ரூ. 6,100 முதல் 50,000 வரை... இந்தியாவில் கார்களின் விலை உயர்வு விவரம்! | Car Manufacturers Hike the Prices of Their Cars!

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (23/08/2018)

கடைசி தொடர்பு:19:32 (23/08/2018)

ரூ. 6,100 முதல் 50,000 வரை... இந்தியாவில் கார்களின் விலை உயர்வு விவரம்!

எந்தெந்த நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை எவ்வளவு உயர்த்தியுள்ளன என்பதைப் பார்ப்போம். 

பெட்ரோல்/டீசல் விலைகள், தினசரி உயர்ந்துகொண்டே செல்கின்றன. இதனால் கார் வாங்கும் ஐடியாவில் இருப்பவர்கள் என்ன கார் வாங்கலாம் என யோசிப்பது ஒருபுறம் என்றால், அது பெட்ரோலா/டீசலா என்பதைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். மறுபுறத்தில் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள், தமது கார்களின் விலைகளை இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அதிகரித்துவிட்டார்கள்! இதற்கு ஏற்றம் கண்டிருக்கும் பொருள்களின் மீதான சுங்க வரி, கார் தயாரிக்கத் தேவைப்படும் உலோகங்கள், பிளாஸ்டிக், ரப்பர், உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகிறது. எந்தெந்த நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை எவ்வளவு உயர்த்தியுள்ளன என்பதைப் பார்ப்போம். 

மாருதி சுஸூகி

Price Hike

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துவரும் மாருதி சுஸூகி, தனது கார்களின் விலையை 6,100 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. இதற்கு கார் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களின் விலை, சீரற்ற அந்நியச் செலாவணி, விநியோகஸ்தர்களின் கமிஷன், லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை ஏற்றம் கண்டிருப்பதே காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று அறிமுகமான சியாஸுக்கு இதனால் பாதிப்பில்லை. 

ஹூண்டாய்

கார்

தான் சமீபத்தில் அறிமுகப்படுத்திய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் கிராண்ட் i10 தவிர, தான் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து கார்களின் விலையையும் 2 சதவிகிதம் ஏற்றியிருக்கிறது ஹூண்டாய். இதுவே கிராண்டி i10 காரை பொறுத்தமட்டில், விலை உயர்வு 3 சதவிகிதமாக இருக்கிறது. இதனால் வேரியன்ட் மற்றும் இன்ஜினுக்கு ஏற்ப 14,000 முதல் 22,000 ரூபாய் வரை அந்தக் காரின் விலை அதிகரித்திருக்கிறது. இது இந்த வருடத்தில் ஹூண்டாயின் இரண்டாவது விலை உயர்வு என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

ஹோண்டா

கார்

ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப விலையை 10,000 முதல் 35,000 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது ஹோண்டா. இதில் சமீபத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய முற்றிலும் புதிய அமேஸின் விலை, அனைத்து வேரியன்ட்டிலும் சராசரியாக 20,000 ரூபாய் ஏறியிருக்கிறது. இந்தக் காரை அறிமுக விலையில் (முதல் 20,000 புக்கிங்களுக்கு) ஹோண்டா களமிறக்கியது தெரிந்ததே. ஆனால், மூன்று மாதத்தில் 30,000 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மஹிந்திரா

Price Hike

தனது பாசஞ்சர் கார்களின் விலையை, 2 சதவிகிதம் அல்லது 30,000 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது மஹிந்திரா. தொடர்ந்து அதிகரித்துவரும் மூலப்பொருள்களின் விலையே (HR steel: +3.20%, CR steel: +3.97%, Pig Iron: +3.41%, Virgin Aluminium: +9.26%) இதற்கான காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மஹிந்திரா இந்த ஆண்டில் அறிமுகப்படுத்திய XUV 5OO ஃபேஸ்லிஃப்ட் மற்றும் TUV 3OO ப்ளஸ் காரின் விலைகள் ஏறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டாடா

Price Hike

தனது கார்களின் விலையை 2.2 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது டாடா. இதற்கு மூலப்பொருள்களின் விலை ஏற்றம் கண்டிருப்பதே காரணம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது முறையாக தனது கார்களின் விலையை டாடா உயர்த்தியிருக்கிறது.

ஃபோர்டு

Price Hike

தனது கார்களின் விலையை 1 முதல் 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது ஃபோர்டு. சீரற்ற அந்நியச் செலாவணி மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வே இதற்கான காரணம் எனச் சொல்லப்படுகிறது. கார் தயாரிக்கப் பயன்படும் உலோகங்களான ஸ்டீல் மற்றும் அலுமினியத்தின் விலை ஏறியிருப்பதே இதில் பெரும்பங்குகொண்டுள்ளது. இவற்றைக் களையும்விதமாக, தான் தயாரிக்கும் கார்களில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு உதிரிப்பாகங்களின் அளவை அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவுசெய்திருக்கிறது. ஃப்ரிஸ்டைல், இதற்கான சிறந்த உதாரணம்.

மெர்சிடீஸ் பென்ஸ்

Price Hike

லக்ஸூரி கார் பிரிவில் அதிக கார்களை விற்பனை செய்துவரும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதம் முதலே தனது கார்களின் விலைகள் 4 சதவிகிதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மூலப்பொருள்களின் விலை, அந்நியச் செலாவணி, சர்வதேச அரசியல் நிலைப்பாடு காரணமாக, இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

இசுஸூ

Price Hike

தனது டி-மேக்ஸ் சீரிஸ் வாகனங்களின் விலையை, வேரியன்ட் மற்றும் மாடலுக்கு ஏற்ப, 2 முதல் 3 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது இசுஸூ. செப்டம்பர் மாதம் முதல் அமலுக்குவரும் இந்த விலை உயர்வு காரணமாக, கமர்ஷியல் மாடல்களின் (S-Cab & Regular Cab) விலை 20,000 ரூபாயும்  பாசஞ்சர் மாடல்களின் (V-Cross & V-Cross High) விலை 50,000 ரூபாயும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்களின் விலை மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் ஆகியவை இதற்கான காரணங்களாக இசுஸூ தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்