Published:Updated:

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1
பிரீமியம் ஸ்டோரி
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

மருதன்

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

மருதன்

Published:Updated:
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1
பிரீமியம் ஸ்டோரி
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

தாலா பானுவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை என்பதால் அவர் கணவர் முகமது மூலமாகவே அவர்கள் கதை வெளியுலகுக்கு வந்திருக்கிறது. அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள். பர்மா என்று சொல்லும்போதே அவர் கண்கள் மினுமினுப்போடு விரிகின்றன. பர்மா என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு நாடல்ல, குட்டி சொர்க்கம். கனவில் மட்டுமே காணக்கூடிய மயக்கமூட்டும் காட்சிகளை ஒருவர் பர்மாவில் அசலாகக் காணமுடியும்.

விக்டோரியன் கட்டடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நவீன வர்த்தக வளாகங்களும் நிரம்பியிருந்தாலும் பர்மாவை நவீனத்துவம் இன்னமும் முழுக்க முழுங்கிவிடவில்லை. அழகிய ஓடைகள், பச்சைப் பசேலென்று விரிந்திருக்கும் கானகப் பகுதிகள், ஒருவேளை பொம்மையோ என்று திகைக்கவைக்கும் ஜொலிக்கும் பகோடாக்கள், திரும்பும் பக்கமெல்லாம் அடர்த்தியான காவி அங்கி தரித்த பௌத்தர்கள் என பர்மா இதயத்துக்குள் இடம் கேட்கும் கனவுப் பகுதி. 

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

பெரும்பான்மை பௌத்தர்களால் நிரம்பியிருக்கும் ஒரு நாட்டில் ஓர் இஸ்லாமியராக இருப்பதை அவர் ஓர்  உறுத்தலாகவே நினைக்கவில்லை. பௌத்தம் என்றால் அன்பு. பௌத்தம் என்றால் சகோதரத்துவம். பௌத்தம் என்றால் புழு, பூச்சியையும் உயிர்களாகக் கருதி மதிப்பளித்து வாழ்வது. சொர்க்கம் என்பதும் இதுதான் அல்லவா? மனநிம்மதி மட்டுமல்ல செல்வமும் இருந்தது. ஒரு பண்ணை, ஐந்து பசுமாடுகள், மூன்று காளைகள். ஆடுகளும் நிறையவே இருந்தன. சந்தேகமின்றி இது பெருஞ்செல்வம். இதுதான் வாழ்வு என்று பூரித்துக் கிடந்தார் முகமது.

எங்கே, எப்போது, யாரால் இந்த நிலைமை மாறியது என்பதை முகமதுவால் இப்போது நினைவுகூரமுடியவில்லை. ‘`நீ பர்மாவைச் சேர்ந்தவன் அல்ல என்று ஒரு நாள் திடீரென்று எனக்குச் சொல்லப்பட்டது. நீ, உன் மனைவி, உன் மகள் மூவரும் அந்நியர்கள் என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. என் தாத்தா பர்மாவைச் சேர்ந்தவர். என் தாத்தாவின் தாத்தாவும் இங்கிருந்தவர்தான். நான் எப்படி அந்நியனாவேன்?’’

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

முகமதுவோடு தர்க்கம் செய்யத் தயாராக இல்லை ஒருவரும். ஒரு நாள் அவருடைய ஆடுகள் மொத்தமும் காணாமல் போயின. மாடுகள் மறைந்துபோயின. பர்மிய ராணுவ வீரர்களுக்குப் பணியாற்றும்படி முகமது கட்டாயப்படுத்தப்பட்டார். பணி என்று சொன்னாலும் ஓர் அடிமையாகவே அவர் அங்கு நடத்தப்பட்டார். அவர் கண் முன்னால் அவருடைய பண்ணை சிறிது சிறிதாக அழியத் தொடங்கியது. பசுமை அனைத்தையும் தொலைத்துவிட்டு ஒரு பாழ்நிலமாக அது மாறிப்போனது.

