Published:Updated:

வீடெங்கும் புன்னகை

வீடெங்கும் புன்னகை
பிரீமியம் ஸ்டோரி
வீடெங்கும் புன்னகை

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

வீடெங்கும் புன்னகை

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
வீடெங்கும் புன்னகை
பிரீமியம் ஸ்டோரி
வீடெங்கும் புன்னகை
வீடெங்கும் புன்னகை

“அவர் வீட்டை ஒரு மரம் மாதிரிதான் வெச்சிருக்கார். கிளை பரப்பின மரத்துல இந்தப் பறவை இங்குதான் உட்காரணும்னு எதுவும் இல்லையே. யார் வேண்டுமானாலும் எங்கே வேணும்னாலும் உட்கார்ந்து உரையாடலாம்” அந்த அவர் எஸ்.ராமகிருஷ்ணன். சொன்னவர் அவருடைய மனைவி சந்திர பிரபா. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வீட்டில் தனியாக வரவேற்பறை என்றெல்லாம் எதுவுமே இல்லை. யாரும் எங்கும் அமர்ந்து பேசலாம். எல்லா அறைகளும் நம்மை வரவேற்கும். எங்களையும் வரவேற்றது. குடும்பமாக உரையாட உட்கார்ந்தோம்.    

வீடெங்கும் புன்னகை

எஸ்.ராவின் மூத்த மகன் ஹரிபிரசாத் மீடியா சயின்ஸில் பட்டமேற்படிப்பு படிக்கிறார். இளைய மகன் ஆகாஷ்; பத்தாவது படிக்கிறார். எஸ்.ரா புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஷ்ட்ராவின் தீவிர ரசிகர். அதனாலேயே பெரிய மகனுக்கு அந்தப் பெயர். இரண்டாம் மகன் ஆகாஷுக்குப் பெயர் வைத்தது அண்ணன் ஹரிபிரசாத். இருவரும் இணைந்துகொள்ள... நூல் சூழ் அறையில் உரையாடல் தொடங்கியது.

``அவரைப் பார்க்க வீட்டுக்கு யார் எப்போ வேண்டுமானாலும் வரலாம். எந்த அறையிலும் உட்கார்ந்து பேசலாம்னு இருக்கிறது உங்களுக்குத் தொந்தரவாகவோ, உங்க நேரத்தை வேறு யாரும் எடுத்துக்கிறதாகவோ இல்லையா?” என்று சந்திரபிரபாவிடம் கேட்டதும் உடனடியாக “இல்லவே இல்லை” என்று மறுத்தார். 

“நண்பர்கள் எங்க வீட்டுக்கு வருவது மட்டுமில்லை, அவருடைய நண்பர்கள் வீட்டுக்குப் போக, பார்க்க எங்களுக்கும் தயக்கமே  இருந்தது இல்லை.  இருவழிப்பாதையா இந்த அன்புப் பரிமாற்றம் இருக்கு” என்று மகிழ்ச்சியோடு சொன்னார் சந்திர பிரபா. அதை ஆமோதிப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தார் எஸ்.ரா. 

வீடெங்கும் புன்னகை“ஒரு சாதாரண மனிதனின் குடும்பம் - எழுத்தாளரோட குடும்பம்னு ஏதாவது வேறுபாடு இருக்கா?” இது எஸ்.ராவுக்கான கேள்வி.

“இந்த உலகம் அப்படியான வேறுபாட்டோட பார்க்கிறதா தெரியல; ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. சாதாரணமா ஒரு குடும்பம் அனுமதிக்காததை எல்லாம் எழுத்தாளரோட குடும்பம் அனுமதிக்கும்னு இந்தச் சமூகம் நம்புது. அது உண்மையும்கூட. சாதாரண மனிதர்கள் எல்லாவற்றையும் ‘நாளைக்கு என்ன ஆகும்’னு எதிர்காலத்தைக் கொண்டு முடிவு செய்றாங்க. எழுத்தாளன் நிகழ்காலத்தைக்கொண்டு பார்க்கிறான். நிகழ்காலத்தைக்கொண்டு வாழலாம்னு அவன் முடிவு பண்றதால, அவனுக்கு நிகழ்காலமே போதுமானது. அதுக்குத் துணையா கடந்த காலத்தைப் பார்த்துப்பான். கண்ணாடியில பார்த்துக்கிற மாதிரி. எப்பவும் கண்ணாடி முன்னால நிற்கவும் கூடாது.’’

“இவர் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பீங்களா? அவர் எழுதுறதுல உண்மையான கேரக்டர்ஸ் யார் யார்னு நீங்க கண்டுக்கிட்டதுண்டா?”


