Published:Updated:

யாரும் சிரிக்காதீங்க!

யாரும் சிரிக்காதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
யாரும் சிரிக்காதீங்க!

நித்திஷ் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

யாரும் சிரிக்காதீங்க!

நித்திஷ் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
யாரும் சிரிக்காதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
யாரும் சிரிக்காதீங்க!

ஸ்டாண்ட் அப் காமெடி... வைகோவின் ஸ்டைலில் இதன் வரலாற்றைச் சொன்னால், கிரேக்கப் புராணங்களில் கி.மு 400-லேயே இந்தக் கலை தோன்றிவிட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலை நாடுகளில் வெகு பிரபலமாக இருந்த இந்தக் கலையில் இப்போது நம்ம பசங்களும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். தமிழ் இளசுகளின் யூடியூப் ஹிட்லிஸ்ட் முழுக்க இந்தத் தமிழ்ப் பசங்களின் ராஜ்ஜியம்தான். அரசியல், இசை, சினிமா, சமூகம் என எல்லாவற்றையும் தங்கள் ஸ்டைலில் நக்கலடித்துக் கெத்து காட்டும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் சிலரைத் தங்களின் எஸ்.டி.டி-யை பகிர்ந்துக்கொள்ள அழைத்தேன். அதிலிருந்து கொஞ்சம்...     

யாரும் சிரிக்காதீங்க!

அலெக்ஸாண்டர் பாபு

பெ
யர்தான் பீட்டர்பாய் லுக்கில் இருக்கிறது. ஆள் பக்காத் தமிழ்ப் பையன். தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் இருந்தபடி, ‘ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே’ ஸ்டைலில் ட்ரம்ப்பை இவர் கலாய்த்த வீடியோ செம வைரல். அங்கிருந்து அப்படியே வளர்ந்து டெல்லி வரைக்கும் வந்து விட்டார். இப்போது லேட்டஸ்ட்டாக ஹாரிஸ் ஜெயராஜை வைத்துச் சம்பவம் செய்துகொண்டிருக்கிறார். சின்னச் சின்ன இசைக்குறிப்புகளைக் கலந்து ஜோக்குகளை வாரித் தெளிப்பது அலெக்ஸின் தனித்துவ ஸ்டைல்.   

யாரும் சிரிக்காதீங்க!

‘`சின்ன வயசுல இருந்தே மேடை நாடகத்துல ஆர்வம். அப்பா சர்ச்ல பாடுவாரு. அவர் வழியா இசை ஆர்வமும் தொத்திக்கிச்சு. அண்ணா யுனிவர்சிடியில இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அமெரிக்காவுல வேலை பார்க்கப் போயிட்டேன். அங்கே தபேலா கத்துக்கிட்டேன். அதோட ஓர் இசைக்குழுவும் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினேன். அப்புறம் கர்நாடிக் மியூஸிக்கும் கத்துக்கிட்டேன். ஆனாலும், ஏதோ மிஸ்ஸாகிற மாதிரி இருந்தது. சென்னைக்கு ஃப்ளைட் பிடிச்சுட்டேன். இங்கே வந்து ‘நஞ்சுபுரம்’னு ஒரு படம், அப்புறம் சின்னச் சின்ன டி.வி ஷோஸ் பண்ணினேன்.

நமக்கான ஏரியா எதுன்னு தெரியாம குழப்பம் அதிகமாயிட்டே இருந்தது. மனைவி சொல்படி வேலையை விட்டுட்டு முழு மூச்சா எதுலையாவது இறங்கலாம்னு முடிவு பண்ணேன். அப்போதான் கார்த்திக் குமார், அரவிந்த் இவங்களோட ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்கள் எனக்கு அறிமுகமாச்சு. அவங்க வழியா எனக்கும் பெர்ஃபார்ம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. நம்ம சொந்த வாழ்க்கைல இருந்து ஒரு விஷயத்தை எடுத்து நகைச்சுவையா சொன்னா, எல்லாரும் ரிலேட் பண்ணிக்குவாங்கன்னு புரிஞ்சது. அந்த ஸ்டைலை ஃபாலோ பண்ணத் தொடங்கிட்டேன். முன்னாடி என்ன சொன்னாலும் பெர்சனலா எடுத்துக்குவாங்க. ஆனா, இப்போ காமெடியா கருத்து சொல்றதுக்கான ஸ்பேஸ் அதிகமாகியிருக்கு. இன்னொரு முக்கியமான மேட்டர். நானொரு யோகா டீச்சரும் கூட’’ என அவர் கேப் விடாமல் பேசியதில் எனக்கே தொண்டை வறண்டது.

