Published:Updated:

“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”

“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”

வரவணை செந்தில் - படங்கள்: ந.கண்பத்

“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”

வரவணை செந்தில் - படங்கள்: ந.கண்பத்

Published:Updated:
“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”

“உங்களுக்குத்தான் அவர் ஆதவன். எனக்கு ரவி மாமா. மத்தவங்ககிட்ட பேசும்போது அவர் இவர்ன்னு சொன்னாலும் அவரை ‘வா..போ...’ன்னுதான் நான் கூப்பிடுவேன். ‘வாங்க...போங்கன்னு கூப்பிடு’ன்னு என் அம்மாவில் தொடங்கி எல்லோரும் சொல்லிட்டாங்க. ஆனால் அப்படிக் கூப்பிட்டா எதோ அந்நியமா தெரியுது” என்று தன் இணையர் குறித்து நிறைமிகு வாஞ்சையுடன் பேசத்துவங்குகிறார் மீனாதேவி. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் மனைவி. ஆதவன் என்கிற பறவைக்கு இலக்கிய வானம் அளக்கச் சிறகு வழங்கிய தேவதை.

எழுத்தாளர், ‘புதுவிசை’ இதழின் ஆசிரியர், `தமுஎகச’வின் துணைப்பொதுச் செயலாளர், ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யின் தலைவர் எனப் பொறுப்புகளும் கடமைகளும் நிறைந்தவர் ஆதவன் தீட்சண்யா. தட்டச்சராகக் கிடைத்த வேலையை வடநாட்டில் யாரோ தொடர்ந்த வழக்கால் இழந்து  20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் மீனா. போபால் இந்திய அறிவியல் கழகத்தில் படிக்கிறார் இவர்களது ஒரே மகளான தீட்சண்யா.

“சன்னல் திட்டில் வைத்திருக்கும் நாலணாவுக்கும் எட்டணாவுக்கும்கூட இருவருக்கும் சண்டை வந்திருக்கு. அப்படி ஒரு எளிமையும் வறுமையும் சூழ்ந்த வாழ்க்கையை இருவரின் பரஸ்பர அக்கறையினால் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்” என்ற ஆதவன் தீட்சண்யா மீனாவைப் பெண்பார்த்த கதையில் இருந்து தொடங்கினார்.

“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”

“ ‘தோழர்... அதான் வேலை கிடைச்சிடுச்சில்ல. அடுத்த கட்டத்துக்கு நகருங்க’னு சொல்லிச் சங்கத் தோழர் ஒருவர் பெண் பார்க்க அழைச்சிட்டுப் போனார். அவர்கள் முஸ்ஸிம் குடும்பம். பொண்ணோட அப்பாவும் இயக்கத் தோழர்தான் என்பதால் அவருக்கு மத நம்பிக்கை எல்லாம் கிடையாது. பொண்ணுக்கு என்னைப் பிடித்து விட்டது. சரி திருமண ஏற்பாடுகள் செய்யலாம் என அடுத்தகட்டத்துக்கு நகரும்போதுதான் பொண்ணோட தாத்தா ‘மதம் மாறிப் பேத்திக்குத் திருமணம் செஞ்சா செத்துடுவேன்’ன்னு  சொல்லிட்டு வீட்டை விட்டுப் போயிட்டாராம். ‘மன்னிச்சிடுங்க’ன்னு ஒரு வரி மறுப்பு சொல்லப்பட்டது. எனக்கோ என்னுடைய ஈகோ கடுமையாகச் சீண்டப்பட்டது மாதிரி ஆகிடுச்சு. அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதி என்னுடைய ‘வன்மையான கண்டனங்களை’ தெரிவிச்சுக்கிட்டிருந்தேன். அவர் பாவம் நொந்து போயிட்டார். ஒரு கட்டத்தில் நானே அது தவறுன்னு உணர்ந்து நிறுத்தினேன். அந்தக் காலகட்டத்தில்தான் நெடுஞ்சாலை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரின் பெண் இருக்கிறார் என்று இன்னொரு  தோழர்  அழைத்துப்போனார். இவங்களைப் பார்த்தவுடனே சரின்னு சொல்லிட்டேன்” என்று ஆதவன் தீட்சண்யா பேசிமுடிக்க..

 “ஆங்... இவர் என்ன சொல்லிட்டா வந்து பொண்ணு பாத்தாரு..” என்று உள்ளே புகுந்தார் மீனா. 

