Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

ரு வாரமாகக் கடும் காய்ச்சல். வழக்கமான காய்ச்சல்தான். சென்னை நகரவாசிகளுக்குப் பழகிப்போன காய்ச்சல். இங்கு சாதி மத பேதமின்றி அரசாங்க உதவியுடன் தவறாமல் வருடா வருடம் விநியோகிக்கப்படுவது தொற்று நோய்தான். கோடீஸ்வரனாகவே இருந்தாலும், சாக்கடைக்கு ஒன்றரை கிலோமீட்டர்தாண்டி வாழ்ந்துவிடமுடியாத அளவுக்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊழல் மாநகர் சென்னை. இது அரை நூற்றாண்டுக் காலமாய்ப் பெருகிவரும் மாசு. இன்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினால் இதைச் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை வருவதற்கே 20ஆண்டுகளாகும். நிற்க.

சாக்கடையாற்றின் (பழைய அடையாறு) அருகே  செவாலியே சிவாஜி அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் நண்பர் ரஜினி அவர்கள் பேசியதற்கான என் விளக்கம். இது, ‘ரஜினிக்குக் கமல் சூளுரை’ பாணி விளக்கம் அல்ல. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவரும் அப்படி எடுத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் எங்களுக்குள் உள்ள  நட்பு,  மூன்றாமவர் புகுந்து கெடுத்துவிட முடியாத புரிதல். ‘வாங்க ரஜினி, வாங்க கமல்’ என அறிமுகமாகி,  காலப்போக்கில் ‘வா... போ...’ என்று நெருங்கி,  இன்று மீண்டும் ‘வாங்க... போங்க’வில் வந்து நிற்கிறோம். அப்படியென்றால் இருவருக்குமான அந்த ‘வா போ’ இணக்கம் இப்போது இல்லையா என்று கேட்டால், அப்படி அல்ல. இருவரும் ஒருவர்மீது மற்றவர் கொண்ட மரியாதையால்... பிற்காலத்தில் பெரிய மனிதர்களாக மாறக்கூடும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்துகொண்டு ஆயத்தமானது, இந்த வயதை எட்டியபின் திரும்பிப்பார்த்தால் எங்களுக்கே வியப்புதான்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

தற்போது, மணிமண்டப விழா மேடைக்கு வருகிறேன்.  ‘`இதை நீங்கள் அவரை அலைபேசியில் அழைத்தே பகிர்ந்திருக்கலாமே’’ எனப் பலருக்குத் தோன்றலாம்.  விளக்கம் பொழிப்புரையெல்லாம்  எங்களுக்குத் தேவையில்லை; இந்த விளக்கம் புரியாதவருக்கானது. அதனால் இங்கே பகிர்கிறேன். ‘`சிவாஜி சார் சினிமாவுல மட்டும் அல்ல. அரசியல்லயும் அவருடைய ஜூனியர்ஸுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கார். தனிக்கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நின்னு அவருடைய தொகுதியிலேயே அவர் தோத்துப்போயிட்டார். அரசியல்ல வெற்றியடையணும்னா சினிமா, பேர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தா போதாது. அதுக்கு மேல ஒண்ணு ஏதோ இருக்கணும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்குச் சத்தியமா தெரியாது. கமல்ஹாசன் அவர்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தாலும் எனக்குச் சொல்லமாட்டார்.  ‘நீங்க என் திரையுலக அண்ணன்.  நான் உங்க தம்பி. என்கிட்ட சொல்லணும்’னு கேட்டா, ‘நீ என் கூட வா. சொல்றேன்’ என்கிறார்.’’ இதுதான் அன்று  ரஜினி அவர்கள் மேடையில் சுருக்கமாகப் பேசியதன் சுருக்க வடிவம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2