ஏன் இப்படித் தனக்கு நேர்கிறது என்பதை முகமதுவால் கண்டறிய முடியவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம் என்றும் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. பர்மிய ராணுவம்தான் தவறிழைத்தது என்று சில சமயம் நினைத்துக்கொள்வார்.  அவர்களால் தானே என் பண்ணையும் வாழ்வும் அழிந்தன? அவர்கள்தானே என்னை அடிமைப்படுத்தினார்கள்? ஆனால், நிதானமாக யோசிக்கும்போது சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்தான் குற்றவாளிகள் என்று நினைக்கத் தோன்றும். ராணுவம் மிருகத் தனமாகத்தான் நடந்துகொள்ளும். அக்கம் பக்கத்தினர் மனிதர்கள்தானே? அவர்கள் ஏன் ஆடுகளையும் மாடுகளையும் அபகரித்துக்கொள்ள வேண்டும்?

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1இல்லை, ஒரு சிலரை நொந்து பயனில்லை. ஒட்டுமொத்த பர்மிய சமூகமும் சேர்ந்துதான் எங்களை இப்படி ஆக்கியிருக்கிறது என்னும் முடிவுக்கு வந்துசேர்ந்தார் முகமது. ராணுவத்தில் பணிபுரிபவர்களும் அக்கம் பக்கத்துக் குடியிருப்புகளில் வசிப்பவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கத்தினர்கள்தான் இல்லையா? எனில், இது ஒரு சமூக நோயாகத்தான் இருக்கவேண்டும். அந்த நோய் வெடித்து அதன் கிருமிகள் பர்மா முழுக்கப் பரவியிருக்கவேண்டும். இதுவரை என்னிடம் தோழமையுடன் பழகியவர்கள் அனைவரையும் அந்தக் கிருமி தொற்றிக்கொண்டு விட்டது. அது அவர்களுடைய அடிப்படைக் குணங்களை மாற்றிவிட்டது. அவர்களிடமிருந்து மனிதத்தன்மை  விடைபெற்றுச் சென்றுவிட்டது. அவர்கள் என்னை அந்நியர்களாகவும் விரோதிகளாகவும் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நான் அப்படியேதான் இருக்கிறேன். என் நாடு மாறிப்போய்விட்டது.

முகமது மட்டுமல்ல எல்லா ரோஹிங்கியா முஸ்லிம்களும் கடும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தள்ளப்பட்டிருந்தனர். நீ ஒரு வந்தேறி, உன்னுடைய நாடான பங்களாதேஷுக்குத் திரும்பிப் போ என்னும் கூக்குரலை அவர்கள் அவ்வப்போது கேட்க நேர்ந்தது. அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. முதல்முறையாக கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் திட்டமிட்டு உருவாக்கப் பட்டதாக இருந்தது. பர்மியர்களோடு ராணுவம் கூட்டு சேர்ந்துவிட்டதா அல்லது சிவில் சமூகமே ராணுவமயமாகிவிட்டதா என்று தெரியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன. பர்மாவில் தங்கி, சிறிது சிறிதாக வதைபடுவது அல்லது ஒரேயடியாக நாட்டைவிட்டு வெளியேறிவிடுவது.

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

முகமது இதற்குமேல் வதைபட விரும்பவில்லை. தன் மனைவியையும் 23 வயது மகளையும் அழைத்துக்கொண்டு பர்மாவிலிருந்து வெளியேறினார். எல்லையைக் கடந்து  பங்களாதேஷ் வந்துசேர்ந்தார்கள். அங்கே அவர்களைப் போலவே பல ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரிய முகாம்களில் தங்கியிருப்பதைக் கண்டனர். அதற்குப் பிறகு நடந்ததை முகமதுவால் விவரிக்கமுடியவில்லை. இவ்வளவு தூரம் பேசிய அவரால் அதற்குப் பிறகு ஒரு சொல்கூடப் பேசமுடியவில்லை. அவருடைய உதடுகள் ஒட்டிக்கொண்டுவிட்டன. அவர் பரிதாபமாக விழித்தார். அதுவரை அமைதியாக இருந்த தாலா பானு மிச்ச கதையைச் சொல்லிமுடித்தார். ‘`முகாமில் இருந்தபோது என் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். எங்கள் வாழ்க்கை அத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.’’

