பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நான் அகதி - போரும் அகதியும் - 2

நான் அகதி - போரும் அகதியும் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி - போரும் அகதியும் - 2

மருதன்

போர் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்று யார் சொன்னாலும் ஹிப்பா அவர்களைப் பொதுவாக நம்புவதில்லை. உங்களுக்கு எப்படித் தெரியும், நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா, எனில் எங்கே என்று கேள்விகள் எழுப்பி உறுதி செய்துகொண்ட பிறகே அவர்களுடனான உரையாடலைத் தொடர்வது அவர் வழக்கம். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார். ‘நான் பேசும் பலரும் நிறைய திரைப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். திரையில் கண்டதை வைத்து போரைப் புரிந்துகொண்டு விட்டதாக அவர்கள் சொல்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.’
 
ஹிப்பா இராக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி. ‘நான் சொல்கிறேன். போர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஒரு குண்டு அருகில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அப்போது அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஜோர்டான் சென்றிருந்தார். அங்கே உள்ள இராக்கியத் தூதரகத்தில் அவர் தங்கியிருப்பதாக அம்மா சொன்னார். நான், என் அம்மா, இரண்டு சகோதரர்கள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தோம். நாங்கள் எல்லோரும் ஓர் அறையில் நெருக்கியடித்துப் பதுங்கியிருந்தோம். குண்டு விழும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொருமுறை சத்தம் வரும்போதும் நாங்கள் எல்லோரும் காதைப் பொத்தியபடி  ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்துக் கொள்வோம். தலைக்கு மேலே விமானங்கள் பறந்துசெல்லும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பூமி அதிரத் தொடங்கியது. நாங்கள் கட்டிலுக்குக் கீழே தவழ்ந்துசென்றோம். உலகம் எங்களைச் சுற்றி வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தது. நிச்சயம் இறந்துவிடுவோம் என்று நாங்கள் எல்லோருமே நம்பினோம். இந்த உணர்வுதான் போர். இதைத் திரைப்படம் ஒருபோதும் அளிக்காது.’

நான் அகதி - போரும் அகதியும் - 2

ஹிப்பாவும் அவர் குடும்பத்தினரும் அன்று உயிர் தப்பிவிட்டனர். ஆனால், அதற்காக நிம்மதியடைய  முடியவில்லை. பிரச்னை தனக்கோ தன் வீட்டுக்கோ அல்ல, தன் நாட்டுக்கு என்பது பிறகுதான் ஹிப்பாவுக்குப் புரிந்தது. அவருக்குத் தெரிந்து இராக் ஒரே ஒரு அதிபரைத்தான் சந்தித்திருக்கிறது. சதாம் உசேன். தீர்க்கமான பார்வையும் கம்பீரமான தோற்றமும் கொண்டவராக  வலம் வந்துகொண்டிருந்தார் சதாம். ஆனால், இராக் தாக்கப்படும் இந்நேரம் சதாம் ஊரில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு பயந்து, தப்பியோடிவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். இரானையும் குவைத்தையும் கசக்கிப் பிழியத் தெரிந்த, ஷியா முஸ்லிம்களின் கொடுங்கனவாகத் திகழ்ந்த சதாம் உசேனால் அமெரிக்காவை எதிர்கொள்ளமுடியவில்லை.

நிச்சயம் சதாம் ஒரு வெள்ளைப்புறா அல்ல. நினைத்துப் பார்க்கமுடியாத கொடூரமான குற்றங்களை அவர் இழைத்தவர் என்பதையும், வாய்ப்பு கிடைத்தால் அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் மீண்டும் இழைக்கத் தயங்காதவர் என்பதையும் இராக்கியர்கள் அறிவார்கள். சதாமுக்குத் தெரிந்த ஒரே மொழி வன்முறை. அவர் வழிபட்ட ஒரே கடவுள் ஆயுதம். இதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், நல்லவரோ கெட்டவரோ சதாம் இந்நாட்டின் அதிபர் அல்லவா? அவரை விரட்டுவதற்கும் அவருடைய நாட்டின்மீது குண்டு போடுவதற்குமான உரிமையை அமெரிக்காவுக்கு யார் கொடுத்தார்கள்? அமெரிக்காவுக்கு முதலில் இராக்கில் என்ன வேலை?