எனக்கு இதில் சில கேள்விகள் எழுகின்றன. இதை மக்களிடம் பகிர்தல் கடமை என்பதால் பதிகிறேன். அரசியலில் வெற்றி என்றால் என்ன? தனிக்கட்சி தொடங்கி, அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, பெரும்பான்மையான இடங்களில் வென்று, முதல்வராகவோ, பிரதமராகவோ ஆவதா? அதையே வெற்றியாக வைத்துக்கொண்டாலும் அந்த வெற்றிக்கான அர்த்தம் என்ன? வெற்றிபெறவைத்த மக்களை, கையேந்த விடாமல் சுயமரியாதையுடன் வாழவைப்பதுதானே? ஆனால், இங்கு  அரைநூற்றாண்டு வெற்றிகளை வைத்து, கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் எத்தனை பேரை மேம்படுத்தியிருக்கிறோம்? சிலர் மேம்பாடு அடைந்திருக்கிறார்கள் என்பீர்கள். நான் பெரும்பான்மையான மேம்பாட்டைக் கேட்கிறேன். ஆனால், அப்படி யாரும் மேம்பாடு அடைய வில்லை என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். அப்படியெனில் அவர்களின் வெற்றி என்பதே அர்த்தமற்றுப்போகிறது என்றுதானே பொருள். இந்த வகையான வெற்றியை யார் பெற்றிருந்தாலும், அப்படி ஒரு வெற்றி தேவையே இல்லை என்பதே என் கருத்து.

ஆனால், உண்மையான வெற்றி எது என்று சொல்லவா? அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடாத கிழவனார் காந்தி, பெரியவர் பெரியார் இவர்களின் வெற்றிதான் காலா காலத்துக்கும் நிலைத்திருக்கும் வெற்றி. நீங்கள் சொல்லும் வெற்றியாளர்கள் எத்தனையோ பேரை மக்கள் மறந்தும் காலப்போக்கில் மறுத்துமிருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் போட்டியிட்ட திரு. அம்பேத்கர் கண்டது தோல்வியல்ல, ஒரு மாபெரும் சரித்திரத்தின் ஆரம்பம். ஆனால், இவர்கள் மூவரையும் மறக்கவோ மறுக்கவோ முடியுமா? இவர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். மதவாத சக்திகளுடன் இங்கு மல்லுக்கட்டுவது யார்? நீங்கள் சொல்லும் வெற்றியாளர்களா? பெரியார் தந்த பகுத்தறிவுதானே  அவர்களிடமிருந்து நம்மைக் காக்கிறது.  இந்த மூவர் வரிசையில் யோசிக்காமல் சேர்க்கவேண்டிய இன்னுமொரு பெயர், ஆர்.நல்லக்கண்ணு. சுருக்கமாக தோழர் ஆர்.என்.கே. இவர் நின்ற தேர்தல்களில் ஒன்றில்கூட வென்றதே இல்லை. ஆனால், இந்த வயதிலும் பொதுநல வழக்கு, மக்கள் மேம்பாடு என்று பயணித்துக்கொண்டே இருக்கிறாரே, எதற்கு... நீங்கள் சொன்ன வெற்றியை மக்கள் அவருக்குத் தருவார்கள் என்றா? அவர் தன்னையும் வென்று மக்கள் மனங்களையும் வென்று வெகுநாள்களாகிவிட்டன. மக்களுடன்  ஆத்மார்த்தமாக உரையாடும் அவரின் அந்த அன்புதானே அரசியலின் உண்மையான வெற்றி. என்னைப் பொறுத்தவரை ‘அரசியல் வெற்றி’ என்பது இதுதான். பேரவை உறுப்பினர், முன்னவர், பின்னவர், முதல்வர் ஆவதெல்லாம்  அந்த வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான கூடுதல் சமாசாரங்கள்தான். 

காந்தியைப் பற்றிப் பேசும்போது இங்கே இன்னொரு விஷயத்தையும் பேசிவிடுகிறேன். ஊரே கூடி ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. `‘ஊழல்... ஊழல்னு கமல் சொல்றான். எங்க, அவனை நிரூபிக்கச் சொல்லுங்க பார்ப்போம்’’ என்கிறார்கள். அதையெல்லாம் நிரூபித்து, ஒருவர் ஜெயிலில் இருக்கிறார், இன்னொருவர் ஜெயில் வாசம் தப்பி, காலமாகிவிட்டார்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

நான் இப்போது சொல்லவருவது குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களின் படத்தை அரசாங்க அலுவலகங்களில் வைப்பதைப்பற்றி. திரு.ஸ்டாலின் தொடங்கிப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த ஒரு செயல் அது.

