Published:Updated:

காதல்... கனவு... குடும்பம்!

காதல்... கனவு... குடும்பம்!
பிரீமியம் ஸ்டோரி
காதல்... கனவு... குடும்பம்!

வெய்யில் - படங்கள்: ரா.ராம்குமார்

காதல்... கனவு... குடும்பம்!

வெய்யில் - படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
காதல்... கனவு... குடும்பம்!
பிரீமியம் ஸ்டோரி
காதல்... கனவு... குடும்பம்!

பார்வதி புரத்திலுள்ள சாரதா நகருக்குள் நுழைகிறேன். நாகர்கோயில் க்ளைமேட் அவ்வளவு அமைதி... குளிர்ச்சி... அணில்களின் கீச்சு கீச்சு. காம்பவுண்ட் சுவற்றில் கிரானைட் கல்லில் ஆங்கிலத்தில் ‘ஜெயமோகன்’ என்று செதுக்கப்பட்டிருக்கிறது. கொய்யா மரமும் செம்பருத்திப்பூக்களும் வரவேற்கின்றன. கேட்டைத் திறந்தால் கறுப்பு நிற ‘டோரா’ பாய்ந்து வருகிறது. மெல்ல அதை நிதானப்படுத்தியபடி புன்னகையோடு வரவேற்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். உள்ளே நுழைந்தால், தேநீர் கொதிக்கும் வாசம், சுவற்றில் தொங்கும் மரத்தாலான கதகளி கலைஞரின் சாந்த முகம், எங்கெங்கும் புத்தகங்கள்!

``மனைவி அருண்மொழி நங்கை. மத்திய அரசு ஊழியர். மகன் அஜிதன் பி.எஸ்சி என்விரான்மென்டல் சயின்ஸ் முடித்திருக்கிறார். இப்போது மணிரத்னத்தின் உதவி இயக்குநர். மகள் சைதன்யா டெல்லியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கிறார்” எனக் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகிறார் தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன்.

காதல்... கனவு... குடும்பம்!

``எப்போது முதன்முறையாக அருண்மொழி நங்கையைச் சந்தித்தீர்கள் நினைவிருக்கிறதா?”

``அருணா அப்போது மதுரை வேளாண் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். 1991-ம் ஆண்டு என்று நினைக்கிறேன், எனது ரப்பர் நாவலைப் படித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நானும் ஒரு வாசகருக்கு என்கிற வகையில் பதில் எழுதினேன். பின்பு, ஒருமுறை மலையாள எழுத்தாளரும் விமர்சகருமான பி.கே.பாலகிருஷ்ணனைச் சந்திப்பதற்காகத் திருவனந்தபுரம் வந்தபோது மதுரையில் இறங்கி அருணாவை அவரது கல்லூரிக்குச் சென்று சந்தித்தேன். ஒருநாள் பகல் முழுக்க பேசிக்கொண்டிருந்தோம். அவரை நிறைய பிடித்திருந்தது. மூன்று மாதத்திற்குள் நீளமான ஒரு காதல் கடிதத்தை நான் அனுப்பிவைத்தேன். பதில் வந்தது. அந்த ஆண்டிற்குள்ளேயே திருமணம் செய்துகொண்டோம். வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருக்கிறது.”

“ஒருபோதும் ப்ரமோஷனுக்காகத் தேர்வு எழுதமாட்டேன். ப்ரமோஷன் வந்தாலும் வாங்கமாட்டேன். ஓர் அறியப்படாத எழுத்தாளனாகத்தான் இருப்பேன் என்று கல்யாணத்துக்கு முன்பாகவே சொல்லிவிட்டாராமே?” கேள்வி அருணாவுக்கு.

“ஆமாம். அவரது அந்த உறுதியான எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு லோயர் மிடில்கிளாஸ் வாழ்க்கையே போதுமென்றுதான் நானும் நினைத்தேன். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்போது ‘விஷ்ணுபுரம்’ நாவலைப் பதிப்பிக்க முடியாமல், பதிப்பகம் கிடைக்காமல் மூன்று ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டோம். இன்றைக்கு இவருக்குக் கிடைத்திருக்கும் புகழ், வாசகப் பரப்பு, வளர்ச்சியில் இணையவெளிக்கு ஒரு முக்கியமான பங்கிருக்கிறது. இணையதளம் வழியாகத்தான் இவ்வளவு வாசகர்களை இவரது எழுத்துகள் சென்றுசேர முடிந்தது. உழைப்பிற்குக் கிடைத்த வளர்ச்சி இது. மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டோம்.”