யாரும் சிரிக்காதீங்க!

மனோஜ் மென்டோ

சப்பில் சோனியா அகர்வாலிடம் சோகத்தைக் காட்டும் ‘காதல் கொண்டேன்’ தனுஷ் போலவே இருக்கிறார். ஆனால், வாயைத் திறந்தால் டஸ்ட்டரில் அடிவாங்கிக் கோபமாய் போர்டில் கிறுக்கும் ஆக்ரோஷ தனுஷ் ஸ்டைலில் மளமள வென வார்த்தைகள் ஜோக்குகளாய் வந்து விழுகின்றன. அண்ணா யூனிவர்சிட்டி எக்ஸாம்கள், ஃபேஸ்புக் ரியாக்‌ஷன்கள் என காலேஜ் பட்டாளத்தைக் குறிவைத்து அடித்து லைக்ஸ் அள்ளுகிறார் மனோஜ்.    

யாரும் சிரிக்காதீங்க!`‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதாங்க. இன்ஜினீயரிங்தான் படிச்சேன். காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல பயங்கர ஆக்டிவ். ஸ்டேஜ் ஏறி ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன். காலேஜ் முடிச்சதும் இன்ஃபோசிஸ்ல வேலை. அங்கே எனக்குப் பெருசா எதுவும் பண்ண வாய்ப்புக் கிடைக்கலை. 2013-ல ஸ்டாண்ட் அப் காமெடி கலாசாரம் சென்னைல பரவ ஆரம்பிச்சது. 

‘ஓப்பன் மைக்’னா யார் வேணும் னாலும்  காமெடி பண்ணலாம். சென்னையில முதல்தடவையா அது நடந்தப்போ நானும் கலந்துக் கிட்டேன். அப்படியே ஈவம்ல சேர்றதுக்கான வாய்ப்பு வந்தது. இப்போ நிறைய ஷோக்கள் பண்ணிட்டிருக்கேன். ஃபேன் பேஸும் எகிறிக்கிட்டு இருக்கு’ என தம்ஸ் அப் காட்டுகிறார்.

யாரும் சிரிக்காதீங்க!

பாலகுமாரன்

மா
நிறம், அசடு வழியும் சிரிப்பு என அப்படியே நம்ம வீட்டுப் பையன் லுக் பாலாவுக்கு. லவ், ரொமான்ஸ், இன்ஜினீயரிங் சிலபஸ் என யூத்துகளின் தலையாயப் பிரச்னைகளை நக்கலாக இறங்கியடிப்பது பாலா ஸ்டைல். தொடர்ந்து இவரை ஃபாலோ செய்பவர்கள், ‘பாவம் இந்தப் பையன் நிஜமாவே சிங்கிள் போலயே’ என நிஜமாகவே உச்சு கொட்டுகிறார்கள்.

`‘நானும் மதுரக்காரந்தான்டா ஆஆஆ’ என விஷால் டயலாக்கை விஷால் தத்லானி வாய்ஸில் சொல்லிக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார். ‘`பெரிய வரலாறெல்லாம் இல்லை பாஸ். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்கு வந்தேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு அப்புறம் வேலை ரொம்ப போர் அடிச்சது. 2008-ல ஸ்டாண்ட் அப் காமெடி பற்றி ஒரு இங்கிலீஷ் சீரியல் பார்த்தேன். ‘அட இது நல்லாருக்கே’னு யூ-டியூப்ல அது சம்பந்த மான வீடியோக்களை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன். அதைப்பற்றி நிறைய படிச்சேன். அப்படியே ஓர் ஆர்வம் வந்துடுச்சு.