என் அளவில் யோசித்ததில், அவர்களது ஆட்சி, அவர்கள் அம்மா. அவர் படத்தை வைத்துக்கொள்ளட்டும். ஆனால், தயவுசெய்து எங்கள் காந்தி படத்தை மட்டும் அங்கே வைக்காதீர்கள், எடுத்துவிடுங்கள். ஏனெனில், அதற்கு உடந்தையாக இருந்தோம் என்பதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள், ஏதோ காந்தியும் உடந்தை என்பதைப்போல அவர் படத்தை வைத்திருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை.

அடுத்து இன்னொரு விஷயம், ‘`மாநில அரசைக் குறைகூறும் நீங்கள், இவர்களை ஆட்டுவிக்கும் மோடியைப் பற்றியோ, மத்திய அரசைப்பற்றியோ குறை சொல்ல மாட்டேங்குறீங்க...’’ இது என் மீது வீசப்படும் வசவு. இதை ஏன் வசை என்கிறேன் என்றால், விமர்சனம் என்பது ஒருவனை, ஓர் அரசை, ஓர் அமைப்பைத் திருந்தச் சொல்வது. ஆனால், வசவு என்பது அவனை, அரசை, அமைப்பைக் காயப்படுத்த வீசப்படும் கற்கள் போன்றது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைத்து அதைப்பற்றியே பேசி, அதை உண்மையாக்க முயலும் அயோக்கியத்தனம். அப்படித்தான் என் தாடையில் திரு. மோடி தாடியை ஒட்டும் முயற்சியும் நடக்கிறது.

‘`கறுப்புச் சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம். அதனால நான் கறுப்புச் சட்டை போட்டிருக்கிறேனாம். என்னை நோக்கி இப்படி ஒரு  குற்றச்சாட்டு. காந்தியைக்கூட பிரிட்டிஷாரின்  கூலி  என்று   சொன்னவர்கள்தானே இவர்கள். அதனால் இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் பலவீனத்தை மத்திய அரசு மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அவ்வளவு ஏன், இடைத்தரகர்கள் எல்லாம் பயன்படுத்துவார்கள். அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இது மாநில உரிமைக்கே பேராபத்து. அப்படியென்றால் இங்கே பலமான அரசு அமைய வேண்டும். அதற்கு முதலில் இவர்கள் போக வேண்டும்.

நான் சொல்வதை நன்றாக யோசித்துப்பாருங்கள். மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசுடனான பிணக்குகள் உண்டு. ஆனால், அவர்கள் மத்திய அரசுடன் இந்தளவுக்குத் தொடர்பற்றுப் போய்விடவில்லை. ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேச சந்திரபாபு அவர்கள் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்  அல்லர். ‘சாமி கும்பிடுகிறார்கள்’ என்பதுதான் அவர்களுக்குள் உள்ள ஒரே ஒற்றுமையே தவிர, மற்றபடி மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள். அவர்கள் மையத்துடன் எப்படி இணக்கமான தொடர்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். மற்றபடி அவர்களுக்குள் விவாதங்கள் நடக்கின்றன. கேட்கவே வேண்டாம், கேரளா நேரெதிர். ஆனால், மாநிலத்துக்கு வேண்டியவற்றை அழுத்திப்பேசி வாங்கிவிடுகிறார்கள்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