நான் அகதி - போரும் அகதியும் - 2


காரணத்தைத் தயாராக வைத்திருந்தார் ஜார்ஜ் புஷ். செப்டம்பர் 11 தாக்குதலுக்குக் காரணம் சதாம் உசேன். அவர் பயங்கரப் பேரழிவு ஆயுதங்களை இராக்கில் பதுக்கி வைத்திருக்கிறார். உலகைக் காக்க சதாம் வீழ்த்தப்படவேண்டும், அவருடைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். திட்டம் தயார், குற்றச்சாட்டும் தயார். ஆனால், ஆதாரம் மட்டும் இல்லை. ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை புஷ்ஷின் அமெரிக்கா. தன்னுடைய எதிரிகளில் ஒருவரை அவர் பழிவாங்க விரும்பினார். செப்டம்பர் 11 கொடுத்திருக்கும் வாய்ப்பை அவர் இழந்துவிடத் தயாராயில்லை. புஷ்ஷின் தவறு சமகால அரசியல் வரலாற்றை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும் இந்த ஒரு தவறால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டனர், எத்தனை லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர் என்பதையும் பின்னால் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

ஹிப்பாவுக்கு புஷ்ஷின் அரசியல் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. அவருடைய சந்தேகங்கள் எளிமையானவை. சதாமுக்கும் அமெரிக்காவுக்கும் சண்டை என்றால் என் வீட்டுக்கு அருகில் ஏன் போர் தொடங்கப்பட வேண்டும்? நடைபெறுவது அமெரிக்காவுக்கும் சதாமுக்குமான போர் மட்டுமன்று, ஷியாவுக்கும் சன்னிக்குமான போரும்கூட என்று சிலர் சொன்னார்கள். அதுவும் ஹிப்பாவுக்குப் புரியவில்லை. பார்ப்பதற்கு அச்சு அசல் ஒன்று போலிருக்கும் இந்த இருவரும் ஏன் ஒருவரையொருவர் விரோதிகளாகப் பார்த்துக் கொள்கிறார்கள்?  தெரியாது. ஆனால் ஹிப்பாவுக்குத் தெரிந்த ரகசியம் ஒன்றுண்டு. அவர் அம்மா ஒரு சன்னி. அப்பா ஒரு ஷியா. ஒரே வீட்டில்தான் குழந்தைகளோடு இருவரும் அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், வீதிகளில் மட்டும் ஏன் இந்த இரு பிரிவினரும் மூலைக்கு மூலை அடித்துக்கொள்ள வேண்டும்? யார் ஷியா, யார் சன்னி என்பதை  எப்படி  இந்தக்  கலவரக்காரர்கள் கண்டுபிடிக்கிறார்கள்?

ஹிப்பாவுக்கு மட்டுமன்று, அமெரிக்கா வீசிய குண்டுக்கும் யார் ஷியா, யார் சன்னி என்று பாகுபடுத்தத் தெரியவில்லை. பாகுபாடின்றி அனைவரையும் அது சிதறிடித்துக் கொன்றது.  பயங்கரவாதிகளையும் சிவிலியன்களையும் மட்டுமல்ல, முதியோர்களையும் பெண்களையும் குழந்தைகளையும்கூடப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை அந்தக் குண்டுகளுக்கு. அலுவலகம், பள்ளிக்கூடம், குடியிருப்பு, மைதானம் என்று எங்கே வீசினாலும் விழவேண்டியது, வெடிக்க வேண்டியது, மனிதர்களைச் சிதறடிக்கவேண்டியது. ஒரு வெடிகுண்டுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அமெரிக்காவுக்கோ இவை எது குறித்தும் அக்கறையில்லை. சதாமுக்கும்தான்.  எஞ்சியிருந்தவர்கள் இராக்கியர்கள்தாம். சதாமைத் தேடுவதா, அமெரிக்க குண்டுகளிடமிருந்து தப்பிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டிய பொறுப்பு அவர்களிடமே திணிக்கப்பட்டது.

