Published:Updated:

“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”
பிரீமியம் ஸ்டோரி
“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: கே.ராஜசேகரன்

“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”
பிரீமியம் ஸ்டோரி
“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

`` ஒரு கவிதை நினைவுக்கு வருது... 

`என் அந்தரங்கக் கதவுகளைத்
திறந்தால்
எனக்குத் துன்பமல்ல...
உனக்குத்தான் துன்பம்’


இதுதான் எங்க வாழ்க்கை. இரண்டு பேருமே ஒருத்தரோட அந்தரங்கக் கதவுகளை இன்னொருத்தர்

“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

தட்டினதே இல்லை. அதனாலதான் சாருநிவேதிதா என்கிற தீவிரவாதியும் அவந்திகா என்கிற புத்தரும் ஒரே வீட்ல இத்தனை வருஷம் மகிழ்ச்சியா வாழ முடியுது.’’

கலகலவெனப் பேசுபவர் சாரு நிவேதிதா.

மயிலாப்பூர், அப்பு தெரு. வீட்டிற்கு வெளியில் ஒரு குட்டி மண்பானையில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. கார் நிறுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. பெரிய புத்தக பார்சல் ஒன்று வாசலில் கிடந்தது. அழைப்பு மணியை அழுத்த, சிரித்தபடி திறந்தார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

“அவந்திகாவும் வரட்டும். ஃபேமிலியா பேசுவோம்” என்றேன். “அதுக்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும். டைமிங்கை ப்ரேக் பண்றதுன்னா, அவளுக்கு அவ்ளோ இஷ்டம்” என சிரித்தார் சாரு.

``என் பையன் பேரு கார்த்திகேயன். மும்பையில மெரைன் இன்ஜினீயரா இருக்கான். அவனுக்கு இப்பதான் கல்யாணமாச்சு. மருமகள் பேரு அனு...” எனக் குடும்பம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

“அவந்திகாவை நான் முதன்முதலில் சந்திச்சபோது குடும்ப வாழ்க்கைகே அன்ஃபிட்டான ஆளா இருந்தேன். குடிகாரனா... சண்டைக்காரனா... ஆபீஸ்ல நடந்த ஒரு சண்டைல டெலிஃபோனை தூக்கிப்போட்டு உடைக்கிற ஆளா இருந்தேன். அதுக்கு மேலயும் அந்த ஆபீஸ்ல இருந்தா என்னைக் கோபப்படுத்தின ஆளை அங்கயே கொலை செஞ்சிடுவேனோனு ஒரு வருஷம் ஆபீஸூக்கே போகாம இருந்தேன். ஆனா, அவந்திகா அப்படி இல்ல. மகாத்மா காந்தி, அன்னை தெரசானு படிச்சிருப்போம், அப்படிப்பட்ட ஒருத்தி. கருணைதான் அவந்திகா.  வேலையை விட்டுட்டு ஒரு வருஷம் கழிச்சு எனக்கு மறுபடியும் வேறொரு தபால் அலுவலகத்துல வேலை கிடைச்சது. அங்கேதான் அவந்திகாவைச் சந்திச்சேன்...’’ என்று மனைவியைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க, உள்ளே வந்தார் சுகந்தா... அதுதான் `அவந்திகா’வின் நிஜப்பெயர்.

சாரு ஆரம்பித்த காதல்கதையை அவர் தொடர்ந்தார்... 

“போஸ்ட் ஆபீஸ்ல சாரு ஒரு அதிகாரியோட பெர்சனல் அசிஸ்டென்ட். நான் போஸ்ட்டல் அசிஸ்டென்ட். நான் ஒரு ட்ரெய்னிங் முடிச்சு ஆபீஸுக்கு வந்தப்போ, இவர் ஜாயின் பண்ணிருக் காங்கன்னு சொன்னாங்க. ரைட்டர்னு வேற சொன்னாங்க. அப்போ நான் என் வாழ்க்கையில ஒரு முக்கியமான காலகட்டத்துல பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். எனக்கு டைரி எழுதுற பழக்கம் இருந்தது. சந்திச்ச ரெண்டு மூணு நாள்ல, சாருகிட்ட என் டைரியைக் கொடுத்து ‘ஓர் எழுத்தாளரா, இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க’ன்னு சொன்னேன். வாங்கிக்கிட்டார். ஒரு வாரமா எந்தப் பதிலும் இல்லை.”

புன்னகையோடு தொடர்ந்தார் சாரு. “அந்த டைரிதான் `ஜீரோ டிகிரி’ல வர்ற ‘அவந்திகாவின் கதை’. டைரியைப் படிச்சுப் பார்த்தா, அவ்ளோ ஷாக்கிங்கா இருந்தது. இன்னொரு நம்பிக்கையான ஆளா இந்த உலகத்துல யாரை இவளுக்குக் காட்டுறதுன்னு குழப்பமா இருந்தது. ‘உங்களுக்கு ஓகேன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொன்னேன்.”

“அந்தத் தருணம் இப்பவும் என் கண்ல இருக்கு” - சொல்லும்போது சுகந்தாவின் கன்னங்களில் வெட்கச்சிவப்பும், கண்களில் நீரும். “சாருவுக்கு அப்போ ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். ‘சவக்குழியில் இருந்து ரத்தமும் சதையுமான என்னை எடுத்து உயிரூட்டினாய்’னு இருக்கும் அந்தக் கவிதை” என்றார்.

