Published:Updated:

நள்ளிரவின் நண்பர்கள்!

நள்ளிரவின் நண்பர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நள்ளிரவின் நண்பர்கள்!

தமிழ்ப்பிரபாபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார், ஆர்.வருண் பிரசாத்

நள்ளிரவின் நண்பர்கள்!

தமிழ்ப்பிரபாபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார், ஆர்.வருண் பிரசாத்

Published:Updated:
நள்ளிரவின் நண்பர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நள்ளிரவின் நண்பர்கள்!
நள்ளிரவின் நண்பர்கள்!

திக டிராஃபிக், அதிக வெயில், அதிக மக்கள்நெருக்கம் என எல்லாமே டபுள் டிகிரியில் எகிறும் சென்னையின் பரபரப்பு என்பது வெறும் பகல் பொழுதில் மட்டும் அல்ல. அதன் இரவு இன்னும் அனல் மூட்டுகிறது. சென்னையின் இரவு வாழ்க்கை ஒருபக்கம் குதூகலமும் கொண்டாட்டமுமாக இருக்க, மறுபக்கம் அதற்கு நேர் எதிர் திசையில் சுழல்கிறது.

நள்ளிரவின் நண்பர்கள்!

இரவு நேரத்தில் சென்னையின் முக்கியச் சாலைகள் அனைத்திலுமே சாலையில் படுத்திருப்பவர்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், சாலையில் படுத்திருப்பவர்கள் எல்லோரையுமே வீடில்லாதவர்கள் எனப் பரிதாபப்படக் கூடாது என்பதை ராயபுரத்தில் ஆள் அரவமற்ற பெட்ரோல் பங்க்கில் படுத்திருந்தவரை எழுப்பியபோது தெரிந்துகொண்டேன்.   “ந்தப்பா தம்பே... ரோட்ல படுத்து இருந்தாலே வீடு இல்லாதவங்கனு முடிவு பண்ணிட்றதா... அதோ எதிர்க்க தெரியுது பாரு மஞ்சா கலர்ல அதான் என் வீடு” என்றவர் வாயிலிருந்த எச்சிலை `புளிச்’ என்று துப்பினார். ``வீட்ல நாம வாயத் தொறந்தாலே சண்ட ஆவுது. அவங்க ஒண்ணு பேச நாம ஒண்ணு பேச....எதுக்குப் பிரச்னை...அஞ்சு ருபா ஓடோமாஸ் வாங்கித் தேச்சிக்கினு படுத்தோமா, கும்முன்னு தூங்கலாம். வீட்ல இருக்கிறதுங்க தொல்லைக்குக் கொசுக்கடி எவ்ளோ தேவலாம்பா. அதான் இங்க வந்து ஹாயா படுத்துன்னுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.

துறைமுகத்திற்குள் செல்வதற்கு  கன்டெய்னர் லாரிகள் வரிசையாக,  நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் அடிமேல் அடி எடுத்து வைப்பதுபோல நகர்ந்துகொண்டிருந்தன. வழியெங்கும் இருக்கும் டிராஃபிக் போலீஸிடம் பணம் கொடுத்தால், இம்மாதிரி வரிசையில் நிற்காமல் சீக்கிரம் முன்னேறிவிடும் சாத்தியங்கள் அதிகம். ஆனால், பணம் இல்லாதவர்கள் எண்ணூரிலிருந்து துறைமுகத்திற்கு வருவதற்கே ஒருநாள் ஆகும். இரவு முழுக்க இம்மி இம்மியாக நகர்ந்து, தூங்கவும் முடியாமல் விழித்துக் கொண்டிருக்கவும் முடியாமல் கொடுமையான இரட்டை மனநிலை வாழ்க்கையை வாழும் உதயகுமார், தங்குவதற்கு வீடு எடுத்தால் வாடகைச் செலவாகும் என்று ஆறு ஆண்டுகளாக லாரியே வீடாக அமைத்து வாழ்கிறவர். இரவு நேரச் சென்னையையே அதிகம் விரும்புகிறார். “ராத்திரி நேரம்தாங்க என்னை மாதிரி கன்டெய்னர் டிரைவர்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு. பகல்ல எங்க வண்டிய ஒவ்வொருத்தரும் பெரிய பூதத்தைப் பார்க்கிற மாதிரி பார்ப்பாங்க. ராத்திரின்னா எங்களுக்குப் பிரச்னை இல்ல. நம்ம சொந்த ஊர்ல சைக்கிள்ல சுத்துற மாதிரி அவ்ளோ சொகமா இருக்கும்” என்கிறார்.

