Published:Updated:

மூளுமா மூன்றாம் உலகப் போர்?!

மூளுமா மூன்றாம் உலகப் போர்?!
பிரீமியம் ஸ்டோரி
மூளுமா மூன்றாம் உலகப் போர்?!

மருதன் - ஓவியம்: ஹாசிப்கான்

மூளுமா மூன்றாம் உலகப் போர்?!

மருதன் - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
மூளுமா மூன்றாம் உலகப் போர்?!
பிரீமியம் ஸ்டோரி
மூளுமா மூன்றாம் உலகப் போர்?!

ல்லாப் போர்களிலும் பயன்படுத்தப்படும் முதல் ஆயுதம், வாய். இந்த உலகப் பொதுவிதியைப் பொருத்திப் பார்த்தால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்குமான போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. குழாயடிச் சண்டையை விஞ்சும் வகையில் இரு நாடுகளைச் சேர்ந்த விநோதத் தலைவர்களும் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். கிம் ஜோங் உன் ஒரு ‘ராக்கெட் மனிதன்’ என்று கிண்டலடித்து ஏகத்துக்கும் சிரித்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். என்னிடம் வாலாட்டினால் வட கொரியாவைத் துடைத்து அழித்துவிடுவேன் ஜாக்கிரதை என்றும் விரலை உயர்த்தி சவால் விட்டிருக்கிறார். சும்மா இருப்பாரா கிம்? ஒரு ‘மனநிலை சரியில்லாத அமெரிக்கனின்’ சவடால்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால்,  இது ரொம்பவும் மென்மையான தாக்குதல் என்று தோன்றிவிட்டதாலோ என்னவோ, ‘அந்தக் கிழட்டு நோஞ்சானை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று சூளுரைத்திருக்கிறார்.

மூளுமா மூன்றாம் உலகப் போர்?!

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அமெரிக்காவை அழிப்பது சாத்தியம் என்று கிம் நம்புகிறார். சொடக்கு போடுவதற்குள் வடகொரியாவைத் தவிடுபொடியாக்கிவிடலாம் என்பது ட்ரம்ப்பின் நம்பிக்கை. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த இருவராலும் சொல்வதைச் செய்துகாட்ட முடியும். வடகொரியாவால் விரைவில் அமெரிக்காமீது ஹைட்ரஜன் குண்டுகளை வீசிவிட முடியும். அமெரிக்கா நினைத்தால் அணு ஆயுதத்தைக் கொண்டு வடகொரியாவை வரைபடத்திலிருந்தே அகற்றிவிடமுடியும். ஒன்று மட்டும் நிச்சயம். இந்த இரு நாடுகளில் எது முதலில் தாக்குதலை ஆரம்பித்தாலும் சரி, அழிவு என்பது கிட்டத்தட்ட உலகம் தழுவியதாகவே இருக்கும்.

அச்சங்கள், நிஜங்கள்

போர் என்று ஒன்று மூண்டால் அதை இருவரில் யார் தொடங்கி வைப்பார்கள்? வடகொரியாவின் தற்போதைய நிலை என்ன? தன் தாத்தாவைப் போல் கிம் உணர்ச்சிவசப்பட்டு, தவறான கணிப்புகளின் அடிப்படையில் போரைத் தொடங்கிவிடுவாரா? இப்போதைய கிம் இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கிறார் என்றால் 1950 கொரியப் பேரின்போது தாத்தா கிம் முப்பதுகளின் இறுதியில் இருந்தார். தாத்தா கிம்முக்கு தொடக்கத்தில் சோவியத் யூனியனின் ஆதரவு இருந்தது.  இறுதியில், மாவோவின் செஞ்சீனம் பாய்ந்துவந்து அவரையும் அவர் நாட்டையும் காப்பாற்றியது. இன்றைய கிம்முக்கு அப்படி யாராவது உதவிக்கு வருவார்களா?

இன்றைய வடகொரியாவை ஒரு கம்யூனிச நாடாகக் கருத இயலாது. அதேபோல்தான் இன்றைய ரஷ்யாவையும். அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கும் விளாதிமிர் புதினால் நிச்சயம் எல்லை கடந்து வடகொரியாவுக்காகப் பரிதாபப்படுவதற்கு நேரம் இருக்கப்போவதில்லை. ஆம், கிம்மைப் போலவே புதினுக்கும் அமெரிக்கா ஓர் எதிரி நாடுதான் என்றாலும் கிம்மா, ட்ரம்ப்பா என்றால் ட்ரம்ப் எவ்வளவோ மேல் என்றுதான் புதின் நினைப்பார்.