இப்படி நேரடியான, நேர்மையான தொடர்பு இருந்திருந்தால் இந்தளவுக்குத் தொட யோசிப்பார்கள். ஜெயலலிதா அம்மையார் இருந்தபோதுகூட மத்திய அரசுடனான தொடர்பு நேர்மையாக இருந்ததில்லை. ஆனால், ஏன் அவர்கள் இப்போதுபோல் அப்போது தொடவில்லை. ஏனெனில் பயம். ‘என்னத்துக்கு வம்பு’ என்ற பயம். இன்று அந்த அம்மையாரும் இல்லை, அவர்களுக்கு பயமும் இல்லை. ‘அப்படித் தொட்டாலும் ஒன்றும் சிக்காது’ என்று சொல்ல இங்கு உள்ளவர்களில் நேர்மையாளர்களும் இல்லை. இங்கு ஆள்பவர்கள் ஒவ்வொருவரும் தன் ஆதியையும் அந்தத்தையும் அவர்களிடம் அடகு வைத்துவிட்டு இங்கு  நாடகமாடி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தவறு என்றால், இவர்களை ஆட்டுவிக்கும் அவர்கள் சரியா என்று கேட்டால் ‘சரியில்லை’தான். ‘மாட்டுக்கறி’ முதல் ‘மதச்சார்பு’ வரை பல விஷயங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை நான்  விமர்சித் திருக்கிறேன். ஆனால் ‘இல்லவே இல்லை’ என்பார்கள் வசை பாடுபவர்கள். பரவாயில்லை. நான் கறுப்புச் சட்டை போட்டதால் என் கரியர் முழுவதும், நாற்பது வருடங்கள் மக்கள் அறிய என் இறை மறுப்பைச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அதனால் எனக்கு 10 ரூபாய் லாபம் என்று யாராவது சொல்லட்டும்? அதற்கு வாய்ப்பு உண்டா? இந்த யுகத்தில் இப்படிப் பேசுவதில் இருக்கக்கூடிய நஷ்டங்கள்தான்  எனக்கு அதிகம். இருந்தாலும் விடாமல் பேசுகிறேன் என்றால், ஏதோ நான் நம்புகிறேன் என்றுதானே அர்த்தம். ‘இதுதான் என் வாழ்க்கை முறை’ என்று எனக்குத் தெரிந்த அளவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.  வேறு யாரையும் ‘இப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு. ஊரைவிட்டே துரத்திவிடுவேன்’ என்ற தொனியில் பேசியிருக்கிறேனா?

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2


அதேபோல இந்து மதம் குறித்த என் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு, ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். மற்ற மதங்களைப் பற்றி எந்த விமர்சனமும் நீங்கள் செய்வதில்லையே’ என்று கேட்கிறார்கள். இந்த மதம் என் நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை என்பதால்தான் இதை விமர்சிக்கிறேன். சதுர்வர்ணம் பிரித்தது கிறித்தவமோ இஸ்லாமோ இல்லையே. அதற்கான குறைகளைத்தான் சாடினேன்; சாடுகிறேன்; சாடிக்கொண்டே இருப்பேன்.

அடுத்து, அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பது உலகத்தில் தொடர்ந்து நடந்துவரும் முயற்சிதான். எல்லா விஷயங்களிலும் அதற்கு எதிர்ப்புக்குரல் சொல்லி ப்ரொட்டெஸ்ட் பண்ணுபவர்கள்தான் ப்ராட்டெஸ்ட்டென்ட்.  அவர்களே பெரிய பக்தர்கள். ஆனால், பகுத்தறிவாளர்கள் அந்தக் கேட்டகிரியில் கிடையாது. நாங்கள் வேறு. யுவால் ஹராரே தன் ‘சேப்பியன்ஸ்’ நூலில், மனிதக் கூட்டுறவுக்கு ஒரு புராணம், மித்தாலஜி வேண்டியிருக்கிறது’ என்கிறார். ஒரு காவியம், ஒரு கதை தேவைப்படுகிறது என்கிறார். இல்லாத, மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லும்போது இன்னும் உத்வேகத்தோடு மக்கள் கூடுகிறார்கள். அதை நம்புகிறார்கள். ‘மழைக்காக யாகம் பண்ணுவோம். அனைவரும் வாருங்கள்’ என்றால் வருகிறார்கள். ‘மரம் நட வாருங்கள்’ என்று அழைத்தால், ‘எப்ப நட்டு, அது எப்ப முளைச்சி...’ என்ற எண்ணத்தில் தயங்கி மயங்குகிறார்கள். 

‘ஜஸ்டிஸ் ஃபார் ஆல். அதாவது அனைவருக்கும் சம நீதி என்று சொல்வதே உட்டாலக்கடி’ என்று அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறார் யுவால் ஹராரே. ஆனால், அதை நம்பித்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று சொன்னால் நம்புகிறார்கள். ‘அது எப்படி அப்படி இருக்க முடியும். இது நடக்கவே நடக்காது’ என்று தெரிந்திருந்தும் அந்தக் கருத்துக்காக உயிர்த்தியாகம் பண்ணவும் பலர் தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில்தான் ‘ஒரு குடையின் கீழ்’ என்பது எங்கேயோ நமக்குப் பிடித்திருக்கிறது. இல்லையென்றால், அவர்களால் இவ்வளவு பெரிய குடையை விரித்திருக்கவே முடியாது. ஆனால், இந்தப் பெரிய குடைப்பெரும்பான்மைக்கு எதிராக, எப்போதும்  குரல்கள் எழுந்துகொண்டேதான் இருக்கும். அந்தக்குரல் எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல. அக்ரஹாரத்திலிருந்துகூடக் கடும் எதிர்ப்புக்குரல் வந்திருக்கிறது என்பது வரலாறு.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