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1


பர்மாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையுமே தாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கிருமி. பர்மா இனியும் முகமதுவுக்கு ஒரு கனவு தேசமாக இருக்கப்போவதில்லை. உறக்கம் கலைந்து அவர் விழித்துக்கொண்டுவிட்டார். பகோடாக்களையும் புன்னகைக்கும் பௌத்தர்களையும் இனி அவரால் நினைவுகூர முடியாது. பர்மா என்றதும் அவர் இனி, தன் மகளைத்தான் நினைத்துக்கொள்வார். பிறகு களையிழந்த தன் பண்ணையை, சீரழிந்த தன் வாழ்க்கையை, அமைதியாக முடங்கிக்கிடக்கும் தன் மனைவியை. பர்மா என்னும் கனவு முற்றாகக் கலைத்துப்போய்விட்டது.

சிரியாவும் பலருக்கு சுகமான கனவாகத்தான் இருந்தது. வரலாறு எழுதப்படுவதற்கு முன்பே வரலாறு படைத்துவிட்ட நாடு என்பதில் அளவில்லாத பெருமிதத்துடன்  இருந்தார்கள் சிரியர்கள். ஆம், ஆட்சிமுறை அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லைதான். ஊழலும் ஒடுக்குமுறையும் மலிந்திருந்தது உண்மைதான். வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் என்று பல துறைகளில் போதாமைகள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் சிரியாவை விட்டுத் தந்ததில்லை அவர்கள். ஆட்சியாளர்களின் ஒழுங்கீனங்களுக்காக என் தாய் நாட்டை நான் ஏன் பழிக்கவேண்டும்?

சிரியாவைப் போலவே பழைமையான நிலம், இராக். சிரியாவைப் போலவே அங்கும் அரசியல் தலைமை மக்களின் எதிர் பார்ப்புகளைப் பொய்த்தது நிஜம். ஜனநாயகத்தின் இடத்தை அடிப்படைவாதம் பிடித்துக்கொண்டதால் அநேகம் பேர் அங்கே ரத்தம் சிந்த வேண்டியிருந்ததும் உண்மை.  `நான் சன்னி’, `நீ ஷியா’ என்று சண்டையிட்டுக் கொண்டாலும் நெருக்கடி ஒன்று நேரும்போது நான் இராக்கியன் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னவர்கள் அங்கே அநேகம் பேர்.

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

அமைதியாகத்தான் இருந்தது இலங்கையும். சின்னஞ்சிறிய அழகிய தீவு. பர்மாவைப் போலவே பௌத்தர்கள் புன்னகைத்தபடி வளைய வந்துகொண்டிருந்த நிலம் அது. அமைதிக்கு மட்டுமல்ல அழகுக்கும் குறைவில்லாத பிரதேசமாகவே இருந்தது. ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டன. சிரியா ஓர் அகண்ட சுடுகாடாக மாறிவிட்டது. பர்மாவிலிருந்து ரோஹிங்கியாக்கள் இந்த நிமிடம்வரை வெளியேறிக் கொண்டி ருக்கிறார்கள். இராக்கின் இதயம் வெறுமனே  துடித்துக்கொண்டிருக்கிறது. பல லட்சக் கணக்கான இராக்கியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். இலங்கை இன்று ஜீவனில்லாமல் பிளவுண்டு கிடக்கிறது.