``நீங்கள் கதைகள் எழுத வேண்டும் என்று நினைத்ததில்லையா அருணா?”


“இல்லை. இனி இந்த வயசுக்குப் பிறகு எவ்வளவு க்ரியேட்டிவாக எழுத முடியும் என்று தெரியவில்லை. மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.”

“சினிமாவில் எழுதுகிறீர்கள். பல்வேறு அலுவல்கள் சார்ந்தும்கூட சென்னையிலிருப்பதுதானே உங்களுக்கு வசதியாக இருக்கும்?”
என்று ஜெயமோகனிடம் கேட்டால்,

“என் மனைவிக்கு இந்த நாகர்கோவிலின் பச்சைவெளிகளை விட்டு எங்கும் போக மனமில்லை. இந்தப் பசுமையை, அமைதியை வேறு எங்கு பெற முடியும்? சென்னையில் நல்ல காற்றுக்கு எங்கே போவது? வசதிகளைவிட சூழல் முக்கியம் என நினைக்கிறோம். இந்த விஷயத்தில் வீட்டில் எல்லோருக்கும் ஒரே கருத்துதான்.”

“நாகர்கோவிலில் என்ன பொழுதுபோக்கு?”

“ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ பார்த்தோம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டிலேயே சினிமா ரசனை கம்மியான ஆள் நான்தான். அஜிதன், சைதன்யா, அருணா என்ற வரிசையில் கடைசியானது என் ரசனை. எனக்குள் இன்னும் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனுக்குப் பிடித்ததைத்தான் நான் பார்ப்பேன். ‘கௌபாய்’, ‘ஜேம்ஸ்பாண்ட்’ படங்களைப்போல விஷுவலாக ஆக்‌ஷனாக இருந்தால்தான் என்னால் உட்கார்ந்து பார்க்க முடியும்.” என்கிற ஜெயமோகனைப் பார்த்தபடியே பேசுகிறார் அருணா.

“ஆமாம். இல்லையென்றால் பாதியிலேயே எழுந்துபோய்விடுவார். ஆர்ட் படங்களைப் பொறுமையாக அமர்ந்து பார்க்கமாட்டார். முக்கியமான வெஸ்டர்ன் க்ளாஸிக் படங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். இவர் பாதியிலேயே எழுந்துபோக, அஜிதன் கோபப்படுவான்.”

“நீங்கள் இவர் எழுதும் சிறுகதைகள், நாவல்கள் குறித்து விமர்சனம் செய்வது உண்டா?”

“சொல்வேன். ஏற்றுக்கொள்வார். ஆனால், பெரும்பாலும் நல்ல ஃபார்மில் எழுதிவிடுவார். நமக்கு வேலையிருக்காது.”

ஜெயமோகன் குறுக்கிடுகிறார்.

``எனது ‘விஷ்ணுபுரம்’ நாவலை அருண்மொழிதான் எடிட் செய்தார். நிறைய வாசிக்கக்கூடியவர். மிகச் சிறந்த வாசகி. ஆரம்பத்தில் நூல்களுக்கு விமர்சனக் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தார். தமிழில் விமர்சனங்கள் சரியான வகையில் உள்வாங்கப்படுவதில்லை என்பது தெரிந்த பிறகு அதை நிறுத்திவிட்டார். அருணா மட்டுமல்ல அஜிதன், சைதன்யா இருவரும்கூட எனது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள். வாசிப்பதோடு விமர்சிக்கவும் செய்கிறார்கள்”

அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் அஜிதனிடம் அடுத்த கேள்வி.

காதல்... கனவு... குடும்பம்!

“அப்பாவிடம் பிடித்த ஒரு விஷயம், பிடிக்காத ஒரு விஷயம் சொல்லுங்கள்...”

“பிடித்த விஷயம், ஈடுபடும் அனைத்து விஷயங்களையும் முழுமையாகக் கற்று அறிந்துகொள்வது. பிடிக்காத விஷயம் நிறைய இருக்கு... (சிரிக்கிறார்). அதில் ஒன்று, எமோஷனாலாகப் பல விஷயங்களில் இன்வால்வ் ஆவது. சில நேரங்களில் அது நெகட்டிவாகப் போய்விடுகிறது. ஆனால், ஒரு எழுத்தாளர் அப்படித்தான் இருக்க முடியும் என்பதையும் புரிந்துகொள்கிறேன்.” மிக நிதானமாகப் பேசுகிறார் அஜிதன்.

“இலக்கியம் சார்ந்து அப்பாவோடு உரையாடுவது உண்டா?”