டெல்லி பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்லத் தோன்றுகிறது. இங்கு யார் வந்தாலும் சென்ட்டரைப் பகைத்துக்கொள்கிறார்கள். ‘அது நாம் வைத்த வட்டம்... என்னுடைய பார்லிமென்ட்’ என்ற எண்ணம் இங்கு வந்தாக வேண்டும். அடுத்து, எந்தக் கட்சி வந்தாலும் யாராக இருந்தாலும் டெல்லி என்பது ஒரு விதேசம் என்று நினைக்கக்கூடாது. லாகூர், அதற்கடுத்து டெல்லி என்ற நினைப்பு கூடாது. கராச்சி, டெல்லி என்ற இரண்டு தலைமையகங்கள் இருக்கின்றன என்று அவர்களைப் பற்றிய அந்நிய எண்ணமோ, பய நினைப்போ கூடாது.  ‘டெல்லி, நார்த் இண்டியன்ஸ் நடத்தும் இடம்’ என்கிற  எண்ணம் இங்குள்ள பெரும்பான்மைக்கு இருக்கிறது. ஆனால், ‘டெல்லி, நான் நடத்தும் இடம். நீங்கள் நடத்தும் இடம்’ என்ற எண்ணம் வரவேண்டும். அதனுடன் சுமுகமான உறவு இருந்தே ஆகவேண்டும். நீங்கள் சித்தாந்தத்தில் வேறுபடுங்கள். ஆனால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கவேண்டும். அது அடிபட்டுப்போனதால்தான் இவர்கள் அங்கே போய் ‘பெப்பே’ என்று வார்த்தைகளின்றி  வழிந்துவிட்டுத் திரும்பி வருகிறார்கள். அதனால், அவர்களும் இவர்களை எடுப்பார் கைப்பிள்ளைபோல் இடது கையால் டீல் செய்கிறார்கள்.  இதனால்தான் இவர்களைப் பின்னணியில் இருந்து அவர்கள் நடத்துகிறார்கள் என்கிறோம். மீண்டும் சொல்கிறேன், இவர்களைக் காசும், அரசியல் அதிகாரமுமுள்ள யார் வேண்டுமானாலும் நடத்தலாம்.  இவர்களை துட்டும் அதிகாரமும் நடத்துகின்றன.

பிரேக்கிங் நியூஸ் பரபரப்பில் நாம் அனிதாவை மறந்துவிட்டோம். அடுத்த வருட ‘நீட்’ பற்றிய கவலைகள் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அடுத்த வருட அனிதாக்களை  நீட்டுக்கு எப்படித் தயார் செய்யப்போகிறோம்? இல்லை, நீட்டே இல்லாமல் செய்யப்போகிறோமா என்பது பற்றி எந்தப் பேச்சும் எங்கும் இல்லை. ஆனால், இன்று எங்கெங்கு காணினும் அந்த ஐந்து நாள் பரோல் பற்றிய பேச்சுகள்தான்.

நீங்கள் ஜி.எஸ்.டிக்குக் கொடுத்த முன்னேற்பாடும் முன்னறிவிப்பும் முக்கியத்துவமும் ‘நீட்’டுக்கும் கொடுத்திருக்க வேண்டாமா? ஒன்றுமே தெரியாத மூன்று தலைமுறையாகப் படிப்பறிவு மறுக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை 1,176  மதிப்பெண் வாங்குகிறது என்றால் அவளுக்கு ‘நீட்’ கஷ்டமாகிவிடுமா என்ன? அந்தப் பிள்ளையிடம், ‘இதற்கு இப்படிப் படிக்க வேண்டும்’ என்று நீங்கள் வழிமுறை சொல்லியிருந்தால் ‘படிக்கமாட்டேன்’ என்றா சொல்லியிருப்பாள்? அதற்குத்தானே அந்தப்பிள்ளை தயாராக இருந்தாள். ஆனால், அதைப்பற்றி நீங்கள் அவளிடமும் எங்களிடமும் முன்பே உரையாற்றியிருக்க வேண்டும். திடீரென உயிர்க்கொல்லி மருந்துபோல அதை எங்கள்மீது தெளிக்கக்கூடாது.

