சினிமா
பேட்டி - கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சில பறவைகளும்... சில கூடுகளும்!

சில பறவைகளும்... சில கூடுகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சில பறவைகளும்... சில கூடுகளும்!

இரா.கலைச்செவன் - படங்கள்: பா.காளிமுத்து - தே.அசோக்குமார்

சில பறவைகளும்... சில கூடுகளும்!
சில பறவைகளும்... சில கூடுகளும்!
சில பறவைகளும்... சில கூடுகளும்!

ங்களுக்கென ஒரு வானம், ஒரு பாதை, ஒரு பயணம்... எனத் தேர்ந்தெடுத்துப் பறக்கும் பறவைக்கூட்டங்கள் இந்த நான்கு குழுக்கள். தீராத ஆர்வங்களால், தனித்துவமான தேர்வுகளால், எழிலான எண்ணங்களால் ஒன்றிணைந்த சின்னச்சின்னக் குடும்பங்கள். தேடல்களால் பிணைந்த இந்த உறவுகள் ஒன்றுசேரும் இடங்களில் எல்லாம் பகிர்தலின் ஆனந்தம் கொடிபோலப்படர்கிறது. 

கதை கேளு... கதை கேளு!

“என்னோட கதையை இங்கிருந்து ஆரம்பிக்கிறேன். எல்லோர் வாழ்க்கையிலும் ஓர் இக்கட்டான நிலைமை வரும்ல. அதாவது எந்தப் பக்கமுமே நகர முடியாத அளவுக்கு பிரச்னைகள் கட்டிப்போடுமே... அப்படி நினைச்சது எதுவுமே நடக்காது; நடக்கிற எதுவுமே பிடிக்கிற மாதிரி இருக்காது. என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும். எங்கேயாவது, யாருமே இல்லாத ஓர் இடத்துல போய் நின்னு வானமே இடியற மாதிரிக் கத்தணும், பூமி முழுக்க நனையற மாதிரிக் கண்ணீர் சிந்தி அழணும்னு தோணுமே... அப்படியான சூழல்ல இருந்தேன். அப்போ பாண்டிச்சேரியில  மன அழுத்தத்துக்கு கவுன்சிலிங் கொடுக்கும் ஒரு குழுவோட மீட்டிங்கிற்குப் போயிருந்தேன்.  

அந்த இரண்டு நாள் கேம்ப்போட இறுதியில ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்தாங்க. ‘சொந்த வாழ்க்கையில இருக்கிற கதையைச் சொல்லணும்.’ இதுதான் எனக்கான டாஸ்க். முதலில் அதிகம் பழக்கமில்லாதவங்க மத்தியில நின்னு நம்முடைய கதையை எப்படிச் சொல்றதுங்கிற தயக்கம். ஆனா, பேச ஆரம்பிச்சதும் என்ன நடந்ததுன்னு தெரியல. என்னோட மொத்தக் கதையையும் சொல்லி முடிச்சுட்டேன். சொல்லி முடிச்சதுக்கப்புறம் எனக்கு அழுகை வரல... ஆனா, என்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கிற எல்லோருமே அழுதிட்டிருந்தாங்க. என் மனசுல இருந்து ஏதோ பெரிய பாரம் இறங்கிய மாதிரி இருந்தது. அப்போதான் ஒரு கதை சொல்லலோட வலிமை என்னங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன்” என்று கண்களை உருட்டி காதுகள் சிவக்கக் கதை சொல்லத் தொடங்குகிறார் இந்து திவ்யா.

`தி நேரேட்டிவ்’ (The Narrative) எனும் கதை சொல்லல் குழு சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வார இறுதிகளில் குழுவாக ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்வின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவ்வளவே... இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றலாம். ஆனால், கதை சொல்லல் ஒரு கலை மட்டும் அல்ல; அது மிகப் பெரிய உளவியல் என்று சொல்கிறார் இந்து.   

சில பறவைகளும்... சில கூடுகளும்!


