Published:Updated:

நல்ல கனவுகள் நனவாகும்!

நல்ல கனவுகள் நனவாகும்!
பிரீமியம் ஸ்டோரி
நல்ல கனவுகள் நனவாகும்!

நல்ல கனவுகள் நனவாகும்!

நல்ல கனவுகள் நனவாகும்!

நல்ல கனவுகள் நனவாகும்!

Published:Updated:
நல்ல கனவுகள் நனவாகும்!
பிரீமியம் ஸ்டோரி
நல்ல கனவுகள் நனவாகும்!

‘‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே.’’


வாசகப்பெருமக்களே, வணக்கம். இது ஆனந்த விகடனின் 4500-வது இதழ். தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் இது மைல்கல். இதன் கதாநாயகர்கள் எப்போதும் நீங்கள்தாம். இந்த நீண்ட நெடிய பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிய உங்கள் அனைவரையும் பெருமிதத்துடன் வணங்குகிறான் விகடன். உங்களின் ஊக்கமும் உற்சாகமும் உத்வேகமும்தான் எப்போதுமே விகடனின் ஆன்ம பலம்.

நல்ல கனவுகள் நனவாகும்!


உங்கள் மனசாட்சியின் குரலாகவும், அறத்தின் நிழலாகவும், இதயத்தின் துடிப்பாகவும், தேடலுக்கான தூண்டுகோலாகவும், நகைக்கவைக்கும் நண்பனாகவும் தொடர்ந்து செயல்பட விரும்புவதே விகடனின் ஒற்றை வேள்வி. எங்களுக்கான துணிவையும் நேர்மையையும் இன்றுவரை அளித்துக்கொண்டிருப்பவர்கள் வாசகர்களாகிய நீங்கள்தாம். உங்களின் வழிகாட்டுதலும் வழிநடத்துதலும்தான் எங்களின் ஆயுதமும் கேடயமும். 

தலையங்கம் தங்களுடைய எண்ணவோட்டத்தைப் பிரதிபலிக்கவேண்டும் என்பதில் தொடங்கும் விகடன் வாசகரின் கறார்த்தன்மைதான் எங்களை மேம்படுத்துகிறது. அரசியல் நையாண்டிகளையும், சமூக விமர்சன கேலிச்சித்திரங்களையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்கிற உங்கள் ஆதரவுதான் எங்களை இன்னும் உற்சாகப்படுத்துகிறது. இப்போதைய டிஜிட்டல் யுகத்தில் மின்னஞ்சல்களிலும், சமூக ஊடகங்களிலும் விகடன் குறித்து எழுதப்படும் பாராட்டுகளும் விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளுமே இதற்கான நற்சான்றுகள்.

மாற்றம் என்பது மாறாதது. நம்மைச் சுற்றிலும் எப்போதும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நாம் நினைக்கும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால், நமக்குள்ளும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். விகடனின் பயணத்தில் கற்ற கல்வி இதுவே. இந்தக் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்கித்தருவது வாசகர்களாகிய நீங்கள்தாம்.

நல்ல கனவுகள் நனவாகும்!


அல்லலுறும் உயிர்களுக்கு உதவும் உன்னத இதயங்களையும், அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மனிதநேயர்களையும் விகடன் அடையாளப்படுத்தும்போதெல்லாம் அவர்களை உச்சாணிக்கொம்பில் ஏற்றி உயர்த்திப்பிடிப்பது வாசகர்களாகிய நீங்கள்தாம். மண்ணின் மனிதர்களோடு தொடர்புடைய கலைப்படைப்புகளை அடையாளம் கண்டு வெளிச்சம் பாய்ச்சும்போதெல்லாம் அவற்றைக் கொண்டாடித்தீர்ப்பதும் நீங்கள்தாம்.

நம் மொழி, நம் மண், நம் மரபு, நம் நீர், நம் உரிமை என்று எப்போதும் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கும் விகடனின் குரல். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும், மரியாதைக்குரிய வாசகர்களின் மகத்தான ஆதரவும் இருப்பதால், அரசாக இருந்தாலும் அதிகார வர்க்கமாக இருந்தாலும் அச்சமின்றி ஆனந்த விகடனால் விமர்சிக்க முடிகிறது. எல்லாவற்றுக்குமான அடித்தளம் வாசகர்களாகிய நீங்கள்தாம். எங்கள் வேரும் நீங்கள்தாம்; விழுதுகளும் நீங்கள்தாம்!

இத்தகைய வாசகர்களின் அறம் சார்ந்த வாழ்க்கைப் பயணத்தில் தன் பயணத்தையும் இணைத்துக்கொள்ளும் விகடன், இந்த நல்ல தருணத்தில் உங்கள் நல்லாசிகளைக் கோருகிறான். நூற்றாண்டை நோக்கிய இந்தப் பயணத்தில் வாசகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வணங்குகிறான் விகடன்.

கைகோப்போம், களம் அமைப்போம். நல்ல கனவுகள் நனவாகட்டும்!