Published:Updated:

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”
பிரீமியம் ஸ்டோரி
“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

வீயெஸ்வி

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

வீயெஸ்வி

Published:Updated:
“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”
பிரீமியம் ஸ்டோரி
“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

ம்பன் எனும் மகா கவிஞனின் உறவாக மாற நான் எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும்? ஒரு கூழாங்கல்லைக் கோமேதகம் ஆக்கினான் அவன். ஒரு புல்லைப் புல்லாங்குழல் ஆக்கினான். ஒரு சருகை சரித்திரம் ஆக்கினான். கம்பன் எனக்குப் பொருளும் புகழும் தந்தான். புண்ணியம் தந்து என்னைப் புதுப்பித்தான். இன்று நான் உண்ணும் உணவு, பருகும் நீர், உடுக்கும் உடை, இவை எல்லாம் கம்பன் தந்தவை...”

கண்கலங்கச் சொல்கிறார், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ். ‘கம்பவாரிதி’ என்பது இவர் பெற்றுள்ள பட்டங்களில் ஒன்று. ‘வாரிதி’ என்றால் கடல் என்று பொருள். கம்பனில் மூழ்கி முத்துக்குளித்துக் கொண்டிருப்பவர். அகவை அறுபதைத் தொட்டுக் கொண்டிருப்பவர்.

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

இவருடனான நமது சந்திப்பு கொழும்பில் நிகழ்ந்தது. வெள்ளவத்தைப் பகுதியில், ராமகிருஷ்ணா கார்டன்ஸில் இவரது வீடு. வீட்டுக்கு எதிரில், ‘ஸ்ரீஐஸ்வர்ய லக்ஷ்மி தத்துவத் திருக்கோயில்’ பிரமாண்டமாக. உள்ளே நுழைந்ததும், கூண்டுக்குள்ளிலிருந்து பறவைகளின் கூக்குரலோசை. வீட்டுக்குள் பெரிய வரவேற்பு அறையைக் கடந்து சென்றால், பத்துக்கு ஆறு அளவில் சிறிய அறை. சிறிய மேஜை, நாற்காலி. மடிக்கணினி, பக்கத்தில் கட்டில். நெற்றி நிறையத் திருநீற்றுடனும், உதடு நிறையப் புன்னகையுடனும் காவி நிற வேட்டி, அரைக்கை ஜிப்பாவில் ‘வாங்கய்யா...’ என்று வாஞ்சையுடன் வரவேற்கிறார் ஜெயராஜ்.

“இதுதான் நான் வாசம் செய்யும் இடம். வெளியூர் பயணம் போகும் போதெல்லாம் இந்த இடத்துக்குத் திரும்பி வரும் நாளுக்காகவே ஆர்வத்துடன் காத்திருப்பேன்... நான் ஒரு பிரம்மச்சாரி. இந்தக் காவி நிற உடை அணிவதற்கு பிரத்தியேகக் காரணங்கள் எதுவும் கிடையாது. பதினைந்து வருடப் பழக்கம் இது. சமயங்களில் வெள்ளைச் சட்டை அணிவதும் உண்டு! அதேபோலத்தான் நெற்றியில் திருநீறும் இயல்பாக ஏற்பட்ட பழக்கம்தான். சிறுபிராயம் முதல் சைவ சமயத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம்...”

அழகான தமிழில் நம்மிடம் பேசும் ஜெயராஜ், வீட்டில் உள்ளவர்களிடம் தூய யாழ்ப்பாணத் தமிழில்தான் கதைக்கிறார்! வீட்டில் இவரது 92 வயது அம்மா இருக்கிறார். மாணவர்களில் ஒரு சிலர், இவருடனே குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்கள்.

“அம்மாவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளபடியால், வெளியூர்களுக்குச் சென்றாலும் நீண்ட நாள்கள் தங்குவதில்லை. சென்னையில் தொடர் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் நிகழ்த்த இதுவரை நான் ஒப்புக்கொள்ளாததற்கும் இதுவே காரணம்” என்கிறார்.

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

இலங்கை ஜெயராஜுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது இருக்கைக்குப் பின்னால், பிரதானமாக சிவன் சிலை நம் கண்களில் படுகிறது. அணையா விளக்கு அந்தச் சிறு மாடத்தில் சுடர் விட்டு எரிவது தெரிகிறது. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக வைக்கப்பட்டிருக்கும் இரு ஜோடிக் காலணிகள் சிறப்புக் கவனம் ஈர்க்கின்றன. அழுக்குப் படிந்த அந்தநாள் தோல் செருப்புகள் அந்த பூஜை அறையில்!