“ப்ரோ...ப்ரோ... இந்தக் கதையெல்லாம் கேட்டு ஏதோ நாங்க எப்பவுமே பேசி அழுதுட்டிருப்போம்னு நினைக்காதீங்க. எங்களுக்கு இன்னொரு முகமும் இருக்கு. அது செம ஜாலியா, கலாட்டாவா இருக்கும். சமயங்கள்ல சில கதைகளைக் கேட்டு சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சிடும். ஸோ, இந்த மீட்டிங் அழறதுக்கு மட்டுமில்ல, சிரிக்கி றதுக்கும் சேர்த்துதான்’’ என்று சொல்லிச் சிரிக்கிறார் ஸ்லோகன். (அவர் பேரே அதுதாங்க) 

சில பறவைகளும்... சில கூடுகளும்!ஐ.டி கம்பெனி வேலையிலிருந்த இந்து, கதை சொல்லல் மீதான ஆர்வத்தினால் தன் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக இதில் ஈடுபட்டுள்ளார். ஒரு கதையை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கான தனிப் பயிற்சிவகுப்புகளையும் இவர் எடுக்கிறார். இந்த நிகழ்வுகளைத் தற்போது சென்னையைத் தாண்டி பெங்களூரு, கொச்சின் போன்ற நகரங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் இந்தக் குழு ஒன்றிணைந்து, தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறது. சிரிக்கவும்,அழவும், சிந்திக்கவும், நினைக்கவும் இங்கு நிறைய கதைகள் கிடைக்கும். ஒரு வாரத்தின் இரண்டு மணி நேரம் உங்களுக்கு ஓர் அழகான அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் இந்த நவீனக் கதைச் சொல்லிகள்.

சில பறவைகளும்... சில கூடுகளும்!

“இது எங்க ஏரியா உள்ள வராதே!”

ந்த அதிகாலை நேரத்தில் மெரினாவின் மணற் மேட்டில் வேகவேகமாக மேலும், கீழுமாக  ஓடிக்கொண்டிருந்தார்கள் அந்தப் பெண்கள். இவர்கள்தான் நாம் சந்திக்க வந்திருக்கும் `சாவித்ரிபாய் பூலே’ பெண் பயணக் குழுவாக இருக்கும் என்ற சந்தேகத்தில் நெருங்கினோம். கேமராவோடு நாம் வருவதைப் பார்த்ததும், “விகடன்தானே?...வாங்க,வாங்க” என்று நம்மை வரவேற்றார் கீதா இளங்கோவன். சில நிமிடங்களில் பயிற்சியிலிருந்த மொத்தப் பெண்களும் வந்து சேர்ந்தார்கள்.

“மூணாறுல ஒரு வனத்துக்குள்ள ட்ரெக்கிங் போயிருந்தோம். சாயங்காலம் நேரம் ஆகிடுச்சு. மழையும் வேற தூறத் தொடங்கியது. ஒரு கட்டத்துல எப்படியோ எங்களில் சிலரும், இன்னொரு குழுவைச் சேர்ந்த ரெண்டு பேரும் எங்கேயோ வழி மாறிட்டோம். தன்னந்தனியா அந்தக் காட்டுக்குள்ள சிக்கிட்டோம். செல்போன் சிக்னல் இல்ல... இருட்டு, குளிர், மழை, காடுன்னு ரொம்பவே பயத்தைக் கொடுக்கிற சூழல். எங்க கூட இருந்த ஆண்  ஒருவர் ரொம்பவே  பயப்பட  ஆரம்பித்துவிட்டார்.

நான் கொஞ்சதூரம் நடந்துபோனேன்.  ஓர் இடத்தில் செல்போன் சிக்னல் கொஞ்சம் கிடைத்தது. உடனே என்னோட கைடுக்கு போன் பண்ணினேன். நாங்க இருக்கும் இடத்திலிருந்து டார்ச்லைட்டை மேல் நோக்கி அடிக்கச் சொன்னார். அரைமணி நேரத்தில், வந்து சேர்ந்தார். சத்தம் போடாம அப்படியே மெதுவா நடந்து வாங்க என்று சைகையில் சொன்னபடியே எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்.” என டெரர் ட்ரெக்கிங் ஓப்பனிங் தருகிறார் கீதா.

முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே இணைந்து நடத்தும் பெண்களுக்கானப் பயணக் குழு இந்த `சாவித்ரிபாய் பூலே’ குழு. தமிழகத்தின் டாப் ஸ்லிப் தொடங்கி, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், இமயமலைவரைப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் பெண்கள் பயணிப்பதை ஊக்குவிப்பது.

ஐந்து வயது யாஷ்னாவிலிருந்து 55 வயது சித்ரா வரை இந்தக் குழுவில் இருக்கிறார்கள். “என் பெண்ணுக்கு அப்பா கிடையாது. ஆனால், இங்கு அவளுக்கு நிறைய அம்மாக்கள் இருக்கிறார்கள். என் வலிகளிலிருந்து வெளிவர, என்னை நானே மீட்டெடுக்க, நான் நானாக இருக்க இந்தப் பயணங்கள தான் உதவி செய்கின்றன.” என்று சொல்கிறார் பிருந்தா சேது.

“கல்யாணத்தோடும், குடும்பத்தோடும் மட்டுமே பெண்களின் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. பெண்கள் கண்டிப்பாகப் பயணிக்க வேண்டும். பயணம் அவர்களுக்கான புது உலகைக் காட்டிடும்” என்று  சித்ரா சொல்லி முடிக்கவும் மெரினாவில் சூரியனின் உஷ்ணம் அதிகமாகத் தொடங்கியிருந்தது.

கால்களை அந்த மண்ணில் புதைத்து வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தார்கள் சாவித்ரிபாய் பூலே பெண்கள் பயணக் குழுவினர்!

சில பறவைகளும்... சில கூடுகளும்!

கொஞ்சம் காபி, நிறைய உரையாடல்!

கொஞ்சம் காபி, கொஞ்சம் புத்தக வாசிப்பு, கொஞ்சம் நண்பர்கள்,  கொஞ்சம் விவாதம். இது பிடித்தவர்கள், இது வேண்டுபவர்கள் `காபி அண்ட் புக்’ கிளப்பில் சேரலாம். அந்த மாலை நேரத்தில், அந்தச் சந்திப்பில் அவர்கள் உரையாடிக் கொன்டிருந்தது `தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ (The Fault in Our Stars) எனும் புத்தகத்தைப் பற்றியது. 

“நான் சென்னைக்கு வந்த புதுசு. நிறைய படிக்கும் பழக்கம் எனக்கு. ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன்  யாருடனாவது அது குறித்துப் பேச  வேண்டும் என்று தோன்றும். ஆனா, என் நண்பர்களுக்கு அதில் பெரிய ஆர்வமிருக்காது. சரி... நம்மைப்போல் ஆர்வமிருப்பவர்களை ஒன்றிணைக்கலாம் என்று தொடங்கப்பட்டதுதான் இந்த ‘காபி அண்ட் புக்’ கிளப் ” என்று இன்ட்ரோ கொடுக்கிறார் ஜான் ஹேஸல்.

“ப்ரோ... இந்த குரூப்ல எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது. எங்க எல்லோருக்குமே புத்தகங்கள் வாசிப்பது பிடிக்கும் என்ற ஒற்றுமை மட்டும் தான். ஆனா, எந்தப் புத்தகம் படிக்கிறோம்ங்கிற விஷயத்துல நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிலர் தன்னம்பிக்கைச் சார்ந்த புத்தகங்கள் படிப்பார்கள், சிலர் அரசியல் சார்ந்தவை, சிலர் காமிக்ஸ், சிலர் புனைவுகளை விரும்பிப் படிப்பார்கள். இப்படி எந்தப் புத்தகமாக இருந்தாலும், அது குறித்த உரையாடல்களை எழுப்புவோம்’’ என்று சொல்கிறார் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆகாஷ்.