“மார்ச் முதல் வாரத்துல டைரி கொடுத்தா. படிச்சுட்டு மார்ச் 15-ம் தேதி ப்ரொபோஸ் பண்ணினேன். கல்யாணம் ஏப்ரல் ரெண்டாம் தேதி”   சிரிக்கிறார் சாரு.

``அடுத்தவங்களோட வலியை உணர்ந்துகொள்ள முடிகிற ஒருத்தராலதான் இப்படி இருக்க முடியும். அப்போ சாரு எனக்கு விஸ்வரூபமாத் தெரிஞ்சார். முதல்ல சாருவைப் பார்த்தப்போ, எப்படி உண்மைத் தன்மையோட இருந்தாரோ, அது இப்போ வரைக்கும் அதிகமாகிட்டேதான் இருக்கு. அவரோட நேர்மை எனக்கு எப்பவும் பிடிச்ச ஒண்ணு.”  அமைதியாகப் பேசுகிறார் சுகந்தா.

சுகந்தா வீட்டைவிட்டு வெளியே வந்து நின்றால், குறைந்தது நான்கைந்து நாய்கள் வாலாட்டுகின்றன. காலையில் சாப்பாடு ரெடிசெய்து, வளர்ப்பு நாய்கள் பப்பு, ஸோராவுக்குக் கொடுத்துவிட்டு வெளியே வந்து தெருநாய்களுக்கும் கொடுப்பது சுகந்தாவின் வாடிக்கை. வீட்டிற்குப் பின்புறம் போனால், பூனைகள் காத்திருக்கும். பிறகு காகங்களுக்கு உணவு வைப்பார். இந்த வாடிக்கையால், வெளியூர் செல்வது அபூர்வம்.

“சாருகூட வெளியில போறப்போ அவரை அடையாளம் கண்டுகொண்டு உங்ககிட்ட பேசுவாங்களா?” என்ற கேள்வியையெல்லாம் சிரித்துக் கடக்கிறார் சுகந்தா.

“அவளுக்கு பிரபலம்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நான் சூப்பர்ஸ்டாரா இருந்தாக்கூட அவளுக்கு நான் சாதாரண மனுஷன்தான். ஏன்னா அவளுக்கு இந்தப் பணம், புகழ் மாதிரி விஷயங்களில் ஆர்வமில்லை. ஒரு செயின்ட் மாதிரியான வாழ்க்கை.” என்கிறார் சாரு.

‘‘நீங்க ஏராளமான சர்ச்சைகளில் சிக்குற ஆள். அதுக்கு வர்ற விமர்சனங்களை எல்லாம் அவந்திகா எப்படி எடுத்துக்குவாங்க?’’
 
‘‘கொஞ்சம்கூட கவலைப்பட மாட்டாங்க... சொல்லப்போனா அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க. என்கிட்ட அதைப் பற்றி விவாதிக்கவும் மாட்டாங்க. எது என்னுடைய பாதைங்கிற தெளிவு அவங்களுக்கு உண்டு. இரண்டு பேருமே அவங்கவங்க பாதைகளில் சுதந்திரமா பயணிக்க முடியுதுன்னா, அதுக்குக் காரணம் அந்த இரண்டு பாதைகளும் எப்போதும் சந்திச்சிக்கறதே இல்ல!’’ என்றார் சாரு.

``சோஷியல் நெட் வொர்க்ல  சாருவைக் கலாய்க்கிறதெல்லாம் உங்க கண்ல பட்டதுண்டா?” சுகந்தாவிடமே கேட்டோம்.

“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா!”

“ஓ....” கொஞ்சம் பலமாகவே சிரிக்கிறார் . “என் கணவர்னு தெரியாம லேயே என் சர்க்கிள்ல சில பேரே இவரைப் பற்றிச் சொல்வாங்க.  ‘யாரு ரைட்டர் சாருவா?’னு தெரியாத மாதிரி கேட்டுப்பேன் நான்.” 
சுகந்தாவுக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. சாண்டில்யன், கல்கி வாசிப்பார். இப்போது ஆன்மிகம் குறித்து அதிகம் படிக்கிறார். பேட்டியின் போது சாருவிடம் ‘சேச்சே... அப்படி இல்லடா’ என்று இடைமறித்துப் பேசுவதில் வாஞ்சை கலந்திருந்தது.

சாருவிடம் கேட்டால், “டைமிங் ஃபாலோ பண்றதில்லை. அப்புறம் ரொம்ப அன்பு காட்றா. இது ரெண்டும்தான் குறை” என்கிறார். ஆனால் சாருவிடம் குறை என்ற ஒன்றைக் குறிப்பிடவே இல்லை சுகந்தா. ``என்னங்க ஒரு குறை கூடவா இல்லை?” என்று கேட்டால், மறுதலிப்பாய் தலையாட்டு கிறார்.

“அவ அப்படித்தான். எதிலேயும் அவ கண்ணுக்குக் குறையே தெரியாது” என்கிறார் சாரு.

நிறைவான வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது சாரு குடும்பம்!