வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (28/08/2018)

கடைசி தொடர்பு:11:46 (28/08/2018)

கடன் தொல்லையால் அதிகரிக்கிறது குடும்பத் தற்கொலைகள்... காரணம் சொல்கிறார் உளவியல் நிபுணர்!

``கடன் கொடுப்பவர்களில் சிலரை loan shark (மீட்டர் வட்டிக்காரன்) என்போம். இவர்கள் கடன் கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய நோக்கம் வட்டிதானே தவிர, கடன் வாங்குபவர்களின் பிரச்னை தீர வேண்டும் என்பதோ, நன்றாக இருக்க வேண்டும் என்பதோ அல்ல."

கடன் தொல்லையால் அதிகரிக்கிறது குடும்பத் தற்கொலைகள்... காரணம் சொல்கிறார் உளவியல் நிபுணர்!

`கடன் தொல்லை தாங்கமுடியாமல் ரயில் முன்பு பாய்ந்த தொழிலதிபர்!', `கடன் நெருக்கடியால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை!', `கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் மனைவி, பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட மென்பொறியாளர்!'

சரஸ் பாஸ்கர்இப்படிச் செய்திகள் இல்லாத நாளேடுகளை என்றாவது பார்த்திருக்கிறீர்களா, இல்லைதானே... கடன் வாங்காதவர்கள் என்று இங்கு யாருமில்லை. பிள்ளைகளின் மேற்படிப்புக்கு, கல்யாணத்துக்கு, தொழில் ஆரம்பிக்க, செய்துகொண்டிருக்கும் தொழிலை விரிவுப்படுத்த எனக் கடன் வாங்குவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இதில், எந்த எல்லையில் தற்கொலை வரை கடன் அழைத்துச்செல்கிறது. கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்பவர் என்ன மனநிலையில் அந்த முடிவுக்கு வருகிறார். ஆழமான வார்த்தைகளுடன் அலசுகிறார், உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.

``கல்விக்காக, தொழில் ஆரம்பிக்க எனப் பல அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடன் வாங்குபவர்கள், அதை எப்படித் திருப்பிச்செலுத்துவது என்பது குறித்த தெளிவுடன் இருப்பார்கள். பொதுவாக, இந்த மாதிரியானவர்கள் உயிரை விடும் அளவுக்குக் கடன் தொல்லைக்குள் சிக்கிக்கொள்வதில்லை. ஆனால், மீறி ஆடம்பரச் செலவு செய்பவர்கள்; குடிப்பழக்கம், போதைப் பழக்கம், மோசமான வழிகளில் பணத்தைச் செலவழிப்பவர்கள்,  எதிர்பாராவிதமாக தொழிலில் பெரும் நஷ்டம், குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் அவரைக் காப்பாற்ற சக்திக்கு மீறி கடன் வாங்குபவர்கள்... இவர்களைப் போன்றவர்கள்தாம் கடன் தொல்லையிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்கிறார்கள்.

தற்கொலை - கடன் தொல்லை

``கடன் கொடுப்பவர்களில் சிலரை loan shark (மீட்டர் வட்டிக்காரன்) என்போம். இவர்கள் கடன் கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய நோக்கம் வட்டிதானே தவிர, கடன் வாங்குபவர்களின் பிரச்னை தீர வேண்டும் என்பதோ, நன்றாக இருக்க வேண்டும் என்பதோ அல்ல. எந்த வழியிலாவது, யார் மூலமாவது பணம் கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள்தாம் இவர்களிடம் சிக்குகிறார்கள். கடனை சொன்ன தேதிக்குள் திருப்பிக்கொடுக்கும் வருமானம் தனக்கு இருக்கிறதா என்றெல்லாம் யோசிப்பதில்லை. இதனால், ஓரிடத்தில் வாங்கிய கடனை அடைக்க, இன்னோர் இடத்தில் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவார்கள். அறிந்தவர், தெரிந்தவர், வங்கிக் கடன், கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஊர் முழுக்க வாங்கிவிடுவார்கள். இதனால், கடன் கொடுத்தவர்களை நேரில் பார்க்க அச்சம், கூச்சம், கடன்காரனாகிவிட்டோமே என்கிற கவலை, தொழிலில் தோற்றுவிட்டோமே என்ற சுயவெறுப்பு, ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த தெரியாத இயலாமை எல்லாம் சேர்ந்து, வாழ்வின் விளிம்பில் தள்ளப்பட்டதாக நினைக்கிறார்கள். அங்கிருந்து வெளியேவர வழி இல்லையென நினைத்து, தற்கொலை என்ற விபரீத முடிவெடுக்கிறார்கள்.

தற்கொலை செய்துகொள்பவர்களில் இரண்டு வகை. ஒன்று, `வாங்கிய கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியலையே' என்ற மன உளைச்சலில் தன் உயிரை மாய்த்துக்கொள்பவர்கள். இரண்டாவது வகை, `நான் போனதுக்கு அப்புறம், கடன் கொடுத்தவங்க என் குடும்பத்தையும் நிம்மதியா வாழவிட மாட்டாங்க. அதனால், அவங்களையும் கூட்டிட்டுப் போயிடுவோம்' என்று முடிவெடுப்பவர்கள். பிறந்த சிசுவையும் கொல்லும் அளவுக்கு மனநிலையை அடைந்துவிடுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை, கடனைத் திருப்பித் தராமல் தப்பிக்கும் தீர்வு, தற்கொலை மட்டுமே என நினைக்கிறார்கள். என் அனுபவத்தில், கடந்த 10 வருடங்களுக்குள்தான் இந்த மனநிலை அதிகரித்து வருகிறது. வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க தன்னால் முடியுமா என்பதை யோசித்து கடன் வாங்க வேண்டும். அப்படியே பிரச்னை பெரியதாகிவிட்டாலும், நெருங்கிய நண்பர்கள், நம் நலம் விரும்பிகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். மனநல ஆலோசகரை அணுக வேண்டும். ஏதோ ஒரு வார்த்தைகூட அந்த விபரீத முடிவை மாற்றி வாழ்க்கையின் மீது நம்பிக்கையை உண்டாக்கும். `கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை' என்ற செய்தியும் தடுக்கப்படும்'' என்கிறார் சரஸ் பாஸ்கர். 


டிரெண்டிங் @ விகடன்