சரி,சீனா? தன் படைவீரர்களைப் பலிகொடுத்து தாத்தா கிம்மைக் காப்பாற்றினார் அன்றைய மாவோ. இன்றைய ஜி ஜின்பிங் கிம்மைக் காப்பாற்ற முன்வருவாரா? வடகொரியாவுடன் இணைந்து அமெரிக்காவை எதிர்க்கத் துணிவாரா? மாட்டார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவைப் போல் அமெரிக்காவைக் கண்டால் ஆகாது என்றாலும் அமெரிக்காவோடு போரிடும் அளவுக்கு சீனா பகைமை கொண்டிருக்கவில்லை. கிம்மைப் போல் அமெரிக்காவை அழிக்கவேண்டும் என்று ஜி ஜின்பிங் நினைக்கமாட்டார். அதிலும் வட கொரியா பொருட்டு அமெரிக்காவை எதிர்க்க சீனா தயாராக இல்லை.

மூளுமா மூன்றாம் உலகப் போர்?!


இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, 30 மைல் தொடங்கி 300 மைல் வரை பாய்ந்துசென்று அழிப்பதற்கான ஏவுகணைகள் மட்டுமே தயார் நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்திய கிம்மின் முயற்சிகளால் ஏவுகணைகளின் பாயும் ஆற்றல் 5300 மைல்களுக்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. இல்லை, இதைக் காட்டிலும் அதிகம் சீறிப்பாய முடியும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையாக இருந்தால், ஜப்பான், அமெரிக்கா, மாஸ்கோ, சிட்னி, புதுடெல்லி என்று மிகப் பரந்த அளவில் கிம்மால் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

ஜப்பான் ஏற்கெனவே கவலைப்பட ஆரம்பித்துவிட்டது. கிம் உங்கள் நாட்டின்மீது குண்டுவீசுவார் என்று எதிர்பார்க்கிறீர்களா என்றொரு கேள்வி ஜப்பானியப் பொதுமக்களிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது, 90% பேர், ஆம் நாங்கள் வடகொரியா குறித்துக் கவலைப் படுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பாதிக்கும் அதிகமான பேர், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்று திடமாக நம்புகிறார்கள். ஜப்பானியத் தலைவர் ஷின்சோ அபே தன் நாட்டு மக்களின் அச்சங்களைப் போக்கப் பெரிதும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், போர் ஆரம்பமானால் என்னென்ன செய்யவேண்டும் என்பதற்கான முன் தயாரிப்புகள், பயிற்சிகள் ஆகியவற்றிலும் ஜப்பான் சத்தமின்றி கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது.

ஜப்பான் மட்டுமன்று, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா அனைத்தும் கிம்மின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய கவலை கிம் மட்டுமன்று, அவரைச் சதா சர்வகாலமும் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும் ட்ரம்ப்பும்தான்.
அணு ஆயுதம் பரவலாக எல்லோரிடமும் இருப்பதைக் கண்டு அஞ்சவேண்டும் என்று ஒரு சாரார் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டி ருக்கிறார்கள். அதே ஆயுதங்களைச் சுட்டிக்காட்டி இன்னொரு சாரார் நம்மை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரிடமும் அணு ஆயுதம் இருப்பது நல்லதுதான்; அப்போதுதான் ஒருவரும் அதைப் பயன்படுத்தமாட்டார்கள் என்பது அவர்கள் வாதம்.

இந்தப் பின்னணியில் மிக முக்கியமான, அடிப்படையான கேள்வியை எதிர்கொள்வோம். மூன்றாவது உலகப்போர் மூளுமா? தெரியவில்லை. ஆனால், பனிப்போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பது மட்டும் தெரிகிறது. இது பனிப்போராக மட்டுமே நீடிக்குமா அல்லது போர்க்களத்துக்கும் இட்டுச்செல்லுமா என்பது ட்ரம்ப், கிம் இருவரின் வாய்களில்தான் இருக்கிறது.