நள்ளிரவின் நண்பர்கள்!
நள்ளிரவின் நண்பர்கள்!

மணி இரவு ஒன்றரை. கடற்கரை ரயில் நிலையத்தின் எதிர்புறச் சாலையின் பின்புறமுள்ள தெரு. அத்தோ என்கிற உணவுக்குச் சென்னையில் பிரபலமான ஏரியா அது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கோணியினால் கட்டப்பட்ட தீப்பெட்டியளவு வீடுகள். வீடில்லாதவர்கள் தெருவிலேயே படுத்துறங்கும் சூழல். நாங்கள் ஒரு தெருவுக்குள் நுழைந்தபோது  குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தீ எரிந்து புகை பஞ்சுக்காற்றாக மேலே கிளம்பிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தால், 65 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியைச் சுற்றி மூன்று  இளம்பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்கார்ந்துகொண்டிருந்தனர்.

இளம்பெண்களும், சிறுமிகளும் அதிகம் இருக்கும் அந்தக் குழுவில் அவர்கள் சாலையிலேயே படுப்பதால், பாலியல் ரீதியான சீண்டல்கள் அதிகம் இருக்குமே; அதை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகக் கேட்டபோது முத்து  என்ற அந்தப் பாட்டி, “தோ அங்கே பாருப்பா” என்று கைக்காட்டினார். அவர் காட்டிய திசையில் நாய் ஒன்று மடி குலுங்க ஓடிக்கொண்டிருந்தது. ``ராத்திரில எங்க பொண்ணுங்க தொந்துரவு இல்லாமத் தூங்குதுன்னா அதுதான் எங்க ராக்கிதான் காரணம். நீ இந்த சந்துக்குள்ள வந்த ஒடனே எப்படிக் கொலைச்சுது பார்த்தல்ல... புது மூஞ்சிங்க ஒருத்தர உடாது. அது இல்லன்னா ரொம்பக் கஷ்டம். வீடு வாசல் இல்லாம ரோட்ல படுக்கிறவங்கன்னா அவ்ளோ எளக்காரம் இந்த ஆம்பளைங்களுக்கு. எங்க பொண்ணுங்க  ஒரு  நாளைக்கு எவ்ளோவோ கஷ்டப்பட்டு  உழைச்சுட்டு வந்து தூங்குதுங்கோ. நல்லா போதையில வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி பக்கத்துல வந்து படுத்துனு சீண்டுவானுங்கோ, எழுப்பிக் கூச்சல் போட்டா ஒண்ணுமே தெரியாத மாதிரி அப்டியே மட்டையாயிட்ட மாதிரி நடிப்பானுங்கோ. என்னாத்த சொல்றது எங்களுக்குப் பாதுகாப்பு நாய்தான்.

நள்ளிரவின் நண்பர்கள்!

வீடு தரோம்னு பத்து வருஷமா வந்து வந்து கைல பலகை குடுத்து போட்டோ புடிச்சின்னு போயின்னுதான்கிறாங்கோ. போன வருஷம் ஆபீஸர்ங்க வந்து எல்லோரும் ஆதார் கார்டு எடுங்கோ, வீடு கெடைக்கும்னு சொன்னதால இந்த நல்லமுத்து தெரு பேரைப் போட்டு  ஆதார் கார்டு எடுத்தோம். இதுவரைக்கும் ஒண்ணும் வேலைக்கு ஆகலை.

ஆனா ஒண்ணுப்பா, எலெக்‌ஷன் டைம்ல வந்து பேசுவானுங்க பாரு... உங்களுக்கு தொரைப்பாக்கத்துல வீடு கட்டித்தரேன்; செம்மஞ்சேரில வீடு கட்டித்தரேன்; உங்கள தங்கத் தட்டுலேயே தாங்குறேன் அது இதுன்னு இவனுங்க பேசுறதுல வயித்துலக்கிற புள்ளகூட நழுவி வெளிய வந்துடும். அப்டிப் பேசுவானுங்கோ... தே பார் ஐம்பது வருஷமா ரோட்டுலதான் இருக்கிறேன் நானு. அத்தோ கடைல ப்ளேட் கழுவிக்கினு, முட்டை உறிச்சிகினு இந்த வயசுப் பசங்களுக்கு தொணையா இருந்துகினு அப்டியே எம் பொழப்பு ஓடுது” என்று முந்தானையால் மூக்கை உறிஞ்சினார் முத்துப் பாட்டி.