நான் அகதி - போரும் அகதியும் - 2

ஹிப்பா இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முயன்று திணறிக்கொண்டிருந்தார். அவருடைய தாய்நாடு பிளவுண்டு கிடந்தது. அதிகம் தென்படாத அமெரிக்கர்கள் இப்போது இராக் முழுக்க நிறைந்திருப்பதைக் கண்டார் ஹிப்பா. சதாமிடமிருந்து உங்களையெல்லாம் மீட்கவே வந்துள்ளோம் என்னும் அவர்களுடைய அறிவிப்பைக் கண்டு கோபத்தைக் காட்டிலும் சிரிப்பே வந்தது ஹிப்பாவுக்கு. என்னையும் என் அம்மாவையும் என் சகோதரர்களையும் கட்டிலுக்குக் கீழே உயிரைக் கையில் பிடித்தபடி பதுங்கியிருக்கச் செய்ததன்மூலம் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்போகிறீர்களா? இதுதான் பாதுகாப்பு என்றால் சதாம் இதைவிடவும் கூடுதலான பாதுகாப்பை அல்லவா அளித்துக் கொண்டிருந்தார்? அப்பா எப்போது வந்து சேர்வார்? எங்கள் குடும்பம் எப்போது ஒன்றிணையும்?

அப்பாவின் நினைப்பு ஹிப்பாவைத் தூங்கவிடாமல் செய்திருக்கவேண்டும். அப்பா பாதுகாப்பாக இருக்கிறார், பயப்படாதே என்று அம்மா தினந்தோறும் கணக்கற்றமுறை திரும்பத் திரும்பச் சொல்லிவந்தது அச்சத்தை அதிகரிக்கவே செய்தது.  அம்மாவும்கூட உச்சகட்ட பயத்தில் இருப்பதுபோலவே இருந்தது. அதை மறைக்க அவர் செய்யும் ஒவ்வொரு பிரயத்தனமும் பரிதாபகரமாகத் தோல்வியடைவதை ஹிப்பா கண்டார். பாவம், என்னைப் போல் என் அம்மாவால் அழக்கூட முடியாது.

நாம் அப்பாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதைப்போல் அவரும் நம்மைப் பற்றிதான் எந்நேரமும் நினைத்துக்கொண்டிருப்பார் என்பது ஹிப்பாவுக்குத் தெரியும். அந்த நினைப்பே கொஞ்சம் ஆறுதல் அளிப்பதுபோல் இருந்தது. அப்பா தற்சமயம் இருப்பதாகச் சொல்லப்படும் ஜோர்டான் எப்படிப்பட்டது என்பது ஹிப்பாவுக்குத் தெரியாது. அங்கும் குண்டுகள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றனவா? அங்கு அப்பாவும் என்னைப் போலவே கட்டிலுக்குக் கீழேதான் ஒளிந்துகொண்டிருக்கிறாரா? `பயப்படாதீர்கள், அமைதியைக் கொண்டுவருவதே எங்கள் முதன்மையான நோக்கு’ என்று இங்குபோல் அங்கும் அமெரிக்கா முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறதா?

அப்பா பாதுகாப்பாக இருக்கிறார் என்பதில் ஹிப்பாவுக்குச் சந்தேகங்கள் இல்லை. ஒரே ஒரு ஒற்றைவரிச் செய்தியை மட்டும் அவர் அப்பாவுக்கு அனுப்பிவைக்க விரும்பினார். ‘அப்பா, எங்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள், நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். எல்லாம் சரியானபிறகு நாம் அனைவரும் உறுதியாக மீண்டும் ஒன்றுசேர்வோம்.’

நான் அகதி - போரும் அகதியும் - 2


நம்பிக்கையின் உச்சிக்கு ஹிப்பாவும் கொந்தளிப்பின் உச்சிக்கு இராக்கும் சென்று சேர்ந்திருந்த சமயம் அது. சதாம் இல்லாததால்  சமூகத்தில் சமநிலை குலைந்து அராஜகவாதம் தழைக்கத் தொடங்கியிருந்தது. சதாம் இருந்த போதும் அராஜகவாதம் இருந்திருக்கிறது என்றாலும் அது அவரால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இப்போது இருப்பது அடக்கமுடியாத அல்லது அடக்குவதற்கு யாருமற்ற முழுமையான அராஜகவாதம். இது முற்றிலும் வேறான அச்சமூட்டக்கூடிய  வடிவம். சதாமை அகற்றினால் இப்படியொரு பூதம் கிளம்பிவரும் என்று அமெரிக்காவுக்கும் தெரியும்தான். ஆனால், அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்னையில் எப்படி அமெரிக்கா தலையிடும்?