‘நீட்’ மட்டுமல்ல, இந்த நாட்டின் கல்வியையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அது பெரும் கனவு. ‘நிறைய புத்தகம் படித்தால் நிறைய அறிவு’ என்று எங்கள் பிள்ளைகளை பயமுறுத்துகிறார்கள். அதை நான் மறுக்கிறேன். அடுத்து, அனைவரையும் சகலகலா வல்லவனாக்கும் முயற்சியை வெறுக்கிறேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லாத பாடத்தில், துறையில் வல்லமை வரவே வராது. போதும் பொறியாளர்கள். உலகத்தில் இத்தனை லட்சம் பொறியாளர்கள் தேவை என்றால், அவ்வளவு தேவைகளையும் விஞ்சி தமிழ்நாடே கூடுதல் பொறியாளர்களைத் தயாரித்து வைத்திருக்கிறது.

அப்படியிருக்கையில் எப்படி வேலை கிடைக்கும்? எனக்குத் தெரிந்து ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான ஆர்வமும் உழைப்பும் இருக்கும். அதை மனதில்வைத்து அவர்களுக்கான தனித்திறனை மேம்படுத்தச் சிறப்புப்பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதற்கு வருடக்கணக்கில் நாள்கள் தேவைப்படாது. தனித்தனியாக வைத்துப் பண்ணிவிடமுடியும். உதாரணத்துக்கு, நான் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கட்டடங்கள். ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான வீடுகள். உள்ளே லட்சக்கணக்கான குடிநீர், குளியல் குழாய்கள். ஆனால், இங்கு நன்கு பயிற்சிபெற்ற பிளம்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எடுப்பார் கைப்பிள்ளைகளாக அந்த வேலைகள் கதறிக்கொண்டு காத்திருக்கின்றன.

இன்று முடிவெட்டிக்கொள்ளாத ஆள்கள் யாராவது இருக்கிறார்களா? ‘எனக்கு நானே முடிவெட்டிக் கொள்கிறேன்’ என யாரும் செய்வதில்லை. ஆறு கோடிப் பேருக்கு முடிவெட்டியாக வேண்டும் என்றால், இது எவ்வளவு பெரிய தொழில். அந்த வேலையை நானும் செய்திருக்கிறேன். ஆனால், அதைச் செய்ய இன்று ஆள் இல்லை. எனக்குத் தெரிந்த சிலர் மாதம் லட்ச ரூபாய் சம்பளத்தில் எல்லாம் அந்த வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் இதே சம்பளத்துக்கு ஆட்கள் தேவை. ஆனால், பயிற்சிபெற்றவர்கள் இல்லை என்கிறார்கள்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

கிராமத்தில் எத்தனையோ இளைஞர்கள் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, ‘அதற்கேற்ற வேலை கிடைத்தால்தான் போவேன்’ எனக் காத்திருக்கிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும் செய்வதில் தவறில்லை. ஆனால், நான் சொல்வது குலத்தொழிலை அல்ல. ‘எங்கப்பா செஞ்சார், அதுக்காக நான் செய்கிறேன்’ என்று செய்யாதீர்கள். அது வேறுவழி. அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பரம்பரைத்தொழிலில் இஷ்டம் இருந்தால் செய்யுங்கள். அப்படிப்பார்த்தால் நான் வக்கீலாக வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், புரோகிதம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவற்றில் எனக்கு ஆர்வம் இல்லை.