“என் அப்பா ஹைவேஸ் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அங்க டெம்ப்ரவரியா ஒரு  டைப்பிஸ்ட் போஸ்ட் காலியா இருந்தது. நான் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் டிகிரி முடிச்சிட்டு வந்த புதுசு. வீட்டில் சும்மா உக்காரக் கூடாதுன்னு அந்த வேலையில் ஜாய்ன் பண்ணேன். அப்போ ஒருநாள் ஹெட்கிளார்க் என்னைக் கூப்பிட்டு ‘நாளைக்கு ஒருத்தர் வருவார். அவர் டிக்டேட் பண்ணுறத டைப் பண்ணிக்காட்டு’ன்னு சொன்னார். சொன்ன மாதிரியே காலையில் சீக்கரமே வந்து காத்துட்டு இருந்தேன். மதியம் மூன்று மணி இருக்கும். ஒருத்தர் என் எதிர்ல வந்து உட்கார்ந்துகிட்டு என்னை முறைச்சுப் பார்த்துட்டே இருந்தார். `யார் இந்த ஆளு... இப்படி முறைச்சுப் பார்க்கிறாரே’ன்னு டவுட்டா இருந்துச்சு. அவரு  எந்திருச்சுப் போன  பிறகு  ஹெட்கிளார்க் மறுபடி அழைச்சு ‘இப்ப ஒருத்தர் உன் முன்னாடி உட்கார்ந்து இருந்தாரே அவரைப் பார்த்தியா, ஆளு எப்படி?’ன்னு கேட்டாரு. ‘யாரு சார்? ஜோல்னா பை போட்டுட்டுத் தாடி, பெரிய கண்ணோட பார்க்க ரௌடி மாதிரி இருந்தாரே அவரையா கேட்டீங்க?’ ன்னு நான் திரும்பக் கேட்கவும் அவர் ஒரு மாதிரி ஆகிட்டார். ‘ஏம்மா..அவன்தான் உன்னைப் பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை. உனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்க வந்தா இப்படிச் சொல்லுறீயே’ன்னார். ‘உண்மையைத்தான் சார் சொன்னேன்’ என்றேன். இப்போகூட பாருங்கள் அப்படித்தானே இருக்கார்” என்று தன்  ‘ரவி மாமா’வை உரிமையுடன் கலாய்க்கிறார் மீனா.

“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”


“சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுத்த புண்ணிய பூமியான ஓமலூர் ஆர்.சி செட்டிபட்டிதான் என் சொந்த ஊர். அங்கிருந்து இங்க கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்வதற்குச் சொந்தங்களை விட்டுட்டு வந்த குடும்பம் என்னுடையது. அக்கம்பக்கத்தில் உறவினர்கள் யாரும் இல்லாமல் காட்டுக்கொட்டாயில் வளர்ந்தவன். அப்படி இருந்தவனுக்கு ஓர் ஊர் முழுக்க உறவினர்களைக்கொண்ட மீனாவையும் அவர்களின் குடும்பத்தையும் பிடிக்காமல் போகுமா? எனக்கு ஓகே, ஆனால் என் மாமனாருக்கு என் அரசியல் செயல்பாட்டினால் பயம். ‘கட்சி, போராட்டம்ன்னு போய் நாளைக்கு வேலை போயிட்டா என் புள்ளையில்ல கஷ்டப்படும்’ன்னு யோசிச்சிருக்கார். ஆனால் என் மச்சான்களும் மீனாவும்தான் அவரை கன்வின்ஸ் பண்ணிச் சம்மதிக்க  வெச்சிருக்காங்க. இப்போதும் ‘புது விசை’ அச்சுக்குத் தயாராகும் நேரத்தில் கையைக் கடிக்கும் சூழல் ஏற்படும் போதெல்லாம் அதே மச்சான்கள்தான் உதவுகிறார்கள்.” என்ற ஆதவன் தீட்சண்யா தான் இதுவரை கடந்திருக்கும் வாழ்க்கையின் நெகிழ்ச்சியான பக்கங்களுக்கு நகர்கிறார்.

“வீட்டுக்குள்ளேயே சாமி இருக்கு!”