சதாம் இருந்தவரை தலையைக் கவிழ்த்திருந்த ஷியாக்களுக்குப் புதிய வெற்றிடம் அளவுகடந்த உற்சாகத்தை அளித்தது. ஆம், நான் ஒரு ஷியா. இனி இது என் நிலம் என்று அவர்கள் துப்பாக்கியைத் தூக்கித்  தோளில் போட்டுக் கொண்டு புது மிடுக்குடன் நடமாடத் தொடங்கினர். ஆக்கிரமிக்க வந்த அமெரிக்கர்களை அல்ல, சன்னிக்களையே முதன்மை விரோதிகளாக அவர்கள் கண்டனர். ஒவ்வொரு சன்னியும் சதாம். ஒவ்வொரு சதாமும் அடக்குமுறையின் அடையாளம்.  அமெரிக்கா சதாமுக்கு எதிராகப் போர் தொடுத்திருந்த சமயத்தில் ஷியாக்கள் சன்னிக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டார்கள்.

ஹிப்பா இந்த இரு போர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். உன் குடும்பத்தில் சன்னிக் குருதி கலந்திருக்கிறது, நீ வெளியேறவேண்டும் என்று முகமூடி அணிந்த ஷியாக்கள் வீடு புகுந்து மிரட்டினார்கள். மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொல்லும்வெறியாக மாறியபோது ஹிப்பாவின் குடும்பம் பாக்தாத்திலிருந்து வெளியேற முடிவு செய்தது. அவர்களைப் போலவே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராக்கிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர். பிறந்து  வளர்ந்த  நாட்டை விட்டுப் பிரிந்து செல்வதில் அளவு கடந்த வருத்தம்தான் என்றாலும் ஒருவழியாக அப்பாவோடு இணைந்து விடப்போகிறோம் என்னும் நம்பிக்கையோடு இராக்கை விட்டு வெளியேறினார் ஹிப்பா.

நான் அகதி - போரும் அகதியும் - 2

இது நடந்தது ஜூலை 2003-ல். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடங்கி சில மாதங்கள் கழிந்திருந்தன.  ஹிப்பாவின் குடும்பம் பாதுகாப்பாக ஜோர்டான் வந்து சேர்ந்தது. அப்பா அவர்களுக்காக அங்கே காத்திருந்தார். அவரைக் கண்டதும் எல்லாத் துயரங்களும் மறைந்துவிட்டதைப் போலிருந்தது ஹிப்பாவுக்கு. இந்தப் புதிய நாட்டில் ஒரு புது வாழ்வு மலரப்போகிறது. இங்காவது போர் மூளாதிருக்கவேண்டும். குழு மோதல், பயங்கரவாதம், மதவாதம், அமெரிக்கா எதுவும் எட்டிப் பார்க்காமல் இருக்கவேண்டும். இந்த எளிய கனவை நிறைவேற்றி வைப்பதில் கடவுளுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது அல்லவா?

ஆனால், அப்பாவால் இராக்கை மறக்க முடியவில்லை. ஆயிரம் குறைகள் இருந்தாலும் அது நம் நாடு, நாம் அங்கேதான் போயாகவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். 2006-ம் ஆண்டு அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அவர் பாக்தாத் கிளம்பினார். அங்கிருந்து தன் குடும்பத்தைத் தொடர்புகொள்ளவும் செய்தார். `நீங்கள் இருந்ததைவிடவும் இப்போது நிலைமை பரவாயில்லை, விரைவில் எல்லாம் சுமுகமாகிவிடும். நீங்கள் எல்லோருமே பழையபடி பாக்தாத் திரும்பிவிடலாம்’ என்றார்.