ரெண்டு வருஷம் முன்னாடி இனி இதுதான் நம்ம ஏரியான்னு தோணவே சாஃப்ட்வேர் வேலையை விட்டாச்சு. அப்புறம் ‘புட் சட்னி’ டீம்ல சேர்ந்தேன். அவங்களோட வைரல் வீடியோவான ‘Batman from Chennai’ என் ஜோக்கை வெச்சு எழுதுன ஸ்கிரிப்ட்தான். இப்போ விஜய் டி.வி-யில ஷோ பண்ணிட்டிருக்கோம். ஸ்டாண்ட் அப் காமெடியோட சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதுறதுலேயும் ஆர்வம் அதிகம். சீக்கிரமே என் பேரை நீங்க சினிமாவுலேயும் பார்க்கலாம்’ என அதே அசட்டுச் சிரிப்போடு முடிக்கிறார்.

யாரும் சிரிக்காதீங்க!

பேகி

ஸ்டாண்ட் அப் உலகின் கொழுகொழு அமுல் பேபி. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு அள்ளும் நமக்கு. அதுதான் இவரின் ஹிட் ஃபார்முலாவும். வடிவேலு ஸ்டைலில் தன்னைத்தானே சுய பகடி செய்துகொள்ளும் இவரின் காமெடி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் எக்கச்சக்கமாக ஷேர் ஆகின்றன. இப்போது தென்னிந்தியா முழுக்கச் சுற்றிச் சுற்றி ஷோக்கள் செய்துகொண்டிருக்கிறார்.

‘`எனக்கு முன்னாடி பேசுன எல்லாருமே இன்ஜினீயரிங்னு சொல்லியிருப்பாங்களே. நானும் அதே டிகிரிதான். அதெல்லாம் இப்போ ப்ளஸ் டூ மாதிரிக் கட்டாயம் படிக்க வேண்டிய டிகிரி பாஸ்’’ என கலகலப்பாகத் தொடங்கினார் பேகி. ‘`காலேஜ் முடிஞ்சதுமே கார்த்திக் குமாரோட ஈவம்ல சேர்ந்துட்டேன். அப்போ நாடகங்கள் பண்ணிட்டிருந்தாங்க. அதுல நடிகனாகவும் இயக்குநராகவும் வேலை பார்த்தேன். ‘வாட் நெக்ஸ்ட்’னு 2010-ல தோணவும் கார்த்திக் குமார் அண்ட் கோவை வெச்சு ‘அர்பன் டர்பன்’னு ஒரு காமெடி ஷோ டைரக்ட் பண்ணினேன். அது செம ஹிட்.

2014-ல மும்பைல ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஃபெஸ்டிவல் நடந்தது. கிட்டத்தட்ட ஃபிலிம் ஃபெஸ்டிவல் மாதிரிதான். ஒரே நேரத்துல பல இடங்கள்ல ஷோ நடந்துகிட்டே இருக்கும். அதை நேர்ல பாத்தப்போதான் ‘டைரக்‌ஷன் பண்ணினது போதும். நாமளும் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணலாம்’னு தோணுச்சு. உடனே களமிறங்கிட்டேன். படிப்படியா நிறைய ஷோ பண்ண ஆரம்பிச்சேன். விஜய் டி.வி-யில ‘லிட்டில் ஜீனியஸ்’னு ஒரு ஷோ தொகுத்து வழங்கினேன். இப்போ நிவின் பாலியோட ‘ரிச்சி’, அப்புறம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’னு ரெண்டு படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்’’ என பிசி ஷெட்யூலை விவரிக்கிறார் பேகி.

நல்லா கலாய்ங்க கண்ணுகளா!