நவீனமும், பழைமையும் கலந்த ஒரு கலப்புக் குழுவாக இவர்கள் இருக்கிறார்கள். சிலர் கிண்டில்களிலும், மொபைல்களிலும் படிப்பவர்கள். சிலர் முழுக்க முழுக்கப் புத்தகங்களில் படிக்கும் பழக்கம்கொண்டவர்கள். இந்தக் குழுவில் சேரவும், உரையாடல்களில் பங்கேற்கவும் எந்தக் கட்டணமும் கிடையாது. குடிக்கும் காபிக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.

“புத்தக வாசிப்பு ஒரு போதை. இந்தக் குழுவில் இணைஞ்சதுக்கு  அப்புறம், ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் படிக்கிற அளவுக்கு என்னோட வாசிப்புப் பழக்கம் அதிகமாகியிருக்கு. இந்த மொத்தக் குழுவுல தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் படிக்கிறது நான்தான். இந்த உரையாடலும், வாசிப்பும், காபியோட சுவையும் ரொம்ப ரம்மியமா இருக்கும்” என்றார் சுடர்.

உரையாடலுக்கு நடுவே நாம் பேசிமுடித்துக் கிளம்ப...

“ புனைவுகளை அதிகம் தொடர்ந்து படிக்கும்போது அது நமக்குள் ஒரு மாற்று உலகத்தை உருவாக்குது. அது நம்முடைய வாழ்க்கைக்குப் பெரிய சிக்கலைக் கொடுக்குது. தன்னோட புத்தகங்கள் வழியா ஒரு பொய்யான உலகத்தை ஜான் க்ரீன் உருவாக்குகிறார்.”

“ இல்லை. இதை நான் முற்றிலுமா மறுக்கிறேன். புனைவு என்பது...”

அவர்களின் உரையாடல் அலை அலையாய் தொடர்ந்து கொண்டிருந்தது.

சில பறவைகளும்... சில கூடுகளும்!

“மனுசங்கடா... நாங்க மனுசங்கடா!”

`` `ம
னுசங்கடா நாங்க மனுசங்கடா,

உன்னப்போல அவனப்போல எட்டு சாண் ஒசரமுள்ள மனுசங்கடா

நாங்க மனுசங்கடா...’

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களுக்காக இன்குலாப் எழுதிய இந்தக் கவிதை எங்களுக்கும் பொருந்தும். அப்படி என்னங்க நாங்க தப்பு செஞ்சுட்டோம் ? மாற்றுப்பால்மீது மட்டும்தான் ஈர்ப்பு வரணும்னு  யாருங்க சட்டம் போட்டது? எங்களை மீறி எங்க உடல்லேயும், மனசுலேயும் நடக்கும் மாற்றத்துக்கு நாங்க என்ன செய்திட முடியும்? அதுக்கு ஏங்க எங்களை இவ்வளவு கேவலமா பார்க்குது சமூகம். பள்ளியில, வீட்ல, வேலையிலன்னு எங்கே போனாலும் எங்களுடைய முகத்தை மறைச்சு ஒரு வேஷம் போட வேண்டியிருக்கு. அப்படி அந்த முகமூடிகளை எல்லாம் கழற்றி எறிஞ்சிட்டு, எங்களோட உண்மையான முகத்தோட சில மணி நேரங்களாவது வாழ்ந்திடணும்னுதான் இந்தக் குழுவைத் தொடங்கினோம். இதோ, இப்போ ஒவ்வொரு வாரமும் எங்களுடைய நிஜ முகங்களோடு ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு சிரிச்சுப்பேசி நிம்மதியா இருக்கிறோம்.” என்று கடல் அலைகளின் சத்தத்தைக் கடந்து வெடிக்கிறார் தமிழ்நாடு எல்.ஜி.பி.டி. ஐ.க்யூ (LGBT IQ) குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஷரண்.

“ஓரினச் சேர்க்கையாளர்கள்...” என்று கேள்வியைத் தொடங்கும்போதே, “சார்... எங்களை அப்படி அழைக்காதீங்க. அந்த வார்த்தை ஏதோ நாங்க காமத்திற்காகவே சேர்வது போன்ற ஒரு தொனியைத் தருகிறது. எங்களை ‘சமபால் ஈர்ப்பாளர்கள்’ அப்படின்னு சொல்லுங்க. ஏன்னா, உடல் தேவையைத் தாண்டி எங்கள் துணையிடம் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்று தங்களின் நியாயமான உணர்வுகளைப் பகிர்கிறார்.