ஆப்கானிஸ்தான், துருக்கி, ஏமன், லிபியா, சோமாலியா, சூடான், வடகிழக்கு நைஜீரியா என்று இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். முடிவில்லாமல் இந்நாடுகளிலிருந்து எறும்புக்

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

கூட்டங்களைப்போல் மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், செல்வத்தைத் தொலைத்தவர்கள் அனைவரும் இந்த வரிசையில் இடம்பெற்றிருக்கிறார்கள். நடக்க முடியாத முதியோர்கள், இதய நோயாளிகள், பார்வையிழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றுபோல் வெளியேற வேண்டியிருந்தது. பெண்கள் தங்களையும் பாதுகாத்துக்கொண்டு குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்தது. குழந்தைகளின் அழுகுரலோடு போட்டியிடுகின்றன வளர்ந்தவர்களின் ஓலம். 

இவர்கள் இழந்தவை அநேகம். பெற்றதோ ஒன்றுதான். அகதி என்னும் பெயர். பாலின வேறுபாடின்றி, வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே பெயர். தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து இன்னொன்றில் முதல் காலடியை எடுத்து வைத்த அந்தத் தருணத்தில் எங்கிருந்தோ  ஓடிவந்து  ஒட்டிக்கொள்கிறது. பலருக்கும் இனி இதுவே ஒரே அடையாளமாக இருக்கப்போகிறது.

உண்மையில் அகதி என்பவர் யார்? அவர் எப்படி உருவாகிறார்? அவர் உருவாவதற்கு யார் காரணம்? எந்தச் சூழலில் இந்த மாற்றம் நிகழ்கிறது? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான பதில்கள் இல்லை. மாறாக, மேலதிகக் கேள்விகளையே எழுப்பவேண்டியிருக்கிறது. அமைதியிழந்த நாடுகளே அகதிகளை உருவாக்குகின்றன என்பதைப் பொதுவிதியாகக் கொண்டால் ஒரு நாடு ஏன் அமைதியிழக்கிறது? அகதிகளில் கணிசமானவர்கள் ஏன் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்?  

நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1

அகதிகளுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கதைகளுக்கும் எல்லைகள் கிடையாது. எனவே இந்தத் தொடரில் உலகம் முழுக்க நாம் வலம் வரப்போகிறோம். அகதிகளின் கதை என்பது ஆசியாவின் கதையாகவும் மத்திய கிழக்கின் கதையாகவும் ஆப்பிரிக்காவின் கதையாகவும் இருக்கப்போகிறது. நிச்சயம் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கதையும்தான். நிகழ்காலமும் கடந்தகாலமும்; அரசியலும் வரலாறும்; வாழ்வும் மரணமும் இத்தொடரில் கைகோக்கப்போகின்றன. அகதிகளை உலகம் எப்படிக் காண்கிறது என்பதை நாம் பார்க்கப்போகிறோம். அகதிகளின் கண்களைக் கொண்டு பார்த்தால் உலகம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

அகதிகளின் கதை வலியும் ரணமும் மிக்கது. அதே சமயம் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும் நட்புக்கும் காதலுக்கும் வேட்கைக்கும் இடமிருக்கத்தான் செய்கிறது. என் வாழ்க்கை முற்றுபெற்றுவிட்டது என்று சொல்லும் அகதிகளைப் போலவே, என் வாழ்வை மீட்டெடுக்கப்போகிறேன் என்று சொல்லும் அகதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருவரையுமே நாம் இங்கே சந்திக்கப் போகிறோம்.

அகதிகளின் கதை என்பது நம் காலத்து மனிதர்களின் கதை. சுருக்கமாகச் சொன்னால், நம் கதை. அகதிகளுக்கு ஒரு முகம் கொடுத்துப் பார்க்கவேண்டுமானால் நம்முடையதைக் கொடுக்கலாம். இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை இயல்பானவர்களாக இருந்தவர்கள்தாம். இதன் பொருள், இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம் என்பதுதான். இது அச்சுறுத்தல் அல்ல, அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கை மட்டுமே.

-சொந்தங்கள் வருவார்கள்