வால்டாக்ஸ் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு வடஇந்திய இளைஞனை மொய்த்தபடி விசாரணை செய்துகொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்தால், அவன் கையில் வைத்திருந்த சிறு சிறு மணல்மூட்டைப்போன்ற பொட்டலங்களை விநியோகம் செய்து அதே வேகத்தில் மறுகையில் பணம் வசூல் செய்துகொண்டிருந்தார். அந்தச் சிறிய மணல்மூட்டையைப் பிரித்துக் கையில் கொட்டி வாயின் ஓரம் தள்ளி அதக்கிய ஒரு ஆட்டோ டிரைவரிடம் “என்ன அது?” என்றால் “இது மாவா..  இப்போலாம் மாவா கெடைக்கிறது நம்ம ஏரியா கவுன்சிலரைப் பாக்குற மாதிரி ஆய்டுச்சி. ஆனா எப்டியோ.... இத வாங்கிப் போட்டாதான் ராத்திரில தூக்கம் வராது. அப்டியே பழகிடுச்சு’’ என்றார் சிரித்தபடி.

நள்ளிரவின் நண்பர்கள்!
நள்ளிரவின் நண்பர்கள்!
நள்ளிரவின் நண்பர்கள்!

``நாங்க ஒரு பெரிய டீம். ராத்திரி சவாரி மட்டும்தான். சாயங்காலம் அஞ்சு மணிக்கு வண்டி எடுத்தா காலைல ஆறு வரைக்கும் ஓட்டுவோம். ட்ரைன் அரைவல் டைம்லாம் குறிச்சு வெச்சுகினு அதுக்கேத்த மாதிரி எக்மோர், சென்ட்ரல் ஸ்டேஷன் ஏரியாக்கள்ல சுத்துவோம். அப்டியே நம்ம சரவுண்டிங்ல இருக்கிற தேட்டருங்க நைட் ஷோ முடியற டைம்ல ஒரு ரவுண்ட். திரும்பவும் சென்ட்ரல். நல்லா ப்ளான் பண்ணி ஓட்டுனா பைசாவுக்குக் கொறச்சல் இல்லை. ஆனா, இந்த கால் டாக்ஸிக்காரனுங்க வந்ததுல இருந்து சொல்ற மாதிரி சவாரிங்க இல்ல” என்று அவர் சொன்னதும் “டேய் சும்மா அளக்காத” என்றார் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருக்கும் நபர். “ஏம்பா உனுக்குன்னா... தண்ணில கொஞ்சம் பாலை ஊத்திக் காச்சி எடுத்துனு வந்துடுறே” என்று ஆட்டோக்காரர் சொன்னதும் “சரியாச் சொன்ன மாமே” என்றார் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருக்கும் இன்னொரு நபர். சென்ட்ரல் ரயில் வளாகங்களில் நிறைய பேர் இரவு நேர சைக்கிள் டீ வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனிலேயே டீ ஆர்டர் பண்ணும் ஆப்ஷன் இதுவரை வராததால், அவர்கள் வாழ்க்கைப்பாடு தொய்வடையாமல் போவதை உணர முடிந்தது.

அடுத்த பயணமாக, நள்ளிரவில் மெரினா கடற்கரையில் என்ன நடக்கிறது பார்ப்போம் என்கிற ஆவலுக்குக் கடிவாளம் போட்டார்கள் மாநகரக் காவலர்கள். பிரதான சாலையிலிருந்து கடற்கரை உள்ளே நுழையும் அனைத்து வழிகளும் தடுப்புகள் போடப்பட்டுக் காவலர்கள் நிற்கவைக்கப்பட்டிருந்தனர்.  70 கிலோமீட்டர் வேகத்தில் செல்பவர்களைக் கூட `நிக்காத போ... போ...’ என்று ஒலிப்பெருக்கியில் அலறிக்கொண்டிருந்தனர். இடைவிடாது சைரன் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இடமே 144 போடப்பட்டது போலிருந்தது. இனியும் அங்கே சுற்றிக்கொண்டிருந்தால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்படுவோம் என்பதால், வண்டியைத் திருப்பிக்கொண்டு கிளம்பினோம்.