“சமூகவலைதளங்களும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் எங்களுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கின்றன. எங்கள் உணர்வுகளை எங்கு பகிர்வது, யாரிடம் பகிர்வது எனப் புழுங்கிக் கொண்டிருந்த  எங்களைப் போன்றவர் களை ஒன்றிணைக்க இவை பெரிய அளவில் உதவி செய்தன. 2015-ல் தொடங்கப்பட்ட எங்கள் குழுவில் சென்னையின் பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிலிருப்பவர்கள் எனச் சமபால் ஈர்ப்புகொண்ட பலரும்  இருக்கின்றனர்” என்று குழுவின் ஆரம்பத்தைச் சொல்கிறார் ராக்கி.

சமபால் ஈர்ப்பைக்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இருபால் ஈர்ப்புகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகள், பாலியல் நாட்டமில்லாதவர்கள் எனப் பலரும் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். இது இவர்களுக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமோ, பதிவு செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டுக் குழுவோ அல்ல. இது முழுக்க முழுக்க எல்.ஜி.பி.டி. வகுப்பினரின் உணர்வுப் பகிர்தலுக்கும், சக மனிதச் சந்திப்புகளுக்காக மட்டுமே இயங்கக் கூடியது.

“பள்ளிக்காலத்தில் எனக்குச் சமபால் ஈர்ப்பு குறித்தெல்லாம் தெரியாது. ஆனால், ஏன் மற்றவர்களைவிட நான் வித்தியாசப்பட்டு இருக்கிறேன் என்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டேயிருந்தது. பதினொன் றாவது வகுப்பு படிக்கும்போதுதான் ஒரு கட்டுரையில் இது குறித்தெல்லாம் படித்துத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து என்னை நான் ஏற்றுக்கொள்ளவே  நான்கு ஆண்டுகள் ஆகின. இடையே தற்கொலைக்கும் முயன்றேன். ஒருநாள் என்னைப்பற்றி ஒரு கடிதம் எழுதி என் அக்காவிடம் கொடுத்தேன். அவர் டாக்டர். கவுன்சிலிங் போகலாம் என்றார். என்  சித்தப்பா ஓர் எழுத்தாளர். மூன்றாம் பாலினம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அவரிடம் போய் என்னைப்பற்றிச் சொன்னேன். அவரும் இதைச் சரிபடுத்திவிடலாம் என்று சொன்னார். 

என் கேள்வி... என்னை ஏன் சரிபடுத்த வேண்டும்? ஒவ்வொரு நொடியும் ஒரு பெரிய அழுத்தம் அழுத்திக் கொண்டே யிருக்கும். நம்மைப் புரிந்து கொண்ட ஏதாவது ஒரு தோள் கிடைத்திடாதா, அதன்மீது தலை சாய்த்து அழுதிட மாட்டேனா என்று ஏங்கிக்கிடந்த கால கட்டத்தில் இந்தக் குழுவில் இணைந்தேன். இதோ என் பெயரைத் தைரியமாக வெளிச்சொல்லும் அளவிற்கு நம்பிக்கை பெற்றுள்ளேன். என் பெயர் மோகன் குமார்” என்று அவர் சொல்லும்போதே கண்ணீர்விட அவரைத் தேற்றுகிறார் ஷரண்.

“சமபால் ஈர்ப்பை கிரிமினல் குற்றமாகக் கருதும் செக்‌ஷன் 377-ஐ நீக்க வேண்டும் என்பதுதான் அரசிடம் நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை. இந்தச் சமூகம் எங்களை அங்கீகரிக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்கள் பெற்றோர் மட்டுமாவது எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் ஒவ்வொருவரின் பெரும் கனவு.” என்று பெரும் நம்பிக்கையோடு சொல்லிக் கைகளை உயர்த்திக் காட்டுகிறார் ராக்கி. அதிகாலை சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது.