சினிமா
பேட்டி - கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

Bட்காய்ன் வைரலா... வைரஸா?

Bட்காய்ன் வைரலா... வைரஸா?
பிரீமியம் ஸ்டோரி
News
Bட்காய்ன் வைரலா... வைரஸா?

கார்க்கிபவா

சில மாதங்களுக்கு முன்பு உலகம்  கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தது. காரணம், ‘வானாக்ரை (Wannacry)’ என்ற ரான்சம்வேர். இது ஒருவிதமான வைரஸ் அட்டாக். பல நாடுகளின் முக்கியக் கணினிகளை ஹேக் செய்து விட்டார்கள். கணினியைத் திறந்தால் “பயப்படாத மேன்... நான் கேட்கிற காசைக் கொடுத்துட்டா, உன் சிஸ்டம் பழையபடி வந்துடும்” என்ற மெஸேஜ் மின்னியது.

தமிழ் சினிமாவில் கடத்தல் காரர்கள் கேட்கும் அதே உத்திதான். “சரி, பணம் தர கோத்தகிரி பெண்டுக்கு வரவா?” என அவர்களிடம் கேட்க முடியாது. ஏனெனில், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.   

Bட்காய்ன் வைரலா... வைரஸா?

பணத்தை ஆன்லைனில் ட்ரான்பர் பண்ணச் சொன்னார்கள். அதை டாலரிலோ... பவுண்டிலோ இல்லாமல் பிட்காய்னாகக் கேட்டார்கள்!

இந்த பிட்காய்ன்களை பில் கேட்ஸ் கடந்த சில ஆண்டுகளாகவே சிலாகித்து வருகிறார். “எதிர்காலம் இவைதாம். நிஜ கரன்ஸிகளைவிட இவை பலம் வாய்ந்தவை” என்கிறார் பில் கேட்ஸ். காரணம், பிட்காய்ன் என்பது டிஜிட்டல் பணம். கிரிப்டோகரன்ஸி எனச் சொல்வார்கள். இந்தியா கூடத்தான் டிஜிட்டல் கரன்ஸிக்கு மாறிவிட்டது என நினைக்க வேண்டாம். அது நிஜ கரன்ஸியின் டிஜிட்டல் வடிவம். ஆனால் `க்ரிப்டோகரன்ஸி’ எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை.

பிட்காய்ன் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் முன் பிளாக் செயின், க்ரிப்டோகிராஃபி போன்ற சில டெக்னிக்கல் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இணைய உலகில் எல்லாமே `சென்ட்ரலைஸ்டு’ செய்யப்பட்டவை. ஒரு வங்கியில் உங்களுக்குக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கிக்கு என ஒரு சென்ட்ரலைஸ்டு டேட்டா சென்டர் இருக்கும். அங்குதான் உங்கள் கணக்கில் நடக்கும் அத்தனை விஷயங்களும் சேமிக்கப்படும். இப்போது, உங்கள் கார்டை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பயன்படுத்தினால், அந்த மெஷின் நேராக வங்கியின் டேட்டா சென்டரைத் தொடர்புகொள்ளும். உங்கள் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்பதைப் பார்க்கும். இருந்தால், அந்தப் பணத்தைத் தனது அக்கவுன்ட்டுக்கு மாற்றிக்கொள்ளும்! இதற்கு அனுமதி வேண்டுமில்லையா? அதுதான் உங்கள் பாஸ்வேர்டு.

இப்படி ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு டேட்டா சென்டர் வைத்திருக்கும். அப்படி இல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து வங்கிகளும் ஒரே டேட்டா சென்டரில் இணைந்து, அனைத்துப் பரிவர்த்தனைகளும் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டால் வேலை எளிதாகும் தானே. உலகில் நடக்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் உலகில் இருக்கும் அனைவரின் தகவல்பேழையிலும் சேமிக்கப்பட்டிருக்கும். 

Bட்காய்ன் வைரலா... வைரஸா?ஓர் எளிமையான உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு ரயில் இன்ஜின் இருக்கிறது. அந்த இன்ஜினின் நிழல் இந்த பிளாக் செயினில் இருக்கும் அனைவரிடத்திலும் இருக்கிறது. இப்போது இன்ஜினுக்குப் பின்னால் ஒரு பெட்டியைச் சேர்த்தால், அது அனைத்து நிழலிலும் தொடரும். பெட்டிக்குப் பின் பெட்டி எனச் சேர்த்துக்கொண்டே செல்லலாம்.அது அந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரது பிரதியிலும் சேரும். இதுதான் பிளாக் செயின் முறை. இந்தப் பெட்டிக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? அதுதான் க்ரிப்டோகிராஃபி.