நள்ளிரவின் நண்பர்கள்!
நள்ளிரவின் நண்பர்கள்!

இரவு நேரச் சென்னை பெரும்பாலும் பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, நெல்சன் மாணிக்கம் சாலையை இரவு பதினோரு மணிக்குப் பிறகு திருநங்கைகள் அலங்கரிக்கிறார்கள். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் சேலை மற்றும் விதவிதமான ஆடைகளில் அதீத மேக்கப்புடன், பயணிகள் ரயிலுக்காகக் காத்திருப்பதுபோல வாடிக்கை யாளர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். பேரத்திற்குத் தொடர்ந்து ஆட்கள் வருவதும் போவதுமாக அந்த இடமே பரபரப்புடன் இருக்கிறது. வண்டியை நிறுத்திவிட்டு ஒரு திருநங்கையிடம் சென்றேன்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா” என்றேன்.

“ஐ டோன்ட் ஸ்பீக் டெமில்” என்றார் என் முகத்தைப் பார்த்து.

“பத்திரிகைல இருந்து வர்றேன். உங்களைப் பற்றித் தெரிஞ்சிக்கலாமா?” என்றேன் ஆங்கிலத்தில்.

“திஸ் இஸ் பீக் டைம். டோன்ட் ஸ்பாயில் அவர் பிசினஸ் ப்ளீஸ்” என்றார். அவர்களை மேற்கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாமென்று வண்டியை நோக்கிச் செல்கையில் இரண்டுமுறை கைத்தட்டும் சத்தத்தைத் தொடர்ந்து, “ஹல்லோ” என்று குரல் கேட்கத் திரும்பிப் பார்த்தேன். அதே திருநங்கை. நடைபழகும் குழந்தையை இருகரம் விரித்து வாவாவா என்று அழைப்பது போல இன்முகத்துடன் என்னை அழைத்தார்.

“யூ ஆர் ஜர்னலிஸ்ட் ரைட்! ஷீ இஸ் வில்லிங் டு ஸ்பீக் வித் யூ” என்று அருகில் இருந்த இன்னொரு திருநங்கையைக் காட்டினார். இந்தத் திருநங்கைக்கும் தமிழ் அவ்வளவாகத் தெரியாது எனினும் என்னுடன் தமிழிலேயே பேசினார். “நீங்க ஜர்னலிஸ்ட்னு  சொன்னதாலதான் உங்கூட பேசுறேன். பிகாஸ் எனக்கு ஜர்னலிஸ்ட் ஆகணும்னுதான் சின்ன வயசுல இருந்து ஆசை.”

``அப்புறம் ஏன் ஆகலை?’’

“கூர்க் இருக்குல்ல... அது பக்கத்துல எங்க ஊரு. நிறைய சொத்து உள்ள குடும்பம்தான். எனக்கு இந்த சிம்டம்ஸ் இருக்குன்னு தெரிஞ்சதும் வீட்ல தினமும் சண்டை ஆகும். ஒரு வாட்டி எங்க அப்பா பாய்சன் வாங்கி வந்துட்டு, `குடி. குடிச்சுட்டு செத்துப்போ’னு சொல்லிச்சு. அதுக்கு அப்புறம் அவங்களை நம்பி அந்த வீட்ல இருக்க முடியலை. படிப்பைப் பாதியில விட்டுட்டு வீட்டைவிட்டு ஓடிவந்து எப்டியோ எப்டியோ ஆகி டெய்லி ராத்திரி இங்க நின்னுட்டு இருக்கேன்” என்றவரின் செல்போன் சிணுங்கியதும் எடுத்துப் பேசிவிட்டு “ஓகே டைம் ஆச்சு. என் ரெகுலர் கஸ்டமர் வெயிட் பண்றாரு. என்னை போட்டோ எடுத்து உங்க மேகசின்ல போடுங்க.. எங்க வீட்ல இருக்கிறவங்க பார்த்தா, நான் நல்லாதான் இருக்கேன்னு நினைக்கணும்.  எடுக்கிறீங்களா” என்று தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் உடலை நளினமாக நெளித்து நின்று சிரித்தார். ஆனால், அந்தப் புன்னகையில் சந்தோஷத்தை இனம்காண முடியவில்லை.

