Published:Updated:

அஷ்வின் 25

அஷ்வின் 25
பிரீமியம் ஸ்டோரி
அஷ்வின் 25

பரிசல் கிருஷ்ணா

அஷ்வின் 25

பரிசல் கிருஷ்ணா

Published:Updated:
அஷ்வின் 25
பிரீமியம் ஸ்டோரி
அஷ்வின் 25

கிரிக்கெட் தமிழன். கேரம் பால் மூலம் பேட்ஸ்மேன்களை மிரள வைத்தவன். முதல் டெஸ்ட் தொடரிலேயே 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அசாத்தியன். ரவிச்சந்திரன் அஷ்வினின் பளீர் 25 இங்கே!

அஷ்வின் 25

1. அப்பா ரவிச்சந்திரன், ரயில்வே ஊழியர். அம்மா சித்ரா, தனியார் நிறுவன ஊழியர். தாத்தா நாராயணசாமி. குடும்பம்தான் எல்லாமே. எந்த விஷயத்தையும் முதலில் பகிர்ந்துகொள்வது குடும்பத்தினரிடம்தான். 

2.
தன்னுடன் பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்த ப்ரீத்தியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அஷ்வின். அகிரா, ஆத்யா என இரண்டு மகள்கள்.

3. ``அப்பா, அம்மா, தாத்தா. இவங்க மூணு பேரும் இல்லைனா நான் இப்போ இந்த இடத்துல இருக்க முடியாது. அஞ்சு மணிக்கு பிராக்டீஸுக்குப் போகணுமா? நாலு மணிக்கெல்லாம் எழுந்து ரெடியாகி, என்னையும் ரெடி பண்ணிக் கூட்டிட்டுப்போவாரு அப்பா. அம்மா ஒட்டுமொத்தமான ஃபினான்ஷியல் தேவைகளையும் பார்த்துக்கிட்டாங்க. என்னை கோச்சிங் அனுப்பணும், அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோகணும்கிறதுக்காக அவங்களோட வொர்க் டைமிங்ஸை அதிகரிச்சிக்கிட்டு வேலை பண்ணாங்க. ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறது, கூட்டிட்டு வர்றதுனு என்னைப் பத்திரமா பார்த்துக்கிட்டாரு எங்க தாத்தா.’’ என்பார் அஷ்வின்.

4.
கிரிக்கெட் கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஃபாஸ்ட் பௌலர். பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்தான் இவரை சுழற்பந்துக்குத் திருப்பிவிட்டார். ஆனால், அந்த பேட்ஸ்மேன், அஷ்வினுக்குள் அப்படியே இருக்கிறார்.

5. ஐ.பி.எல். போட்டிக்காக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ‘சி.எஸ்.கே டீம்ல இருக்கீங்க’ என்று கையெழுத்து வாங்கிய நாளை, மறக்க முடியாத நாளாகக் குறிப்பிடுவார்.

6. பௌலர்களில் ஷேன் வார்னே, கிராம் ஸ்வான், ஹர்பஜன் சிங் என நிறைய பேர் இவருக்கு இன்ஸ்பிரேஷன். `‘அவர்களைப்போல நாம ஆகணும்னு நான் நினைக்கலை. நல்லா பௌலிங் போட்டேன். அந்த இடம் தானா கிடைச்சுது’’ என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஷ்வின் 25

7. நடிகர்களில் ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ மாதிரி, ப்ளேயர்களில் இவர் ‘கேப்டன்ஸ் ப்ளேயர்’. ‘தலைவனைப் பின்பற்று’ என்பதை இவர் பின்பற்றுவதால், எந்த கேப்டன் என்றாலும் இவர், அவர்களின் குட் புக்ஸில் மிளிர்கிறார்.  

8. தனது 18-வது டெஸ்ட்டில் 100 விக்கெட், 37-வது டெஸ்ட்டில் 200 விக்கெட் என்று வேகவேகமாக விக்கெட்டுகளைச் சாய்த்தவர். இந்திய பெளலர்களில், குறைந்த போட்டிகளில் இந்தச் சாதனைகளைச் செய்ததில் அஷ்வின்தான் நம்பர் 1.

9. 2011 அஷ்வினுக்கு எப்போதுமே மறக்கமுடியாத ஆண்டு. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியது, சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல தொடர்ந்து விக்கெட்டுகளை சாய்த்தது, கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் திருமணம் என அஷ்வினுக்கு  அதிர்ஷ்ட ஆண்டு.

10. 31 வயதான அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை எடுப்பார் என்று கணித்திருக்கிறார்  சுழற்பந்து மன்னன் முத்தையா முரளிதரன். இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

11. சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியில் பொறியியல் படித்தவர்.  ``சின்ன வயசுல இருந்தே நான் என்ன பண்ணாலும் அதுல எக்ஸல் பண்ணணும்னு நினைப்பேன். படிப்பிலும் நான் கில்லிதான். கல்லு பொறுக்கிப் போட்டா கூட நல்லாப் பொறுக்கிப் போடணும்னு நினைக்கிறவன் நான். இந்த புராசஸ்ல சக்ஸஸ் ஒரு பைப்ராடக்ட் அவ்ளோதான். சரியான வழியில், சரியான திட்டமிடலோட போனோம்னா, வெற்றி நிச்சயம் வரும். அதுதான் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு’’ என்பதுதான் அஷ்வின் சொல்லும் வெற்றிக் குறிப்பு.

12. இசை ரசிகர். இளையராஜா, ரஹ்மான் என்று பெரிய கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். இந்த இசை, இந்த கம்போஸர்  என்றில்லாமல் கலந்துகட்டி ரசித்துத் தள்ளும் ரசிகர்.

13. சென்னையில் ஹாயாக இருக்கும்போதெல்லாம் ஜாலியாக நண்பர்களுடன் சினிமாவுக்குக் கிளம்பிவிடுவார்.  இயக்குநர்களில் மிஷ்கின், நடிகர்களில் ரஜினி, அஷ்வினின் ஃபேவரிட். வீட்டில் நிறைய டி.வி.டி. கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். 

அஷ்வின் 25

14. காமெடி சேனல்கள் இவருக்கு மிகமிகப் பிடிக்கும். கவுண்டமணி, வடிவேல், சந்தானம் என்று பலரது வசனங்களை ஒரு வார்த்தை மிஸ் செய்யாமல் ஒப்பிப்பது அஷ்வினின் ஸ்பெஷாலிட்டி.

15. தனது கோச் சொல்வதை உள்வாங்கிக் கடும் பயிற்சி மேற்கொள்வதில் அஷ்வின் அன்றும் இன்றும் பெஸ்ட். ‘நமது மூவ்மென்ட்ஸை அவர்கள் பார்த்து, கரெக்‌ஷன் சொல்வது நமக்காகத்தான் என்பதை நம்பி, மாற்றங்கள் கொண்டு வருவேன்’ என்பார். சந்திரசேகர் ராவ், விஜயகுமார், சுனில் சுப்ரமணியம் இவர்கள் மூவரையும் மறக்காமல் குறிப்பிடுவார்.

16. சென்னையில் நண்பர்களுடன் டென்னிஸ் பாலில் இவர் போட்ட ‘சொடுக்கு பாலு’க்கு, இண்டர்நேஷனல் கிரிக்கெட்டில் புதிய அடையாளம் கொடுத்தார். “டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடும்போது பந்தை நல்லா விரல்களுக்குள்ள அழுத்திப் பிடிச்சி சொடுக்குப் பண்ணி பால் போடுவாங்க. பால் நல்லா ஸ்பின் ஆகும். கிரிக்கெட் பால்ல அது கஷ்டம். கட்டை விரலையும்  நடுவிரலையும் பயன்படுத்தி கேரம்போர்ட்ல காயின் அடிக்கிற மாதிரி பந்தை ரிலீஸ் பண்ணணும்” என்கிறார். அதுதான் கேரம் பால்.

17.  ``ஸ்பின் பௌலர் ஆகிறது அவ்ளோ ஈஸி கிடையாது. நிறைய அடிபட்டுக் கத்துக்கணும். வலி தாங்கத் தயாரா இருந்தா, உலகம் உங்களைக் கொண்டாடத் தயாராகிவிடும்’’ என்பது சுழற்பந்து ஆசையில் இருக்கும் இளைஞர்களுக்கு அஷ்வினின் அட்வைஸ்.

 18. விராட் கோலி, அஷ்வினைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அஷ்வின் ஒரு மேட்ச் வின்னர்’ என்பார். “பேட்ஸ்மேனின் ப்ளஸ் மைனஸைக் கவனித்து, அதை கேப்டனுடன் விவாதித்து அதற்கேற்ப ஃபீல்டிங் வியூகங்களை மாற்றுவது மட்டுமில்லாமல், மேட்சுக்குத் தகுந்த மாதிரி என் பௌலிங்கையும் மாற்றிக்கொள்வேன். அதனால்தான் அப்படிச் சொல்கிறார்” என்கிறார் அஷ்வின்.

19.
ஐந்து விக்கெட், 10 விக்கெட் என்று சாதித்த மேட்ச்களின் பந்துகளைப் பத்திரமாக, கையெழுத்துப் போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

20. 
“அஷ்வினுக்கு சவால்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவரை எதாவது செய்ய வைக்க வேண்டும் என்றால் சேலஞ்ச் செய்தால் போதும்” என்பது மனைவி ப்ரீத்தி அஷ்வினைப் பற்றிச் சொல்வது.

21.  சென்னையில் ‘ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட்’ நடத்தி வருகிறார். ‘புது டெக்னிக்ஸ், ஃபிட்னஸ் இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு, இன்னும் சிறுவயதில் இருந்தே போய்ச் சேர வேண்டும்’ என நினைக்கிறார். ஆறு வயதில் இருந்தே பயிற்சியில் சேரலாமாம்.

22. செல்ல நாய்கள் பிரியர். ரிலாக்ஸுக்கு அவ்வப்போது  மனைவியுடன் ஷாப்பிங் செல்வார்.

23.  ஃபிட்னஸ்,  உணவு  எல்லாவற்றிலுமே கறார். கிரிக்கெட் ஆடத் தனக்குக்  கிடைத்திருக்கும் வாய்ப்பை `ஜஸ்ட் லைக் தட்’ எடுத்துக்கொள்ளக் கூடாது என்று எண்ணுபவர். அதனாலேயே உடலை மெயின்டெய்ன் செய்வதில் இருந்து, பயிற்சிகள் வரை எல்லாவற்றிலும் ஒரு டிசிப்ளினைக் கடைப்பிடிப்பவர்.

24. ரிட்டயர்டு ஆனபிறகு ஒரு நல்ல தொழிலதிபராக மிளிர வேண்டும் என்பது அஷ்வினின் ஆசை.

25.
சிறு வயதிலேயே கிரிக்கெட் ஆர்வம் தொற்றிக்கொண்டாலும், படிப்பிலும் கில்லி. இரண்டையும் குழப்பிக்கொண்டதே இல்லை அஷ்வின்.