க்ரிப்டோகிராஃபியில் ஒவ்வொரு பயனருக்கும் பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ என இரண்டு விஷயங்கள் உண்டு. என்னுடைய பப்ளிக் கீயை உங்களுக்குத் தருகிறேன் என்றால், அதை வைத்து என்னுடைய பெட்டியைத் திறந்து நீங்கள் சேர்க்க நினைக்கும் தகவலைச் சேர்க்கலாம். என்னுடைய பிரைவேட் கீயை வைத்து அந்தப் பெட்டியைத் திறந்தால் மட்டுமே அந்தத் தகவல் தெரியும். ஆக, பப்ளிக் கீ என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பிரைவேட் கீ என்பது அவரவர்க்கு மட்டுமே ஆன பாஸ்வேர்டு.

இப்போது ரயில் உதாரணத்துக்கு வருவோம்.இன்ஜினுக்குப் பின் புதிதாக ஒரு பெட்டியைச் சேர்க்க அந்தப் பெட்டியின் உரிமையாளரின் பப்ளிக் கீயும் கொஞ்சம் கணினி வேலையும் தேவை.  எத்தனை  பெட்டிகள்  சேர்க்கப்படுகிறதோ, அதில் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் நிழல் ரயிலும் சேர்ந்துவிடும். புதியதொரு என்ட்ரி உருவாக்கப்படுகிறது என்றால், புதிய பிளாக் தயாராகிவிட்டது. இப்படிப் புதிய பிளாக்குகளை உருவாக்குபவர்களை மைனர்ஸ்(Miners) என்கிறார்கள். இந்த பிளாக் செயினில் நடக்கும் எந்தப் பரிவர்த்தனையையும் யாரும் மறைக்க முடியாது.

பிளாக் செயின் முறையில் வெளியான ஒரு கரன்ஸிதான் பிட்காய்ன். ஜப்பானைச் சேர்ந்த சட்டோஷி நாகமாட்டோ என்பவர், 2008-ல் இந்த பிட்காய்ன் ரயிலுக்கு இன்ஜினை மாட்டிவிட்டார். இந்த இன்ஜினுக்குப் பின்னால் 2.1 கோடி ரயில் பெட்டிகள்தான் சேர்க்க முடியும் என்ற வரையறையையும் வைத்துவிட்டார். இந்த `ஸ்ட்ரிக்ட் ரூல்’ தான் பிட்காய்னுக்கு இப்போது அபார மதிப்பைக் கொடுத்திருக்கிறது. இன்றையத் தேதியில் ஒரு பிட்காய்னின் மதிப்பு 5,000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில்  மூன்று லட்சத்தைத் தாண்டும்! 2016-ல் இதன் மதிப்பு 60,000 மட்டும்தான். அதாவது ஒரே ஆண்டில் ஐந்து மடங்கு முன்னேற்றம்!

உங்கள் ஆர்வம் புரிகிறது. அப்படியென்றால், நாமே மைனர் ஆகி புதிதாகப் பத்து பிளாக்குகளைச் சேர்த்தால் 30 லட்சம் கிடைத்துவிடும் எனத் தோன்றலாம். இந்தச் சூத்திரப்படி அந்த எண்ணம் சாத்தியமே இல்லை எனச் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு பிளாக்கைச் சேர்க்க ஆயிரக்கணக்கான கணினிகளும், நேரமும் தேவை. புதிய பிளாக் சேர்க்கப் பல கணிதப் புதிர்களை அவிழ்க்க வேண்டும். ஏழு கடல், ஏழு மலை என்ற அம்புலி மாமா கதைதான் புதிய பிட்காய்ன் உருவாக்குவதைச் சொல்லும் சரியான உதாரணம். புரொஃபஷனலாகச் செய்பவர்களால் மட்டுமே இது சாத்தியம். அதனால் புதிதாக பிட்காய்ன் உருவாக்கும் எண்ணம் இருந்தால், அதை அழித்துவிட்டு மேலே தொடருங்கள்.

பிட்காய்னை ஹேக்கர்கள் கேட்கிறார்கள் என்றால் இது சட்டபூர்வமானதா என்ற சந்தேகம் வரலாம். உலக அளவில் பிட்காய்ன்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது அமெரிக்காவில் தான். அடுத்த இடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது. `இந்தியாவில் பிட்காய்னா!’ என்ற ஆச்சர்யம் எழுந்ததும், சென்னையில் விசாரித்தால் பல்லாயிரம் பேர் சைலன்ட்டாக பிட்காய்னில் முதலீடு செய்துவைத்திருப்பது தெரிகிறது. 

