Published:Updated:

இவன் வேற மாதிரி!

இவன் வேற மாதிரி!
பிரீமியம் ஸ்டோரி
இவன் வேற மாதிரி!

பிரதீப் கிருஷ்ணா

இவன் வேற மாதிரி!

பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
இவன் வேற மாதிரி!
பிரீமியம் ஸ்டோரி
இவன் வேற மாதிரி!
இவன் வேற மாதிரி!

த்தொன்பது வயது மேவெதர் தோற்றுப்போவான் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவன் தோல்வியடைந்ததாக நடுவர்கள் அறிவித்தபோது எல்லோருக்குமே அதிர்ச்சிதான். காரணம், அவன் மிக அருமையாக விளையாடியதுதான். பார்வையாளர்கள் வரிசையில் இருந்த எல்லோருக்குமே நன்றாகத்தெரியும், வெற்றி அந்த இளைஞனுக்கானதுதான் என்று. இருந்தும், நடுவர்கள் ஏனோ அவன் தோல்வியடைந்ததாக அறிவித்தனர்.  நடுவர்களுடைய தீர்ப்பு தவறானது என்பதை அந்த இளைஞன் அறிந்திருந்தும், அதற்காக அழவில்லை. சண்டையிடவில்லை. கதறிக் கூப்பாடு போடவில்லை.  ‘‘உங்களுக்குத் தெரியும், வெற்றிபெற்றவர் யார் என்பது... அது போதும்’’ என்று மகிழ்ச்சியாக கேமராக்கள் முன் சொன்னான். அந்த இளைஞன்தான் பாக்ஸிங் ரிங்கில் யாராலும் தோற்கடிக்க முடியாத சிங்கமாகவே ஓய்வுபெற்ற ஃப்ளாயிட் மேவெதர்.

இவன் வேற மாதிரி!


 
புரொஃபஷனல் குத்துச்சண்டைப் போட்டிகளில் விளையாடிய 50 போட்டிகளில் ஒன்றில்கூடத் தோற்றதில்லை மேவெதர். 21 ஆண்டுகளில் 15 உலகப் பட்டங்கள், 50 வெற்றிகளில் 27 நாக் அவுட்கள். 130  கோடி அமெரிக்க டாலர் சம்பாத்யம். உலகின் வேறெந்தக் குத்துச்சண்டை வீரரும் செய்திடாத சாதனைகளை இந்த இருபது ஆண்டுகளில் மேவெதர் நிகழ்த்தியிருக்கிறார். இப்போது 40வது வயதில் 50வது போட்டியோடு புரொஃபஷனல் குத்துச்சண்டைகளிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

இவன் வேற மாதிரி!

மேவெதரின் குடும்பமே பாக்ஸிங் குடும்பம்தான். ``உலகத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன் நான் தெரிந்துகொண்டது பாக்ஸிங்தான்” என்பார் மேவெதர். தன் இளம்வயதில் பாக்ஸிங்கைத் தவிர்த்து எதுவும் செய்ததில்லை. `ஷோல்டர் ரோல்’ எனப்படும் மிகப் பழைமையான முறையைத்தான் அவர் தன் ஆரம்ப காலங்களில் பின்பற்றினார். அதை அவருக்குக் கற்றுத்தந்தவர் அவரின் தந்தை மேவெதர் சீனியர். 

களத்திலிறங்கிக் கண்மூடித்தனமாகக் குத்துபவர் அல்லர்; எதிராளியை எப்போது தாக்க வேண்டும், எப்படித் தாக்க வேண்டும் எனத் தெரிந்தவர். இவரின் மிகப்பெரிய ஆயுதமே பொறுமைதான். தனது தடுப்பாட்டத்தில் மேவெதர் மிகவும் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். சிறுவயதில் பயிற்சி செய்த இடத்தில் அனைவரும் அவரை `ப்ரெட்டி பாய்’ என்றுதான் அழைப்பார்கள். காரணம், அவரது உடலில் அவ்வளவாகத் தழும்புகள் இருக்காது என்பதுதான். அந்த அளவுக்குத் தன் உடலில் ஒரு அடிபடாமல் தப்பிப்பதில் மேவெதர் கில்லி.

இவன் வேற மாதிரி!

