டிவிஎஸ்-ஸின் புதிய 110cc கம்யூட்டர் பைக் ரேடியான்

ரூ.48,400 எனும் விலையில் டிவிஎஸ் ரேடியான எனும் புதிய 110சிசி கம்யூட்டர் பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. எப்படி இருக்கிறது ரேடியான்?

டிவிஎஸ் மோட்டார்ஸ், ரேடியான் எனும் புதிய 110சிசி கம்யூட்டர் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது இருக்கும் கம்யூட்டர் பைக்குகளைவிட ஸ்டைலாகவும், வித்தியாசமான நிறங்களிலும் இருக்கும் ரேடியான், 25 முதல் 35 வயது உள்ள டவுன் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்காக உருவாக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் டிவிஎஸ் பொறியாளர்கள். 

டிவிஎஸ் ரேடியான்

ஸ்டார் சிட்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருக்கும் அதே டியூரா லைஃப் இன்ஜின்தான் இந்த பைக்கிலும் வருகிறது. ஆனால், இந்த இன்ஜின் 8.28 bhp பவரையும், 8.7 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஸ்டைல், மைலேஜ், அதிக கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் குறைந்த விலையில் ப்ரீமியம் குவாலிட்டி வேண்டும் என்பவர்களுக்கு, ரேடியான் சரியான சாய்ஸாக இருக்கும். 

தங்க நிற இன்ஜின்

டேங் பேடுடன் வரும் 10 லிட்டர் பெட்ரோல் டேங்கின் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தாலும், மற்ற பாகங்கள் வழக்கமான கம்யூட்டர் ஸ்டைலில்தான் உள்ளன. ரியர் ஷாக் அப்சார்பர், கேரியர், எக்ஸாஸ்ட், கிராஷ் கார்டு, ஹெட்லைட் என அதிகப்படியான குரேம் ஃபினிஷிங்கில் பாத்திரக்கடை போல பளிச்சிடுகிறது ரேடியான். இன்ஜின் மட்டும் தங்க நிறத்தில் தனியாகத் தெரிகிறது. சைடு மற்றும் ரியர் பேனல்கள், பாக்ஸ் டிசைனில் உள்ளன. டிவிஎஸ் விக்டரின் டிசைனைப் போலவே உள்ளது ரேடியானின் ஹெட்லைட் ஹவுசிங். இதில், ஹேலோஜன் லைட் மற்றும்  LED DRL வருகின்றன.

கிரோம் அதிகம்

கம்யூட்டர் செக்மென்டில் இருப்பதிலேயே பெரிய சீட் ரேடியானில்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள் டிவிஎஸ் நிறுவனத்தினர். இன்ஜின் போல சீட்டும் பிரவுன் நிறத்தில் தனித்துத் தெரிகிறது. டிவிஎஸ் ஜூபிட்டரில் வரும் டியூரா கூல் சீட் கவர் இதில் இல்லை. ஆனால், இந்த சீட் பிரத்தியேகமாக ரேடியானுக்காக வடிவமைக்கப்பட்டது என்கிறார்கள். 18 இன்ச் கறுப்பு நிற அலாய் வீல் உடன், டிவிஎஸ்-ஸின் டியூரா கிரிப் டியூப்லெஸ் டயர்கள் வருகின்றன. அலனாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சசோல் ஸ்டான்டர்டாக வருகிறது. இந்த கன்சோல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை நினைவுபடுத்துகிறது. டிஸ்க் பிரேக் இல்லை, டிரம் பிரேக்தான். ஏபிஎஸ் இல்லை, அதற்குப் பதிலாக ஹோண்டாவின் சிபிஎஸ் போல ரேடியானில் சின்க்ரோனஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் வருகிறது.

கறுப்பு, பீஜ் மற்றும் பர்பில் நிறங்கள்

 World Motorcycle test cycle (WMTC) முறையில் ரேடியான், லிட்டருக்கு 69.3 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக டிவிஎஸ் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் விற்பனையைத் தொடங்கவிருப்பதாகக் கூறியுள்ளார்கள். வெள்ளை, பீஜ், பர்பில் மற்றும் கறுப்பு நிறத்தில் வரும் ரேடியானுக்கு 5 ஆண்டு வாரன்டியும் தருகிறார்கள். ரூ.48,400 எனும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ( ரூ.45,991) மற்றும் டிவிஎஸ் விக்டர் (ரூ.53,295) பைக்குகளுக்கு இடையே பொசிஷன் செய்யப்படுகிறது.

ரேடியானின் 360 டிகிரி வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!