நாள்கள் செல்லச் செல்ல ஜோர்டானில் வாழ்வது கடினமாகிக்கொண்டே இருந்தது ஹிப்பாவின் குடும்பத்துக்கு. சதாம் கவிழ்ந்தபோதே அப்பாவுக்கு வேலை போய்விட்டதை ஹிப்பா அறிவார். சேமிப்பு என்று எதுவும் இல்லை. இப்படியே போனால் பிறகு உணவுக்கே வழியில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பேசாமல் பாக்தாத்தில் இருக்கும் நம் வீட்டை விற்றுவிடலாம் என்றார் அப்பா. அங்கே ஒவ்வொரு சொந்தக்காரரின் வீடாக மாறி மாறி அவர் தங்கிக்கொண்டிருந்தார். சில வாரங்களில் தன் முதல் மகனை அவர் பாக்தாத்துக்கு வரவழைத்துக் கொண்டுவிட்டார். வீட்டை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் வாழ்வைப் புதுப்பித்துக்கொண்டுவிட முடியாதா என்ன?

மே 2016 வாக்கில் ஒரு தொலைபேசி வந்தது. ஹிப்பாவால் அந்தச் செய்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூட முடியவில்லை. அப்பாவை யாரோ சிலர் கடத்தி விட்டார்களாம். பிறகு எங்கள் சொந்தக்காரர்களை அழைத்துப் பணம் கேட்டார்களாம். அவர்கள் தரவில்லை போலும். பிறகு அண்ணாவைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பிணவறைக்கு வந்து உன் அப்பாவைப் பெற்றுக்கொள் என்று சொல்லித் துண்டித்திருக்கிறார்கள். விழுந்தடித்து ஓடியிருக்கிறார் அண்ணன். பிணவறையில் அப்பா இல்லை. ஆனால், அறைக்கு வெளியில் இருந்திருக்கிறார். கீழே தரையில் படுத்துக்கொண்டிருந்தாராம். தலையின் பின்பக்கத்திலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்ததை அண்ணா பார்த்திருக்கிறார். அப்பாவின் ரத்தம். நெற்றிப்பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.

அண்ணனால் திரும்பிவரவும் முடியவில்லை. நீ உள்ளே வந்ததற்கே அனுமதி வாங்கவில்லை, எப்படி வெளியில் அனுப்புவது என்று அதிகாரிகள் கடிந்துகொண்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். அவரை இப்போதைக்குப் பார்க்க முடியாது. அப்பாவை எப்போதுமே பார்க்க முடியாது.  குடும்பம் நிரந்தரமாகச் சிதைந்துவிட்டது. தாய்நாடு என்றொன்று இனி இல்லை. கையில் பணமில்லை என்பதால் ஜோர்டானில் தங்கியிருப்பது சாத்தியமில்லை. வீடு இல்லை. வருமானம் இல்லை. வாழ்க்கை இல்லை. எதிர்காலம் என்றொன்று இல்லை.

இனி அவர் ஓர் அகதி. தன் அப்பாவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தியபடி ஹிப்பா சொல்கிறார். ‘ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பதை உங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாது. அதேபோல், ஓர் அகதியாக இருப்பது என்றால் என்னவென்பதையும் உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.’

- சொந்தங்கள் வருவார்கள்

நான் அகதி - போரும் அகதியும் - 2

இராக் போர்:  நான்கு உண்மைகள்

மார்ச் 2003 அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்தது. கிட்டத்தட்ட 2 லட்சம் இராக்கிய சிவிலியன்கள் இராக் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

போர் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் இராக்கியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயரவேண்டியிருந்தது.

சதாம் உசேன் ஒரு மோசமான சர்வாதிகாரியாக இருந்தபோதும் அவருடைய வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் அவரால் தனது அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ பலத்தை வளர்த்துக்கொண்டிருக்க முடியாது.

இராக் போருக்கு அமெரிக்கா வைத்த பெயர், ஆபரேஷன் இராக் ஃப்ரீடம். ஆனால், சதாமின் கரங்களில் அனுபவித்ததற்குச் சற்றும் குறைவில்லாத துயரங்களை அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இராக்கியர்கள் அனுபவிக்கநேர்ந்தது.