சில கலைத்தொழிலாளர்களை ஊருக்குள் விடாமல் மந்தைவெளிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த வம்சத்துக்குள்போய் நான் சேர்ந்துகொண்டேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ‘இவ்வளவு சம்பளம் கொடுத்தா நாங்ககூடத்தான் சந்தோசமா வருவோம்’ என்று சிலர் கேலி பேசலாம். நான் வரும்போது அவ்வளவு கொடுக்கவில்லையே. `அரங்கேற்றம்’ படத்தில் 60 நாள்கள் வேலைக்குப் போனேன். சம்பளம் 500 ரூபாய். நான் சேர்ந்த புதிதிலும் கூத்தாடி என்றுதானே கேலி பேசினார்கள். சினிமா உலகிலிருந்து பல முதல்வர்கள் வந்தபிறகும் அப்படித்தானே பேசுகிறார்கள். பேசுபவர்கள் பேசட்டும், தொழிலில் அவமானமே கிடையாது. ‘தெர்மாகோல்’ தொழில்நுட்ப வாதிகள்  தொழில் சார்ந்த பயிற்சிப்பட்டறைகள் இதுவரை எத்தனை நடத்தியிருக்கிறார்கள்? 

ஆனால், இவை எவற்றையும் மனதில் கொள்ளாமல் அதே கூவத்தூர் மனநிலையிலேயே இவர்கள் இருப்பது எங்கு கொண்டுபோய் விடும் தெரியுமா? ‘ஓ அப்படித்தான் போலிருக்கு உலக நடப்பும். இனி இதில் என்ன அடிச்சு எடுக்க முடியுமோ எடுக்கலாம்’ என மக்களும் நினைத்துவிட்டால், நாம் எப்படிப்பட்ட கூட்டமாக மாறுவோம். நான் என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

‘இதை நேற்றே ஏன் பேசவில்லை’ என்கிறார்கள். பேசியிருக்கிறேன். அன்று என்னைவிடப் பெரிய குரல்கள் இருந்ததால் அந்தச் சத்தம் போதவில்லை. ஆனால், இன்று என்னைப்போல் பல குரல்கள் சேர்ந்து கேட்கும்போது, அவை ஒரே பெரிய குரலாக உங்களுக்குத் தெரிகிறது. அதற்கு உங்களால் பதில் பேச முடியாத நிலையில் இருக்கிறீர்கள். அதனால், கேள்விக்கு மறுப்பு சொல்வதை விட்டுவிட்டு, ‘இவன்ட்டல்லாம் போய்...’ என்று தரம்தாழ்ந்து சத்தம் போடுகிறீர்கள். எம்.ஜி.ஆர் எந்தக் காலகட்டத்திலாவது தரம்தாழ்ந்து பேசியிருக்கிறாரா? அதேபோல், அண்ணாவும் சரி. தரம்தாழ்ந்து பேசுபவர்களை அதட்டுவார்கள். அந்தத்தன்மைகள் குறைந்துகொண்டே வருகின்றன.

‘`அம்மா செத்துப்போனதுல இருந்து இந்த ஆட்சி வேண்டாம் வேண்டாம்னு இந்தாளு சொல்லிக்கிட்டே இருக்கார்’’ என்கிறார்கள். நான் மட்டுமா சொல்கிறேன், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் சொல்கிறது. அவர்களுக்குக் காதுகொடுத்திருந்தால், அண்ணாயிசத்தைப் படித்திருந்தால், இந்நேரம் நீங்கள் ஆட்சியை விட்டு இறங்கியிருப்பீர்கள். ‘அண்ணாயிசமா’ என்று உங்களில் பலர் அதிர்ச்சியாவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

‘குடும்பத்துடன் பார்க்கவேண்டிய அனைவரையும் மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படம்...’ என்ற அறிவிப்பு சினிமா போஸ்டர்களில் இருக்கும். ஆனால் படம், குடும்பத்துடன் பார்க்க முடியாதவாறு இருக்கும். டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்த்து முடித்தபிறகு ‘ஏன் அப்படிச் சொன்னீர்கள்’ என்று கேட்கமுடியாது. இ்ன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை விளக்கங்கள், தேர்தல் அறிக்கைகள் அப்படித்தான் உள்ளன.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