நள்ளிரவின் நண்பர்கள்!

நகைக்கடைகளும், ஐவுளிக்கடைகளும் சூழ்ந்த, எந்நேரமும் ஏ.சி-க்காற்று முகத்தில் வீசும் சென்னையின் பரபரப்புப் பகுதியான தி. நகர்தான் சென்னையின் மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக நள்ளிரவில் உருமாறி நிற்கிறது. ரங்கநாதன் தெருவுக்குள் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் குப்பை லாரி மறித்துநின்று உறுமிக்கொண்டிருந்தது. சிறிய இடைவெளியில் நுழைந்து உள்ளே சென்றால், நடக்கக்கூட முடியாத அளவுக்குக் குப்பைகள் விரவிக் கிடந்தன. மூடப்பட்ட பிரமாண்ட ஜவுளிக்கடை வாசல்களில் இரண்டு செக்யூரிட்டிகள் நின்று பேசிக்கொண்டிருக்க, அவர்கள் அருகில் இரண்டு செக்யூரிட்டிகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு இரண்டு பேர் விழித்திருக்க வேண்டும்; இரண்டு பேர் தூங்க வேண்டும், இப்படி சுழற்சி முறையில் இரவை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தி.நகர் காய்கறி மார்கெட்டுக்குள் நுழைந்தால், குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தன. தரையில் இருக்கும் காய்கறிக் கழிவுகளைத் தின்பதற்கு எண்ணற்ற மாடுகள் அங்குமிங்கும் மூர்க்கமாக அலைந்து கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு நடுவே இரண்டு பெண்கள் குப்பைகளை வாரி ஓரங்கட்டிக்கொண்டிருந்தார்கள்.

“இந்த இடம் பார்க்கவே பயங்கரமா இருக்கே.. எப்படிக்கா இங்கே வேலை செய்றீங்க?” என்றதும் “மனுஷனுங்க நடுவுலதான் வேலை செய்றது கஷ்டம்னா, மாடுகளுக்கு நடுவுல வேலை செய்றது அதுக்கு மேல இருக்குதுப்பா. பத்து நாளைக்கு முன்னாடிகூட என்கூட வேலை செய்றவங்களை ஒரு மாடு முட்டி அவங்க இன்னும் வேலைக்கு வரலை. முன்னாடி பின்னாடி பார்த்துக்கினே காலைல நாலுமணி வரைக்கும் வேலை செய்றதா போச்சு. இதுக்கு நடுவுல இந்தக் பொம்பள வெறி புடிச்சவனுங்க தொல்ல வேற. ராத்திரியில  ரோடு பெருக்கிற பொம்பளைங்கன்னா அவ்ளோ சீப்பா நெனைக்கிறானுங்கோ. காச காமிச்சிப் பச்சையா கூப்பிடுறானுங்கப்பா. நல்லா தொடப்பத்துலேயே வெச்சு அனுப்புவேன். புள்ளைங்களைப் படிக்க வைக்கிறதுக்காக இந்த வேலைக்கு வர வேண்டி இருக்குது” என்றார் லட்சுமி துடைப்பத்தின் தலையை உள்ளங்கைகளால் அழுத்தியபடியே.

இதற்கு முற்றிலும் வேறொரு உலகத்தைக் காட்டுகிறது சென்னையின் மிக நீண்ட சாலையான ராஜீவ் காந்தி சாலை. டைடல் பார்க் பின்புறமுள்ள ராமானுஜம் ஐ.டி பார்க் வளாகத்தை ஒட்டியுள்ள சாலையிலிருந்து பார்த்தபோது வேறொரு நாட்டிற்குள் நுழைந்துவிட்ட உணர்வு. அருகருகில் உள்ள உயரமான கட்டடங்கள். அதன் ஜன்னல்களிலிருந்து வெளிவரும் மின்விளக்கின் ஒளியினால் மகிழ்மதியின் நவீன அரண்மனைகளாகக் காட்சியளிக்கின்றன. அரண்மனையிலிருந்து வெளியே வந்த சிலர் சைக்கிள் டீக்கடைக்காரர்களைச் சூழ்ந்தபடி ஆண் பெண் பேதமின்றி டீயும் சிகரெட்டும் வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவின் நண்பர்கள்!

