`கதறல் சத்தம் கேட்டது'- வெள்ளத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றிய அந்த நிமிடத்தை விளக்கும் மாற்றுத்திறனாளி

தென்மேற்குப் பருவமழையின் ருத்ர தாண்டவத்தால், கேரளா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. தங்கள் உடைமைகளை இழந்து வாடும் மக்களுக்கு உதவ, அண்டை மாநிலங்கள் உலக நாடுகள் என உதவிக் கரம் நீண்டு வருகிறது. 

கேரளா வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு மத்தியில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கேரளா குறித்துப் பல நெகிழ்ச்சியான கதைகளும் உலா வருகின்றன. அப்படியான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.

செங்கன்னூர் மாவட்டம், அரட்டுப்புழா ஊரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). மாற்றுத் திறனாளியான இவர், கால்களால் நடக்க இயலாதவர். இந்த நிலையிலும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார். இது குறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், `செங்கன்னூர் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. அப்போது, என்னைக் காப்பாற்றுங்கள் என்ற சத்தம் கேட்டது. அந்த தருணத்தில் என்னைப் பார்த்த அப்பெண், தன்னைக் காப்பாற்ற இவரால் முடியாது என்று நிச்சயம் நினைத்திருப்பார். ஏன் என்றால் எனக்குத்தான் கால்கள் சரியாக இல்லையே. ஆனால், உயிருக்குப் போராடிய பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதிலிருந்தது. உடனடியாக, வாழைமரம் மற்றும் மரப் பட்டை அமைக்கப்பட்ட தற்காலிக படகுபோல் ஒன்றைச் செய்தேன். அதன் மூலம் அவரைக் காப்பாற்றினேன்' என்று கூறினார்.

இந்தப் பேட்டியின்போது செய்தியாளர், ``உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்களேன்'' என்று கேட்டுள்ளார். `90 வயது நிரம்பிய தாயுடன் ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறேன். வெள்ளத்தால் என் வீடு முழுவதும் சேரும் சகதியுமாக இருக்கிறது. நான் உள்ளே செல்லமுடியாது. இதை நானே சுத்தப்படுத்த முடியாது. எல்லாவற்றையும் இழந்து விட்டேன்' என்று உருக்கமாக கூறியுள்ளார் சின்னத்துரை. 

மாற்றுத்திறனாளியால் காப்பாற்றப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், `நான் ஒரு இதய நோயாளி. அதனால், என் மனைவியையும் அழைத்துக்கொண்டு என்னால் வெள்ளத்தில் நீந்த முடியவில்லை. அப்போதுதான், துரை என் மனைவியைக் காப்பாற்ற வந்தார்' என நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். இந்த இயற்கை பேரிடர் கேரளாவைப் புரட்டிப்போட்டது மட்டுமல்லாமல் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்களையும் நிகழச் செய்துவிட்டது.

sources - NDTV 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!