“நிச்சயமா. இவர் எழுதும்போது எழுத்தாளனுக்கே உரிய சுயத் தணிக்கையோட எழுதுவார். அது பண்பாடோ, வேறு விஷயங்களோ உருவாக்கின தணிக்கையா இருக்காது. எதைப் பொதுவெளியில பேசணும், எதைத் தனி வெளியில பேசணும்கிற புரிதலோட அவர் எழுத்து இருக்கும். இப்பவும் அவரோட வாசகியா அவருடைய படைப்புகள் பற்றிக் கருத்துச் சொல்றதும், விவாதிக்கிறதும் தொடர்ந்து நடக்கும்” - சந்திர பிரபா சொல்லும் போது தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர் ஒருவரைப்பற்றிக் குறித்துப் பேசுகிற அதே தொனி.   

வீடெங்கும் புன்னகை

“திருமணத்துக்கு முன் - பின் உங்க எழுத்து?” என்று கேட்டதும் யோசிக்கிறார் எஸ்.ரா.

“க்ரியேட்டிவான ஆட்களுக்கே உரிய சில பிம்பங்கள் இருக்கு. அவை எவற்றிலும் சிக்காதவர் அவரு” என்று  சந்திரபிரபா சொல்ல... எஸ்ரா தொடர்கிறார்.

“1984-ல் எழுத ஆரம்பிச்சேன். 1995-ல் திருமணம். திருமணத்துக்குப் பிறகுதான் முன்னைவிடவும் தீவிரமா எழுதினேன். திருமணம் பண்ணிக்கிட்டா எழுதுவதற்கான சுதந்திரம் போயிடும்பாங்க. சுதந்திரமா, அதிகபட்சமா நான் எழுதினது என் மணவாழ்வுக்கு அப்புறம்தான். அதுவும் வீட்ல இருந்துதான் எழுதுவேன். வெளில எங்கே வேணும்னாலும் போய் சிந்திப்பேன். ஆனா, என் வீட்ல என் அறைக்குள்ளதான் என் எழுத்துகள் உருவாகும். என் மனைவிதான் என் எழுத்துக்கு ரொம்ப உதவியா இருக்காங்க. என் பிள்ளைகள் எழுத்தாளனா என்னையும், என் எழுத்தையும் மதிக்கிறவங்களா இருக்காங்க.”

“உங்க குடும்பத்துல இந்தப் புரிதல் வரக் காரணம் என்ன?”


“ரொம்ப சிம்பிள். நாம என்ன செய்றோம்ங்கிறதை அவங்களுக்குப் புரிய வெச்சுட்டா போதும். ‘இவர் செய்யக் கூடிய பணி முக்கியமானது’ன்னு அவங்க உணர்ந்துட்டா போதும்.”

எஸ்ரா - சந்திரபிரபா இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். “இவரைக் காதலிக்கும்போது இவர் எழுத்தாளர். அதைத் தாண்டிக் கல்யாணம் பண்ணிக்கிறப்போ வேற வேலைக்கு எதுவும் போகணும்னு எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்ததா?” - சந்திரபிரபாவிடம் கேட்டேன்.

“ஏன் போகணும்? அவருக்கு எப்பவுமே எதைச் செய்யணும்,எப்படிச் செய்யணும்ங் கிறதுல தெளிவான பார்வை இருந்தது. இவருக்கு இதுவரைக்கும் எழுத்துதான். எந்த வேலைக்கும் போனதே இல்லை. எழுதியே ஒருத்தன் வாழ முடியும்னு அவர் இப்போ நிரூபிச்சிருக்கார். பிரச்னை இல்லையான்னா, இருக்கும்தான். ஆனா, எதுலதான் பிரச்னை இல்லை?”

”உங்க அப்பாகிட்ட அட்வைஸ் கேட்க பலர் வருவாங்க. உங்களுக்கு அப்பா அட்வைஸ் சொன்னதுண்டா?” மகன்களிடம் கேட்டேன்.

“இல்லை” என்றார் ஹரி பிரசாத். “நாங்க ஏதாவது கேட்டா மட்டும் சொல்வார். அதுவும் அட்வைஸ் அல்ல. ஒப்பீனியன்னு சொல்லிச் சொல்வார். இன்னொண்ணு எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் அப்பாம்மாக்குத் தெரியும். அவரோட மெயில் ஐ.டி பாஸ்வேர்ட் எங்க மூணு பேருக்குமே தெரியும். எதையும் மறைக்க மாட்டார்” என்று ஹரி சொல்ல... “பாஸ்வேர்ட்னு ஒண்ணு வைக்கச் சொல்றதால வைக்கிறேன். இல்லைன்னா ஏன் வைக்கப் போறேன்?” என்று சொல்லிச் சிரிக்கிறார் அப்பா எஸ்ரா.