“இவை இரண்டும் என் இலக்கிய குருமார்கள் இருவரின் திருவடிகள். நான் அவர்களிடம் விரும்பிக் கேட்டுப் பெற்று வந்தவை... ஒரு ஜோடி, திருச்சி பேராசிரியர் ரா.ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமானவை... மற்றொன்று கம்பன் அடிப்பொடி சா.கணேசனின் திருவடி...” என்று, தான் தாள் பற்றிய இருவர் குறித்த விவரங்கள் பேசும்போது கம்பவாரிதியின் கண்கள் பிரகாசமடைகின்றன.

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”மாநாடு ஒன்றுக்காக  இந்தியா வந்திருந்த சமயம், திருச்சியில் தேடித் திரிந்து ஆசானைச் சந்தித்ததும், தன் இல்லத்தில் காஞ்சி மகா பெரியவரின் திருவடிகளை வணங்குமாறு பேராசிரியர் உத்தரவிட்டதும், அவ்வாறே செய்து விட்டு, “அத்திருவடிகள் உங்களுக்குரியவை. உங்கள் திருவடிகள்தாம் எனக்குரியன. அவற்றை எனக்குத் தந்துவிடுங்கள்” என்று கேட்டுக் கண் கலங்கியதும், பேராசிரியரின் மனைவி அவற்றை எடுத்துக் கொடுத்ததும்... ஜெயராஜின் நினைவுப் பெட்டகத்தில் நிலைத்து நிற்கும் பொக்கிஷங்கள்!

இன்னொரு சந்தர்ப்பத்தில் காரைக்குடி கம்பன் விழாவுக்குச் சென்றிருக்கிறார் ஜெயராஜ். ஒரு முனிவரின் ஆசிரமம்போல் குடில் ஒன்று அமைத்துத் தங்கியிருந்த கம்பன் அடிப்பொடியைத் தன் நண்பர்களுடன் சந்தித்திருக்கிறார். தரையில் விழுந்து வணங்கி, அவர் காலில் இருந்த திருவடிகளைப் பற்றியபடி ‘`இவற்றைத் தந்தால்தான் நான் எழும்புவேன்...” என்று சொல்லியிருக்கிறார். இரும்பு மனிதர் என்று கருதப்பட்ட கம்பன் அடிப்பொடி, கண்களில் நீர் வழிய, தன் திருவடிகளைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார்.

1981-ல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரையில் நடத்திய ஐந்தாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார் ஜெயராஜ்.

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

“எங்களை மாநாட்டுக்கு அழைக்கும்படி ஒரு வெள்ளைத்தாளில் கடிதம் எழுதிப் போட்டோம். ‘இளைஞர்களான நாங்கள் தமிழ்ப்பணி செய்ய விரும்புகிறோம். தாங்களின் மதுரை மாநாட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ஊக்கம் பெறுவோம்’ என்பதுதான் நாங்கள் எழுதிய கடிதத்தின் செய்தி.”

‘முதலமைச்சர், தமிழ்நாடு, இந்தியா’ என்ற முகவரிக்கு தாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை ஜெயராஜ். ஆனால், ஒரே வாரத்தில் பதில் வந்தது! முதல்வரின் முதன்மைச் செயலர் கா. திரவியம் ஐ.ஏ.எஸ். கையொப்பமிட்டு வந்த கடிதத்தில், கம்பன் கழகத்தினர் பத்துப்பேருக்கு அழைப்பு!

“மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ‘தொல்காப்பியர் அரங்கு’ என்ற பெயரில் ஆய்வரங்க மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குத் தொடங்க வேண்டிய அமர்வுக்கு ஏழு மணிக்கே போய்விட்டோம். திடீரெனப் பேரிரைச்சல். கறுப்புக் கண்ணாடியுடன் ஒரு கார் வர, பின்னால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் ஓடி வர, நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் திடீரென்று அங்கே முதல்வர் எம்.ஜி.ஆர்!

“மண்டபத்துக்கு எம்.ஜி.ஆர். வந்ததும், மாநாட்டில் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலும் அதிகரித்தது.ஒருவாறு அனுமதியும் பெற்றேன். தமிழின ஒற்றுமை பற்றி அன்றைய என் பேச்சு அமைந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்களின் லட்சியமா அல்லது தமிழர்களுக்குள் இருந்த பேதங்களைப் பார்த்து சங்கச் சான்றோர் அவர்களுக்குச் சொன்ன புத்திமதியா?’ என்று நான் கேட்டதை அரங்கம் ரசித்தது. ‘உலகத் தமிழர்களுக்குத் தாயகம் தமிழ்நாடு தான். ஈழத்தவர்களாகிய நாங்கள் மாமியார் வீட்டில் வசிக்கும் தமிழர்கள். தாய் வீடு ஒற்றுமையாக இருந்தால்தான் மாமியார் வீட்டில் மகள் மரியாதையாக வாழலாம்’ என்றேன்.”