“ஓசூரில் கும்பல் ஒன்று அப்பாவி குடும்பத்தினுள் புகுந்து வீட்டிலிருந்த தகப்பனின் கழுத்தில் கயிற்றைக்கட்டித் தொங்கவிடுகின்றது.  அதன் பின்னர் தாயையும் மகளையும் தூக்கிச்சென்று வன்புணர்ச்சியில் ஈடுபட்டு வெறியாட்டம் ஆடிச்செல்கிறது. காவல்துறையும் இந்தப் படுபாதகத்தை மூடி மறைக்கிறது. ஆனால் ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகை வெளிக்கொண்டு வருகிறது. நாங்கள் கடுமையான போராட்டத்தில் இறங்குகிறோம். வழக்குப்பதிவது என்பதைத்தாண்டி இந்த விவகாரத்தை ஈகோ பிரச்னையாகப் பார்க்கத்துவங்கிவிட்டது காவல்துறை. எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தது. அப்போது மீனா நிறைமாத கர்ப்பிணி. நான் நள்ளிரவில் வீட்டுக்கு வந்துவிட்டு அதிகாலையில் கிளம்பிடுவேன். கிட்டத்தட்ட  ஒரு   தலைமறைவு வாழ்க்கை போன்ற காலக்கட்டம். ஒருநாள் நள்ளிரவு நான் வீட்டில் இல்லை. கதவு தட்டப்படுகிறது. போலீஸாகவும் இருக்கலாம், பொறுக்கிகளாகவும் இருக்கலாம். நீண்ட நேரம் தட்டிய பிறகு `அம்மணி நான்தான்மா’ என்று ஒரு குரல். அதைச் சொன்னவுடன் டக்கென்று கதவு திறந்துள்ளது. “ஏம்மா இவ்வளவு நேரம் கதவுக்குப் பின்னாடியா நின்னுட்டு இருந்த?” என்ற கேள்வியுடன் கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் உள்ளே நுழைந்துள்ளனர்.   நிலவும் சூழலைச் சொல்லியிருக்கிறார் மீனா.

கர்ப்பமான சூழலிலும் மீனா என்னை விட்டுப் போய்விடாமல் இருந்ததைப் பின் ஒருநாள் கோணங்கி சுட்டிக்காட்டினார். என்னோட எழுத்துக்களைப் படிக்கிறாயா என்று கூட நான் மீனாவிடம் கேட்டதில்லை. ஆனால் நான் சரியான பாதையில் போகிறேன் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. இலக்கியக் கூட்டம், அமைப்பு நிகழ்ச்சி என்று காலில் சக்கரம் கட்டியது போன்று பயணத்திலேயே இருப்பேன். மகள் தீட்சண்யா சிறுமியாக இருக்கும்போது நான் அருகில் இல்லை என்றால் காய்ச்சல் வந்துவிடும். மீனா நினைத்திருந்தால் என் பயணங்களை, அரசியல், இலக்கிய வாழ்க்கையைத் தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கான ‘ஸ்பேஸை’ வழங்கினார். அது இந்த உலகத்தை விடப்பெரிது”  உணர்ச்சிகளைப் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளாத எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நெகிழ்ந்த கணம் அது.

“தீட்சண்யாதான் எங்க ரெண்டு பேரின் சொத்தும். எல்லா பொண்ணும் அப்பா செல்லமா இருப்பாங்க. அம்மாகிட்ட அட்வைஸ் கேட்பாங்க. இவள் அதற்கு நேர்மாறாக அப்பா கிட்ட அட்வைஸ் கேட்டுக்குவா. என்கிட்டதான் செல்லமா இருப்பா.” என மகளைப் பற்றி சிலாகிக்கிறார் மீனா. 

“நான் நிகழ்ச்சிகளுக்காகவும் தொழிற்சங்க வேலைகளாகவும் பயணப்பட்டுக்கொண்டே இருந்தாலும் கவனித்துக்கொள்ள வேண்டிய இரண்டு பெண்கள் உள்ளனர். ஒருவர் என் மகள் தீட்சண்யா, இன்னொருவர் என் தாய் ரத்தினம்மாள். மகள் படிக்கப்போய்விட்டார். அம்மா இன்னும் பாப்பிரெட்டிபட்டி அருகில் உள்ள அலமேலுபுரத்தில் தனியாக விவசாயம் செய்து வருகிறார். நான் கூட வேலைப்பளுவினால் மாதக்கணக்கில் அவரைப்போய்ப் பார்க்காமல் இருந்துவிடுவேன். ஆனால் மீனா ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒருமுறை போய் வந்துவிடுவார். மாமியாரும் மீனாவுக்கு அம்மாதான்” என்கிறார் ஆதவன். அருகில் இருந்த கோயிலில் படம் எடுக்கலாம் வாங்க என அழைக்கிறார் புகைப்படக்கலைஞர்.

“கோயில்லாம் வேண்டாம் பாஸ். கல்யாணம் ஆனதிலிருந்து ஒருநாள்கூட நாங்க போனதேயில்லை” என்று ஆதவன் மறுத்துக்கொண்டிருக்கையில் “அதான் வீட்டிலேயே கருப்பசாமி இருக்கே. அப்புறம் எதுக்குக் கோயிலுக்கு வேற தனியா போய்க்கிட்டு” என்று சிரிக்கிறார் மீனா.
மகிழ்ச்சியால் நிறைகிறது இல்லம்!