நெடுஞ்சாலையில் பைக் மற்றும் ஸ்கூட்டருக்கு தனி பாதை அமைக்க திட்டம்!

மத்திய அரசின் நிதி உதவியுடன் சென்னையைச் சுற்றியுள்ள பைபாஸ் சாலைகளில் புது லேன், ஓட்டுநர் உரிமம் வாங்க புதிய முறை என சாலை பாதுகாப்பில் பல அதிரடி திட்டங்கள் வரவுள்ளன.

ஹூண்டாய் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வர்த்தக ரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அண்ணாநகர், அயனாவரம், கொளத்தூர், கே.கே நகர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 600 ஓட்டுநர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.

சாலை பாதுகாப்பு

இம்முகாமின் சிறப்பு விருந்தினராக வந்த அம்பத்தூர் உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி குறித்துப் பேசுகையில், ``புளியஞ்சோலை முதல் மாதவரம் வரை செல்லும் பைபாஸ் சாலையில் மட்டும் ஆண்டுக்கு 60 உயிரிழப்புகள் பைக் மற்றும் ஸ்கூட்டர் விபத்தால் நிகழ்கின்றன. இந்த ஒரு சாலையில் மட்டும் கடந்த 16 ஆண்டுகளில் 1000 உயிரிழப்புகளுக்கு மேல் நிகழ்ந்துவிட்டது. நெடுஞ்சாலையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் செல்வதற்கு தனி லேன் அமைத்தால் விபத்துகளைக் குறைக்கலாம் என்று ஒரு திட்டம் கொடுத்திருந்தோம். மத்திய அரசு அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது மட்டுமில்லாமல், அத்திட்டத்துக்கான நிதியையும் ஒதுக்கிவிட்டார்கள். விரைவில் திட்டம் நடைமுறைக்கு வரப்போகிறது" என்று கூறினார். 

தொடர்ந்து விபத்துகளைப் பற்றி பேசிய அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஶ்ரீதர், ``ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான புதிய விதிமுறைகள் வரப்போகின்றன. டிரைவிங் மட்டுமல்ல உடல் மற்றும் உளவியல் சார்ந்த முழுத் தகுதி பெற்றவர்களுக்கே ஓட்டுநர் உரிமம் வழங்குவது போன்று ஓட்டுநர் உரிமத்துக்கான விதிமுறைகள் கடினமாகப்போகிறது" என்று கூறினார். 

ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆலோசனை

சென்னை போக்குவரத்து காவல் துறையினரின் உதவியோடு, 2018 மார்ச் மாதத்தில் சென்னையில் முதன்முறையாக விபத்தில்லா அண்ணாநகர் எனும் திட்டத்தைக் கொண்டுவந்து பல கட்டங்களாகப் பிரித்து சாலை விபத்துகளை குறைப்பதற்கான முயற்சியில் உள்ளது ஹூண்டாய். இத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக நடைபெறுவதே இந்த மருத்துவ முகாம்.

சாலைவிபத்தில் சிக்கியவர்களை முழுமையாகக் காக்கும் `தாய் திட்டம்' பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!