 பிட்காய்ன் டிரேடிங்கில் அதீத ஆர்வத்துடன் இருக்கும் விஷ்ணுவிடம் பேசினேன். “பிட்காய்ன் கிட்டத்தட்ட ஒரு கமாடிட்டி மாதிரிதான். ஆன்லைன்ல நாம தங்கம் வாங்குறோம். அது விலையேறினா விற்கிறோம். அப்போ, நம்ம கைல தங்கம் இல்லைதானே? அப்படித்தான் பிட்காய்னும். இந்தியாவில் இதை டிரேட் செய்ய நிறைய ஸ்டார்ட்அப்ஸ் இருக்கு. நான் மட்டுமல்ல; சென்னையில நிறைய பேர் பிட்காய்ன் டிரேடிங் பண்றோம். மைனிங்கும் பண்றோம். இந்திய அரசு இதுவரைக்கும் பிட்காய்னை இல்லீகல்னு சொல்லலை. அதே சமயம் லீகல்னும் சொல்லலை. இப்போதைக்கு இந்தியாவில் பிட்காய்ன் டிரேட் செய்றது சட்டப்படி தப்பு கிடையாது. முன்னேறிய நாடுகள் இதை அனுமதிக்கிறாங்க. அப்படியே ஒரு நாடு விரும்பினாலும் பிட்காய்னைத் தடை பண்ண முடியாது. ஏன்னா, இது முழுக்க முழுக்க டிஜிட்டல். ஒரே ஒரு ஆப் மூலமா உலகத்துல இருக்கிற எந்த ஒரு நாட்டுலையும் விற்கவும் முடியும்; வாங்கவும் முடியும். அதனால், பிட்காய்னைத் தடை பண்றதெல்லாம் நடக்கவே நடக்காது’’ என்கிறார் விஷ்ணு.  

Bட்காய்ன் வைரலா... வைரஸா?

பிட்காய்னின் ஆகச் சிறந்த அம்சமே அதை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை டிராக் செய்ய முடியாது என்பதுதான். இந்தியாவில் இதற்கென இருக்கும் ஏஜென்ஸிகள் மூலம் வாங்கினால், நம் பான் கார்டைக் கேட்கிறார்கள். அதன் மூலம் இந்திய அரசு எவ்வளவு ரூபாய்க்கு யார் பிட்காய்ன்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். ஆனால், இந்த முறையில் வாங்குபவர்கள் சொற்பமானவர்கள்தான்.மேலும், ஒருவர் அப்படி வாங்கி இன்னொருவருக்கு விற்றுவிட்டால், அந்த பிட்காய்ன் அப்போது யாரிடம் இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த சிதம்பர ரகசியம்தான் பிட்காய்னில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகிறது.

டிஜிட்டல் கரன்ஸி என்றால் எப்படி இருக்கும்? புகைப்படமாகவா, பி.டி.எஃப். ஆகவா என்ற சந்தேகத்தை விஷ்ணுவிடம் கேட்டேன்.

“பிட்காய்ன் என்பது ஒரு ஆல்ஃபா நியூமரிக் நம்பர்தான். இதை வாலட்ல சேமிச்சு வைக்கலாம். எக்சேஞ்ச் மூலமா வாங்கினா, அவங்களோட வாலட்லேயே ஸ்டோர் பண்ணி வைக்க வசதி உண்டு. இல்லைன்னா, பாதுகாப்பான ஆன்லைன் வாலட்ல சேமிச்சு வைக்கலாம். பென் டிரைவ் மாதிரியான ஆஃப்லைன் வாலட்டும் இருக்கும். நிறைய பிட்காய்ன் கைவசம் வெச்சிருக்கிற நிறுவனங்கள் தங்களோட காயினை அந்த ஸ்டோரேஜ் டிவைஸ்ல ஸ்டோர் பண்ணி லாக்கர்ல வெச்சுப்பாங்க. ஹேக்லாம் பண்ணி பிட்காய்னை எடுக்க முடியாது. மீறி எடுத்தாலும் அதை ரெகவர் பண்ணவும் வழி இருக்கு” என்றார்.

“கொஞ்சம் டெக்னிக்கலா விஷயம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதைப் புரிஞ்சுக்க முடியும். ஏதாவது ஒரு சந்தேகம்னாலும் இந்த மொத்த புராசஸும் தெரிஞ்சாதான் அடுத்த கட்டத்துக்கே போக முடியும். அதை ஒரு குறையா சொல்லலாம். சில பேரு இது தீவிரவாதிங்க பயன்படுத்துற கரன்ஸின்னு சொல்றாங்க. நாம பயன்படுத்துற ரூபாய், டாலர்லாம் அவங்ககிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா? அப்புறம், இதை டிராக் பண்ண முடியாதுங்கிறதும் சிலருக்கு நெகட்டிவா தோணலாம். மத்தபடி பிட்காய்ன்ல எனக்கு எதுவும் குறையா தோணலை பாஸ்” என்கிறார் விஷ்ணு.