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் அநேகருக்கு இரவுநேரப் புகலிடமாக மாறிக் கொண்டு வருகிறதென்பது கூட்டத்தின் நடுவே தூக்கம் கலைந்து அமர்ந்திருந்தவரைத் தனியாக அழைத்துப் பேசியதிலிருந்து தெரிந்தது. “என் சொந்த ஊரு கிருஷ்ணகிரிங்க. அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில வேலை செய்றேன். இந்த ஊர்ல வாடகைக்கு வீடு இருந்தா கட்டுப்படியாகுங்களா. வேல முடிச்சுட்டு, சாப்ட்டுட்டு மாமூலா கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல வந்து படுத்துட்றது. காலைல இங்க இருக்கிற கழிவறையிலயே குளிச்சி, மத்த வேலைகள்லாம் முடிச்சுக்கிறது.

வருஷக்கணக்கா இங்க தங்கிட்டு இருக்கிறவங்கல்லாம் இருக்காங்க சார். எல்லாம் வெளி மாவட்டத்துல இருந்து வேலை செய்ற தினக் கூலிங்கதான். இது மட்டுமில்லாம சில பேரு அவங்க வீட்ல இருக்கிற வயசானவங்களை யெல்லாம் இங்க கொண்டுவந்து விட்டுடுறாங்க. அப்படி நெறைய பெருசுங்க இங்கே படுத்துக் கிடக்குதுங்க. கொஞ்சநாள்ல செத்துப் போனதும் பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வருவாங்க. இந்தா இந்த தாத்தாவப் பாருங்க’’ என்று சற்றுத் தள்ளிப் படுத்துக்  கிடந்த ஒரு முதியவரைக் காண்பித்தார். அருகில் சென்று பார்த்தேன். காவி நிறத் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார். காலில் அடிபட்டு அது பெரிய காயமாகிப்போய் சொதசொதவென்று இருந்தது. அந்த இடத்தில் ஈ மொய்க்காமல் இருக்க, தன் கையை அவர் அனிச்சையாக அசைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோதுதான் அவர் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவும் பரபரப்புச் சூழலில் விழியோரம் நீர் தேங்கியபடி தன் வாழ்நாள்களின் மிக நீண்ட இரவுகளை பலர் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்முடைய பயணப் பரபரப்பில் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நள்ளிரவுச் சென்னையின் பல இடங்களுக்குச் சென்று இன்னும் பல மனிதர்களைச் சந்தித்தேன். மகனை அரபுநாட்டுக்கு வழியனுப்பிவிட்டுக் கண் கலங்கியபடி மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வாசலில் நின்றிருக்கும் பெற்றோர்கள், ஓர் இரவில் குறைந்தது ஆயிரம் போஸ்டர்கள் ஒட்ட வேண்டுமென மைதாபசையின் பிசுபிசுப்புடன் நாய்த் தொல்லைகளைச் சமாளித்து போஸ்டர் ஒட்டும் மனிதர்கள், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு, பெசன்ட் நகர், மெரினா,
ஈ.சி.ஆர். சாலைகளில் பைக் ரேஸில் பறக்கும் இளைஞர்கள், சொந்த ஊரில் வியாபாரம் செய்ய தினமும் நெய்வேலியிலிருந்து கிளம்பி இரவு இரண்டுமணிக்குக் கோயம்பேடு மார்க்கெட்டில் உட்கார்ந்தபடியே தூங்கி வழியும் ஊர்ப் பெண்கள், 24 மணி நேர மெடிக்கல் ஷாப் எங்கே திறந்திருக்கும் என அட்ரஸ் கேட்டபடி பதற்றத்துடன் அலைந்து கொண்டிருந்த மனிதர், அதிகாலை மூன்று மணிக்குத் தாம்பரம் ரயில் நிலையத்தில் அமர்ந்து அன்னக்கூடையில் உள்ள கீரைகளுக்கு  நீர் தெளித்துக்கொண்டிருந்த பாட்டி எனச் சென்னையின் இரவு நாம் பார்க்க விரும்புகிற, நம்ப மறுக்கிற முகங்களாகத்தான் இருக்கிறது.

பரபரப்பு என்கிற ஒரே கண் மட்டுமே கொண்டு வாழும் சென்னையின் இரவுக்குப் பல கோடி கண்கள். அதில் பல லட்சம் கண்கள் தூக்கம் தொலைத்தவை!