பாக்ஸிங் ரிங்கில் மட்டுமன்று, தன் வாழ்விலும் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுதான் மேவெதர் முன்னேற வேண்டியிருந்தது.  வீட்டில்  மின்சாரம் கிடையாது.  ஏழு பேருடன்  ஒற்றை அறையில்தான் தூக்கம். மேவெதரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் பிரச்னைகளுடன்தான் பிணைந்திருந்தது. போதை ஊசிகளுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் இடையேதான் தன் வாழ்க்கையை நகர்த்திவந்தார். அவர் அம்மா, போதைப்பழக்கத்தில் மூழ்கியிருந்தார். அத்தை ஒருவர், போதை ஊசிகளின் மூலம் எய்ட்ஸ் நோய் பெற்றிருந்தார். இவையெல்லாவற்றையும்விட, அவரை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது அவரின் தந்தைதான். ஆம், அவரை பாக்ஸர் ஆக்க வேண்டும் எனத் துடித்த அதே மனிதர்தான் அவரைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கினார். பாக்ஸிங்கில் சம்பாதிக்கத் தவறி, போதைப்பொருள்கள் விற்கத் தொடங்கி னார்.  விரக்தியில் மேவெதரைப் போட்டு அடித்துத் துவைப்பார். செய்யாத தவறுகளுக்குக் கூடக் கசையடி பெற்றான் சிறுவன் மேவெதர்.

இவன் வேற மாதிரி!


``என் தந்தைக்கு என்னைவிட என் சகோதரியைத்தான் பிடிக்கும். அவளை ஒருமுறைகூட அவர் அடித்ததில்லை. என்னை மட்டும் அடித்துக்கொண்டே இருப்பார்” என்று பல பேட்டிகளில் வேதனையுடன் ஒலித்திருக்கிறது மேவெதரின் குரல்.

மேவெதர் வளரவளர பிரச்னைகளும் வளர்ந்தன. தந்தை போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.  அம்மாவின் நிலையோ கவலையானது. தன்னை வளர்த்த பாட்டியும் அடிக்கடி கோபத்தில் கத்த, என்ன செய்வான் அந்தச் சிறுவன்? வீட்டுக்கு வருவதைக் குறைத்துக்கொண்டு பாக்ஸிங் ரிங்கைச் சுற்ற ஆரம்பித்தான். மேவெதரின் பிரபலமான ஒரு வாக்கியம் உண்டு. ``பாக்ஸிங் ஈஸி. வாழ்க்கைதான் கஷ்டம்.”

தந்தையை அவர் அவ்வளவு வெறுத்தார். மேவெதரை எதிர்த்துப் போட்டியிடப்போகும் நபரிடம், ``என் மகனை எப்படித் தோற்கடிப்ப தென்று எனக்குத் தெரியும். அதற்கு நீ என்ன விலை கொடுப்பாய்?” என்று கேட்ட ஒரு தந்தையை எந்த மகன்தான் ஏற்றுக்கொள்வான்? ``என் அம்மாவால் எங்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலை. ஆனால், அவர் செய்யப் போராடினார். அதனால்தான் இன்று நான் அவரைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் மேவெதர், இன்னும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை.

இவன் வேற மாதிரி!

ஆனால் அவருக்கு இரண்டு மகன், இரண்டு மகள் என நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.  தான் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டதால் தன் குழந்தைகளுக்கு  சொகுசான, ஜாலியான, கொண்டாட்டமான வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதுதான் மேவெதரின் லட்சியம்.இப்போது லாஸ் வேகஸில் அரண்மனை போன்ற வீட்டில் வசிக்கிறார். மகள் இயானாவின் 14வது பிறந்தநாளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ் காரைப் பரிசளிக்கிறார் மேவெதர். இதைப்பார்த்து இளைய மகள் ஜிராவும் கார் கேட்க, அவருக்கு மேவெதர் பரிசளித்ததோ ரோல்ஸ் ராய்ஸ். மகன்களின் பிறந்தநாள் பார்ட்டிகள் ஒவ்வொன்றுமே பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் கொண்டாடப்படும்.  

 உலகின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்துதிரிந்தாலும் குத்துச்சண்டை வீரர்கள் மத்தியில் ஓர் ஒற்றுமையைக் கவனிக்கலாம். அவர்கள் எல்லோருமே வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அத்தனை பேருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பவர் மேவெதர்.  ஏனென்றால், எதிராளிகளை வென்றவராக மட்டுமே அறியப்பட்டவரில்லை அவர்; வாழ்வை வென்றவர்... வறுமையை வென்றவர்!