பேச்சு முடிகிற நேரம், மேடையில் நின்றபடியே எம்.ஜி.ஆரைப் பார்த்து மைக்கில் பேசத் தொடங்கி யிருக்கிறார் ஜெயராஜ். ``உங்களின் நேரடி அழைப்பில் வந்திருக்கிறேன். பெரும் கொடையாளியான உங்களிடம் ஒன்றைக் கேட்கப்போகிறேன்...” என்று சொல்லி அவர் நிறுத்தியதும் சபை, பரபரப்பின் உச்சநிலைக்குப் போனது. எம்.ஜி.ஆர் இவரை நிமிர்ந்து பார்த்து, கண்களால் ‘என்ன வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

“நான் என்ன கேட்கப்போகிறேனோ என்று சபையில் பெரும் எதிர்பார்ப்பு. இளமை தந்த ஊக்கத்தில் எம்.ஜி.ஆரிடம் ‘உங்களை நான் சந்தித்ததை ஊரில் சென்று நிரூபிக்க, ஆட்டோகிராஃபில் கையெழுத்திட்டுத் தாருங்கள்’ என்று குழந்தைத் தனமாகக் கேட்டேன்...” என்ற ஜெயராஜ் அப்போது இருபத்து நான்கு வயது இளைஞர்!

எம்.ஜி.ஆர் கை காட்டி இவரை அருகில் அழைத்திருக்கிறார் ஜெயராஜ் இறங்கி வந்து கால் தொட்டு வணங்க, உச்சிமோந்து ஆசீர்வதித்திருக்கிறார். பின்னர் ஆட்டோகிராஃபில் கையெழுத்திட்டுத் தந்தாராம்!

முப்பத்து ஆறு வருடங்களுக்கு முன் நடந்தவற்றை, மூன்று நாள்கள் முன் நடந்த சம்பவம் மாதிரி ஒரே மூச்சில் சொல்லி நிறுத்தினார், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

``இன்று வரை நான் மேடையில் பேசப் போகுமுன் எந்தவிதத் தயாரிப்பும் செய்து கொள்வதில்லை. எந்தப் பாடலும் இரண்டு, மூன்று முறை படித்தாலே எனக்கு மனனம் ஆகிவிடும். பின் எப்போதும் அது மறப்பதில்லை. பேசுவதற்காக எதையும் நான் வாசிப்பதில்லை. ஏற்கெனவே வாசித்ததைத்தான் பேசுகிறேன்...” என்று சொல்லும் ஜெயராஜ், மாதத்துக்கு இரண்டு நாள்கள் சென்னையில் திருக்குறள் வகுப்பு எடுக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரை பதிவு செய்திருக்கிறார்கள். எப்படியும் முந்நூற்று ஐம்பது பேர் வரை வகுப்புக்குத் தவறாமல் வந்துவிடுவார்கள். சில சமயம் ஐந்நூறு பேர்கூட வந்து ஹால் நிரம்பி விடுமாம். நிறைய இளைஞர்களும், மருத்துவர்களும் பொறியியல் வல்லுனர்களும் வருவதுண்டாம்.

“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”

“பரிமேலழகரின் உரையின் அடிப்படையில்தான் நான் வகுப்பு எடுக்கிறேன். இதுவரை பதினைந்து மாதங்கள். என் வகுப்பு நடந்திருக்கிறது. இப்போதுதான் அறத்துப்பால் முடிக்கப்போகிறேன்..” என்கிறார் இந்த முழுநேர இலக்கியவாதி. நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொள்கிறார். கூட்டங்களில் கம்பனை அலசுகிறார்.

இன்றைய இயல் மேடையின் தரம் குறைந்து வருவதில் நிரம்பவே வருத்தம் இருக்கிறது இவருக்கு.

“தொலைக்காட்சிகள் கொடுக்கும் விளம்பரமும், வெளிச்சமும்தான் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். மற்றவர்கள் சிரிக்கிறார்கள்,  கைதட்டு கிறார்கள் என்பதற்காக பட்டிமன்ற மேடைகளைப் பொழுதுபோக்கு மேடையாக்கிவிட்டார்கள்.”

“பண்டிகை நாள்களில் ஒளிப்பரப்பு வதற்காக ஏற்பாடு செய்யப்படும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேசுவதற்கு தொலைக் காட்சி சேனல்கள் அழைத்தால், நீங்கள் கலந்துகொள்வீர்களா?”

“நிச்சயம் மாட்டேன்... கடைசி வரையில் மாட்டேன், கோடி ரூபாய் கொடுத்தாலும் அது மாதிரி நிகழ்வுகளுக்கு நான் போக மாட்டேன்.”

இந்த விஷயத்தில் தீர்மானமாக இருக்கிறார் இலங்கை ஜெயராஜ்!