வண்ணதாசன்... காலத்தின் தடங்களை சொல் வண்ணங்களால் குழைத்த ஓவியன்! #HBDVannadasan

கல்மண்டபத் தூண்கள், பறவையின் சிறகு, பூனையின் மியாவ், வாதாம் இலை, நாடோடியின் கால்தடம் எனக் காலத்தின் மீதான அத்தனை தடங்களையும் சொற்களால் வண்ணம் தீட்டிய ஓவியன் வண்ணதாசன்.

வண்ணதாசன்... காலத்தின் தடங்களை சொல் வண்ணங்களால் குழைத்த  ஓவியன்! #HBDVannadasan

`தானாய் முளைத்த விதை என்கிறார்கள்.

யாரோ வீசிய விதையிலிருந்துதானே...'

எழுத்தாளர் வண்ணதாசனின் வரிகள் இவை. உலகில் உள்ள உயிரற்றவை, உயிருள்ளவை அனைத்தையும்  இயற்கை தன் தொப்புள்கொடியால் பிணைத்துவைத்திருக்கிறது. ஒன்றோடொன்று தொடர்புடைய அந்தக் கண்ணிதான் பிரபஞ்சத்தின் அச்சை இறுகப் பிணைத்துச் சுற்றவைக்கிறது. காலம், உயிருள்ளவற்றிடமும் உயிரற்றவற்றிடம் சமநிலையைக் கலைத்துப்போடுகிறது. வண்ணதாசன் உயிருள்ள, உயிரற்ற என்ற அந்தப் பாகுபாடுகளை அன்பின் தராசில் சமமாக்குபவர். குழந்தைகள் காத்திருக்கும் பேருந்துநிலையத்தில் குழந்தைகளைப் பார்க்கும் கண்கொண்டே புளியமரத்தையும், பயணிகள் இருக்கையையும் பார்க்கும் கண்கள் வாய்க்கப்பெற்றவர்.

வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நிகழ்த்தும் தரிசனத்தை வழிப்போக்கனாய்ப் பார்ப்பதுதான் அவரது எழுத்துகள். பெண்பிள்ளைக்கு உச்சி வகிடெடுத்து, தலை சீவிவிட்டு ரிப்பன் கட்டி பள்ளிக்கு அனுப்பிய பிறகு,  சீப்பைத் தலையில் செருகியபடியே கை அசைக்கும் தாயின் சித்திரத்தை எழுத்தில் நிறைப்பவர். முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவைத்த மகனின் புகைப்படத்தை, சட்டைப்பையில் பத்திரப்படுத்தியபடி செல்லும் முதியவரின் துயரமான அன்பின் நியாயத்தை வெளிப்படுத்துபவர். கண்ணீர் எப்படி ஆனந்தம், துக்கம், கோபம் எனப் பல உணர்வுகளின் அறிவிக்கப்படாத பிரதிநிதியாகிறதோ, அதைப்போல்தான் வண்ணதாசனின் எழுத்துகளும். கல்மண்டபத் தூண்கள், தபால்பெட்டிகள், பறவையின் சிறகு, பூனையின் மியாவ், வாதாம் மர இலை, நாடோடியின் கால் தடம் எனக்  காலத்தின் மீதான அத்தனை தடங்களையும் சொற்களால் வண்ணம் தீட்டிய ஓவியன். 

வண்ணதாசன்

வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். 1946-ம் ஆண்டில் திருநெல்வேலியில் பிறந்தவர். இவருடைய தந்தை, எழுத்தாளர் தி.க.சிவசங்கரன். வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளையும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதுபவர். இவரது `ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. நமக்குப் பிடித்தமானவர்களுக்கு நாம் எழுதும் கடிதம்போல மனதுக்கு நெருக்கமானவை இவரது எழுத்துகள். கவிதை, சிறுகதை என இரண்டு தளங்களிலும் தனக்கான பெரும் வாசகர்களைக் கொண்டுள்ளார்.

இவரது பிரபலமான கவிதைகளில் ஒன்று...