“எனக்கு அப்பாவோடு ஆழமாக உரையாடும் அளவுக்கு மொழிவளம் இன்னும் போதவில்லை. பேச அப்பாவுக்கும் நேரமில்லை. அப்பாவிடம் நேரில் உரையாடுவதைவிட எழுத்தில் பேசிக்கொள்வது எனக்கு எளிதாக இருக்கிறது.” குறுக்கிடுகிறார் அருணா,

“வீட்டுக்குள்ளேயே மாடியிலிருந்து வேறு பெயரில் கேள்வி கேட்டு மெயில் செய்வான். சைதன்யாவும்கூட அப்படிச் செய்வாள். இவர் யாரோ முக்கியமான ஆள் என்று சீரியஸாகப் பதில் எழுதிக்கொண்டிருப்பார்.” என்று பலமாகச் சிரிக்கிறார் அருணா.

“ஒரு அப்பாவாக, உங்களின் இரண்டு பிள்ளைகள் பற்றிச் சொல்லுங்கள்...”

“இருவரும் நிறைய வாசிக்கிறார்கள். இசை, சினிமா, நுண்கலை எனப் பல தளங்களிலும் ரசனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். தத்துவத்தில் ஆர்வமுடன் உரையாடுகிறார்கள். பயணப் பித்தர்கள். இவர்களின் வயதில் நான் பல யூஸ்லெஸ் விஷயங்களைப் படித்துத்தான் ஒரு நல்ல புத்தகத்தை அறிந்துகொண்டேன். ஆனால், இருவரும் இந்த வயதிலேயே மிகவும் செலக்டிவாக வாசிக்கிறார்கள். Next Generation Positive Youngsters!

“உங்கள் கணவரிடம் மிகவும் பிடித்த விஷயம் எது?” சட்டென பதில் வருகிறது அருணாவிடமிருந்து,

“இவருடைய கடுமையான உழைப்பு பிடிக்கும். உருவாக்கிக்கொள்கிற கனவுகள் எப்போதுமே பெரிதாக இருக்கும். ‘விஷ்ணுபுரம்’ நாவலின் தீம் என்று ஒரு சின்ன இமேஜைத்தான் சொன்னார். இதை வைத்துக்கொண்டு எப்படி ஒரு நாவல் எழுதப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவருக்குள் எவ்வளவு பெரிய ஸ்பேஸ் கனவாக இருந்திருக்கிறது பாருங்கள்! இப்படிப் பெரிய கனவுகள் காண்கின்ற குணமும், கனவை நனவாக்கும்வரை எந்தப் புறக்காரணிகளாலும் சோர்வுறாத தன்மையும் மிகப் பிடித்த விஷயங்கள்.”

“இவரப் பத்தி என்கிட்ட கேட்டீங்கல்ல. இவருக்கு என்கிட்ட என்ன பிடிக்கும்னு கேளுங்க...’ எனச் சிரித்துக்கொண்டே மிரட்டுகிறார் அருணா.

காதல்... கனவு... குடும்பம்!


“என்னை ஓர் எழுத்தாளனாக நன்றாகப் புரிந்துகொண்டவர் அருணா. திருமணமாகி அப்போதுதான் கருவுற்றிருந்தார். ‘வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. வி.ஆர்.எஸ் கொடுக்கப் போகிறேன்’ என்றேன், அடுத்த நொடியிலேயே  ‘உங்கள் விருப்பம்’ என்றார். அதே ஆண்டுதான் என்று நினைக்கிறேன், எனக்கு ஒரு முக்கியமான விருது வந்தது. அப்போதே 50,000 மதிப்புள்ள விருது அது. இந்த  ஃப்ளாட் விலையே அப்போது 65,000 தான். அந்த விருது ஒரு மதம் மற்றும் அரசியல் தொடர்பான விருது. அதை வாங்குவது ஒரு எழுத்தாளனுக்கான அறம் அல்ல என்று எனக்குத் தோன்றியது. விருது விஷயத்தை அருணாவிடம் சொன்னேன். அருணா கேட்டார் ‘முகத்தப் பாத்தா உங்களுக்கு இந்த விருது வாங்கப் பிடிக்கலை போலயே?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘அப்ப வேணாம்’ என்றார் உடனடியாக. பத்மஸ்ரீ விருது சமயத்திலும் இதுதான் நடந்தது. துளிகூட நெகட்டிவ் எண்ணம் கிடையாது. இப்படி ஒரு வாழ்க்கைத்துணை அமையவில்லை என்றால் இவ்வளவு எழுத முடியாது. ஷி இஸ் அன் ஐடியல் உமன்!”

முதல்முறைபோல காதலோடு ஜெயமோகனின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் அருணா.