அவர்கள் ஏன் அவ்வாறு கூறவேண்டும்? ரோப் மற்றும் அலெஷா தம்பதிகள் சிறந்த போராளிகள். அவர்கள் கழுகுகளைப் போன்றவர்கள். தன் சிறிய குஞ்சுகளைக் காப்பாற்ற மிகவும் போராடியவர்கள். அவர்களின் போராட்டத்துக்கான பலன் கிடைத்துவிட்டது.

நானும் லென் ஜான்சனும் சிறந்த நண்பர்கள். இருவரும் இணைந்துதான் இந்த ஆவணப்படங்களை எடுத்தோம். ஆனால், அறுவை சிகிச்சையின்போது ஜான்சன் மட்டும் உள்ளே இருந்தார். நான் வெளியில் கேத்தியின் பெற்றோர்களுடன் இருந்தேன். ஜான்சன் உணர்ச்சிமிக்க புகைப்படக் கலைகஞர். கேத்தியை வைத்து அவர் எடுத்த படம், கேத்தியின் வாழ்நாளில் மறக்கமுடியாததாக இருக்கும். இது, அவரின் புதுவாழ்வுக்கு வழிசெய்யும்’' என்று பேசினார்.

நேஷனல் ஜியோகிரஃபிக் இதழில் கேத்தி ஸ்டெபிள்ஃபில்டு பற்றிய கதை மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அவரின் முகம் அட்டைப் படத்திலும் இடம்பெற்றுள்ளது.

News & Photo Credits : National Geographic