தொலைந்த வெளிச்சம் 

`கார்த்திகை ராத்திரி 
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்பும் முன் 
அணைந்துவிடுகின்றது 
முதல் விளக்குகளுள் ஒன்று 
எரிகிறபோது பார்க்காமல் 
எப்போதுமே 
அணைந்த பிறகுதான் 
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம் 
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட 
அணைந்த பொழுதில் 
தொலைத்த வெளிச்சம் 
பரவுகிறது 
மனதில் பிரகாசமாக.'

எழுத்தாளன் தன் எழுத்துகளின்  வழியே மனித மனங்களை விசாரணை செய்கிறான். சொல்லித் தீராத அன்பை, அழுது தீர்க்க முடியாத சோகத்தை, மீளாத்தனிமையை, பொங்கும் கருணையை தன் எழுத்துகளின் மூலம் ஆசுவாசப்படுத்துபவன் அல்லது முயல்பவன் வாசகர்களுக்கு நெருக்கமாகிறான். வண்ணதாசன் அப்படியான ஒரு கவிஞர்.

அவரது கவிதை, சிறகு முளைக்காத சிறு பறவைபோல உள்ளங்கையில் தாங்கக்கூடியது. அந்த மென்மையான இளஞ்சூடு, நம்மை பல நேரத்தில் பரிசுத்தப்படுத்துகிறது; சில நேரத்தில் கேள்வி கேட்கிறது; சில நேரம் நம் மனதை உலுக்கிச்செல்கிறது. வண்ணதாசன் ஓவியம் வரைவதில் ஆர்வமிக்கவர். அவரது எழுத்துகளை உற்றுப்பார்க்கையில் அவை நிறங்களின் கலவையாகவே புலப்படும். இவரது `பூனை எழுதிய அறை ' என்ற கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை,  `தேக்கும் பூக்கும்' என்பதுதான். எழுத்தாளனுக்கு அதிலும் கவிஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே சொற்களைக் கையாள்வதுதான். அதை லாகவமாகக் கையாளத் தெரிந்தவர் வண்ணதாசன்.

இவரது `தனுமை' சிறுகதை, தமிழில் வெளிவந்த மிக முக்கியமான சிறுகதையாக பலராலும் கூறப்படுகிறது. நாம் தினமும் கவனிக்க மறந்து கடந்து செல்லும் எளியவர்கள், நம் வீட்டில் உள்ள நம் உறவுகள்தாம் அவரின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள். அபி, பிரம்மநாயகம், நெல்லையப்பர் கோயில் யானை, விசில் அடித்துக்கொண்டே வாகனத்தை ஓட்டும் செல்வராஜ், போஸ்ட்மேன்கள் என அவரது கதாபாத்திரங்கள் தன்னளவிலிருந்து நம் எல்லோரையும் ஞாபகப்படுத்தும். 

வண்ணதாசன்

`சைக்கிளில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களைவிடவும்
நசுங்கிப்போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை!'

இந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ள `சக மனிதன் மீதான அக்கறை'தான் வண்ணதாசனின் எழுத்துகள். கோயிலில் எலுமிச்சம்பழத்தைத் திருப்பி ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளைப்போல, அநாதை இல்லத்தின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் விவிலிய வாசகங்களைப்போல, உயிர்களின் கண்கள் மூடிய பிரார்த்தனைதான் வண்ணதாசனின் எழுத்துகள். அவை அன்புகொண்டு இந்த உலகின் அத்தனை அபத்தங்களையும் துடைக்க முயல்கிறது.

`அகம் புறம்' கட்டுரைத் தொகுப்பில் வண்ணதாசன் குறிப்பிட்டிருப்பவை. 

`வாழ்வில் எல்லாம் முக்கியமானவை; எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும், எல்லோரையும்விட என் எழுத்து அவ்வளவு ஒன்றும் முக்கியத்துவம் உடையதல்ல என்பதை உணர்ந்தே,  இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன். 

மத்தி என்றால் நடு அல்ல. சமன். நான் எப்போதும் சமவெளியில்.'

பிறந்த நாள் வாழ்த்துகள் கவிஞரே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!