ஆனால், எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் கொள்கை விளக்கத்தை ‘அண்ணாயிசம்’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். அதில் மொழி, அரசியல், பொருளாதாரம், நெசவாளர், விவசாயம்... எனப் பல துறைகளுக்குமான தங்களின்  அரசியல் கொள்கைகளைக் குறிப்பிட்டிருந்தார். அவர் அதை வெளியிடும்போது, ‘இது பத்தவே பத்தாது’ எனச் சொல்லி அண்ணாயிசத்தைக் கிண்டலடித்தனர். முக்கியமாக, கிண்டலடித்தவர் சோ. ஒருவேளை அது வக்கீல் மொழியில் இல்லாமல் பாமர மொழியில் இருந்ததால்கூட அது கிண்டலுக்கு உள்ளாகியிருக்கலாம். 395 ஷரத்துகளுடன் கூடிய இந்திய அரசியலமைப்பைப் படிக்கும்போது அவர் வெளியிட்டது சின்ன புத்தகம்தான். ஆனால், அவருக்கு நிறைய ஆசைகள் இருந்தன என்பதை அண்ணாயிசத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.  நடக்கும், நடக்காது, இயலும், இயலாது எனப் பல விஷயங்களை அதில் ஆசைப்பட்டுச் சொல்லியிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் எதையுமே அவருக்குப் பிறகு வந்தவர்கள் கடைப்பிடிக்கவில்லை. கட்சியின் கொள்கை விளக்கப்புத்தகம் வேர்க்கடலை மடிக்கும் பேப்பர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆசையைக்கூட நிறைவேற்றுவதற்கான முயற்சியை எடுக்கவில்லை, தற்போதைய ஆட்சியாளர்கள்.

அதில் குறிப்பிட்டிருக்கும் ஒரு முக்கியமான கொள்கை விளக்கக் குறிப்பை அவர் வார்த்தைகளிலேயே சொல்கிறேன்...

‘மக்களாட்சித் தத்துவத்தில் மக்களே இறுதி எஜமானர்கள். அவர்களால் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ அல்லது அதுபோன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற எல்லா அமைப்பு முறைகளிலும் மக்கள் பிடிப்பு இறுதியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்போது, அல்லது மேற்கொள்ளப்பட்ட கடமைகளிலிருந்தோ, பொறுப்புகளிலிருந்தோ வழுவிவிடும்போது அவர்களைத் திருப்பி அமைக்கின்ற உரிமை, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்கு வழிவகை செய்யத்தக்க முறையில் இன்றைய அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் தேவை என்று அண்ணா தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.’

அதாவது, தாங்கள் தேர்ந்தெடுத்த ஓர் எம்.எல்.ஏ, ஓர் எம்.பி-யின் மீது  அவருக்கு வாக்களித்த மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால், அவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. அப்படியென்றால் டாஸ்மாக், நீட், ஹைட்ரோ கார்பன், குடிநீர்த் தட்டுப்பாடு... இப்படி எங்கெங்கு காணினும் போராட்டம், ஆர்ப்பாட்டம். கூடவே ஊழல், குதிரை பேரம்... என்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட, எம்.ஜி.ஆரின் பெயரைச்சொல்லி ஆட்சி நடத்தும் இவர்கள் ‘அண்ணாயிச’த்தின்படி இந்நேரம் ஆட்சியைத் துறந்திருக்க வேண்டும்.

‘எம்.ஜி.ஆர் சொன்னதற்கு இப்ப என்ன வேல்யூ, அவர்தான் இல்லையே’ என்று கேட்கலாம். அவர் உருவாக்கி வைத்த கட்சி இருக்கிறதே. அவரின் பெயரைச் சொன்னால் வீறுகொண்டு எழுபவர்கள் யாரும் கட்சிப் பொறுப்புகளில், ஆட்சியில் இல்லாமலிருக்கலாம். இவர்களை எழுந்து உட்காரவைக்கக்கூடிய விஷயம் பதவியும் பதவிமூலம் வரக்கூடிய பொருளும் என்று மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

இந்தச் சோகத்தை, துரோகத்தை அவர்களின் கூடாரத்துக்குள் போய்த்தான்  பேசியாக வேண்டும். அந்தக் கூடாரத்தை எந்த உலோகத்தை வைத்துச் செய்திருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது எஃகாக இருந்தாலும் சரி, இரும்பாக இருந்தாலும் சரி, எதில் கட்டியிருந்தாலும் அதை உருக்கி வேறொரு அரசியல் கருவி செய்துவிடவேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது. அதை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைச் சொல்ல நீ யார் என்று கேட்கும் ஆட்சியாளர்களுக்கு என் பதில்: நான் மக்களில் ஒருவன், அவர்களே நான்.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

ந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.