 சாமான்யர்களுக்குப் புரியாத ஒரு பணம் உலவிக்கொண்டிருக்கிறது. அதைத்தான் எதிர்காலம் என்கிறார் உலகின் மிக முக்கியமான டெக் தொழிலதிபர். அதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் இந்தச் சங்கிலியில் இருக்கும் நபர். பிட்காய்னைப் பற்றிய தகவல்களைத் திரட்டிய பிறகு ஒன்று மட்டும் புரிந்தது. கம்ப்யூட்டர் நம்மை ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Bட்காய்ன் வைரலா... வைரஸா?

பிட்காய்ன்-சில கேள்விகள்

1) ``பிட்காய்னுக்கு உருவம் உண்டா?’’

``கிடையாது. யாராவது அச்சடிக்கப்பட்ட தாள்கள் அல்லது வில்லைகளைக் காட்டி இதுதான் பிட்காய்ன் என்றால் நம்பாதீர்கள். பிட்காய்ன் என்பது முழுக்க முழுக்க டிஜிட்டலால் ஆனது.’’

2) ``பிட்காய்னைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய முடியுமா?’’

``அமெரிக்காவில் விமான டிக்கெட் முதல் பீட்ஸா வரை எதை வேண்டுமென்றாலும் பிட்காய்ன் கொடுத்து வாங்க முடியும். இந்தியாவிலும் சில இணையதளங்கள் இப்போது பிட்காய்னை ஏற்கின்றன.’’

3) ``ஒரு பிட்காய்னே மூன்று லட்சம் என்றால், அதற்குக் குறைவாகப் பணம் இருப்பவர்கள் வாங்க முடியாதா?’’

``வாங்கலாம். பைசாவைப் போல பிட்காய்னிலும் சில்லறை உண்டு. 10 பிட்டிஷ், 20 பிட்டிஷ் என வாங்கலாம்.’’

4)  ``பிட்காய்ன் தடை செய்யப்பட்ட நாடுகள் எவை?

``பங்களாதேஷ், பொலிவியா, ஈகுவேடார் மேலும் சில நாடுகள். சீனா சமீபத்தில் தடை விதிக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தத் தடை உள்நாட்டு எக்சேஞ்சில் பிட்காய்னை மாற்றுவதற்கு மட்டுமே. டிஜிட்டலாகத் தடை என இதுவரை சொல்லவில்லை.’’

5) ``இப்போது உலக அளவில் இருக்கும் பிட்காய்னின் மொத்த மதிப்பு எவ்வளவு?’’


``10 லட்சம் கோடி. பிட்காய்னின் மதிப்பு உயர்ந்துகொண்டே போவதால், இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயரும்.’’

6) ``நான் எப்படி பிட்காய்னை வாங்க முடியும்?’’

``ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாக வாங்கலாம். எக்சேஞ்சில் பிட்காய்னை வாங்கலாம். பிட்காய்ன் வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து வாங்கலாம். மைனிங் செய்யத் தெரிந்தால் செய்யலாம். அல்லது செய்யத் தெரிந்தவர்களிடம் கூடுதல் பணம் கொடுத்து வாங்கலாம்.’’

(7) ``எதிர்காலத்தில் பிட்காய்ன் மதிப்பில்லாமல் போகுமா?’’


``சாத்தியங்கள் உண்டு. எந்த ஒரு கரன்ஸிக்கும் இந்த நிலை வரலாம்.’’

Bட்காய்ன் வைரலா... வைரஸா?

காப்பாற்றிய பிட்காய்ன்!

சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸாஸ் மாகாணம் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கை முழுமையாக முடங்கிய நிலையில், மக்களை வெளியேற்றவும் முடியாமல் அரசு திணறியது. அப்போது உதவ முன்வந்த ஒரு குழு, ட்ரக் மூலம் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து வந்தது. திடீரென அவர்களது வாகனங்கள் பழுதாகின. உடனடியாக வேறு ட்ரக் கிடைக்கவில்லையென்றால், உணவுகளும் வீண். மக்களும் பாதிப்படைவார்கள். அப்போது பக்கத்து மாநிலத்தில் இருந்து ஒரு ட்ரக் நிறுவனம் வாகனங்களைத் தர முன்வந்தது. ஆனால், பணம் தர வேண்டும். வங்கிகள் முடங்கிப் போயிருந்தன. ஏ.டி.எம்-களும் நீருக்கடியில். இதற்காகக் காத்திருக்க நேரமில்லை. அப்போது, பிட்காய்ன்களைப் பயன்படுத்தி பணம் திரட்டப்பட்டது. சரியான சமயத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைந்தன. இத்தனை ஆண்டுக் கால வங்கி முறைகள் கைவிட்ட சமயத்திலும் காப்பாற்றியது பிட்காய்ன்கள்தான்.