“அப்பா உங்களுக்கும் கதைகள் சொல்வாரா?”

இந்த முறை ஆகாஷ் பதில் சொன்னார். “நிறைய... எல்லோருக்கும் கதை சொல்வார்.’’ 

 ``அவர் சொல்ல ஆரம்பிச்சா எனக்கு விஷுவலா அது ஓட ஆரம்பிக்கும்” என்று சொன்ன ஹரி பிரசாத். சில குறும்படங்கள் கூட இயக்கியிருக்கிறார்.

இளைய மகன் ஆகாஷ் காமிக்ஸ், ஷெர்லக் ஹோம்ஸ் என்று கலந்துகட்டிப் படிக்கும் படிப்பாளி. ‘வாசிப்புல ஆகாஷ் அப்பாவைப் போல’ என்கிறார் அம்மா.

``சைனாவோட ‘மாங்கா’ காமிக்ஸ் ரொம்பப் படிப்பேன். சத்யஜித்ரேவோட ஃபெலூடா சீரிஸ் படிச்சுட்டேன்” என்கிறார் ஆகாஷ்.  “வாங்கினா சீரிஸா வாங்கி, முழுசா படிச்சுடு வான். ஒரு கதைல ஜியாகிரஃபிகலா ஒரு இடம் வருதுன்னா, இன்னொரு கதை படிக்கிறப்போ  ‘அந்தக் கதையில இதே இடத்துலதான் இன்னொரு சம்பவம் நடந்ததுன்னு கனெக்ட் பண்ணிக்குவான்” என்று மகனைப்பற்றிப் பெருமையாகச் சொன்னார் எஸ்ரா.   

வீடெங்கும் புன்னகை

இரு மகன்களும் எதையும் வீட்டில் மறைத்ததில்லை. “எது சொன்னாலும் பிரச்னை இல்லைங்கிறதால எல்லாத்தையும் பேசிக்குவோம்” என்கிறார்கள் இருவரும்.

``அப்பா எழுதுற அறைக்குக் கதவு இல்லை. எப்ப வேணா போலாம், பேசலாம். அவர் பதில் சொல்லிட்டே இருப்பார். நமக்கே இப்ப அவரைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு  வந்தா உண்டு. இப்படி இருக்கறப்போ எதுலேயும் எங்களுக்குத் தடை இல்லை.”

“எஸ்.ராவுக்கு ஒரு அட்வைஸ் கொடுக்கணும்னா என்ன கொடுப்பீங்க?”

``உடம்பைப் பத்திரமா பாத்துக்கோங்க. நேரத்துக்குச் சாப்பிடுங்க” - என்று வாஞ்சையோடு சொல்கிறார் சந்திரபிரபா. மகன்களில் ஹரிபிரசாத் இடைமறிக்கிறார்.

“அப்பா ஒரு படம் டைரக்ட் பண்ணணும். சினிமா பற்றி அப்பாவுக்கு முழுமையா தெரியும். ‘ரெண்டு வருஷமா பேசிட்டிருக்கீங்க. சீக்கிரம் பண்ணுங்கப்பா’ங்கறதுதான் எங்களோட அட்வைஸ்!” எஸ்ராவின் பதிலுக்காக அவரைப் பார்த்தேன்.

“நிச்சயம் பண்ணுவேன். எல்லாத்தையும் நானே பண்ணிப் பழகினவன். புத்தகம்னா முதல் வரில இருந்து ரேப்பர் வரைக்கும் நானே பண்ணுவேன். சினிமாவுக்கு அது செட் ஆகாது. எல்லாமும் எல்லாரும் செய்ற ஃபீல்ட். கூட்டுக் கலை. அதுக்கான சந்தர்ப்பம் வரணும். 20 வருஷமா சினிமாவில இருக்கேன். நூறு சதவிகிதம் அதுக்கான எல்லாமே தயாரா இருக்கு. என் எழுத்து மாதிரியே எளிமையா, நேர்மையா ஒரு படம் கட்டாயமா பண்ணுவேன். சீக்கிரமே!” - தீர்க்கமாகச் சொல்கிறார்.
 
‘வெரிகுட் வெரிகுட்’ என்று இரு மகன்களும் சிரித்துக்கொண்டே கைதட்ட, வீடெங்கும் சிதறுகின்றன புன்னகைகள்!