மரத்தைக் காக்க தொல்லியல் துறையினர் எடுத்த நடவடிக்கை -பொதுமக்கள் பாராட்டு!

தஞ்சாவூர் பெரிய கோயில் உட்புற வளாகத்தில் உள்ள நூறு ஆண்டு பழைமையான நெல்லி மரத்தைக் காப்பதற்காகவும், அவை முறிந்து கிழே விழாமல் இருப்பதற்கும் தொல்லியல் துறை சார்பில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இதற்கு முன் வன்னி மரத்தைச் சுற்றியும், அதன் கிளைக்கும் சிமென்ட் தூண் அமைத்துக் காத்தனர். மரத்தைக் காப்பதற்குத் தொல்லியல் துறை எடுத்த முயற்சியைப் பாராட்டி நெகிழ்ந்தனர்.

நெல்லி மரம்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்றது. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. சோழர்களின் கட்டடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக கம்பீரத்தோடு காட்சியளிக்கும் பெரிய கோயிலைக் காண  தமிழகம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். பெரிய கோயில் உட்புற வளாகத்தில் நெல்லி, வன்னி, மா மரம், வேப்பம், கொன்னை போன்ற மரங்கள் உள்ளன. இதில் கோயில் கோபுரத்தின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் நெல்லி மரம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. கிட்டத்தட்ட அந்த நெல்லி மரத்துக்கு நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றும் இதேபோல் நெல்லி மரத்துக்கு எதிரே இருக்கும் வன்னி மரமும் சுமார் நூறு ஆண்டுகளை நெருங்க இருப்பதாகவும் சொல்கிறார்கள் கோயில் வட்டாரத்தில். இதில் நெல்லி மரத்தில் நடுப்பகுதி இரண்டாகப் பிளந்து பட்டுப் போகத் தொடங்கியது. ஆனாலும் அதில் பச்சை இலைகளும் இருந்து வந்தன. இதையடுத்து நெல்லி மரம் உயிரோடுதான் இருக்கிறது இதைக் காப்பாற்ற வேண்டும் என்பதை உணர்ந்த  தொல்லியல் துறை அதிகாரிகள் அதற்கு  நீர் ஊற்றுவதற்கும், காற்றடித்து மரம் சாயாமல் இருப்பதற்கு இரும்பு பைப்புகளைக் கொண்டு நான்கு பக்கத்திலும் சாரம் அமைத்தனர். அதன் பிறகு நெல்லி மரத்தில் அதிகமாக இலைகள் துளிர்க்க ஆரம்பித்தன. இதற்கு முன் வன்னி மரத்தின் அடியிலும் சிமென்ட் கலவை கொண்டு தூண்கள் அமைக்கப்பட்டன.

தொல்லியல் துறையின் நடவடிக்கை

மேலும், வன்னி மரத்தின் கிளை பக்கவாட்டில் சற்று சாய்ந்தாற்போல் இருந்தது அவையும் முறிந்து விழாமல் இருப்பதற்கு கிளைக்கு கீழே தூண் அமைத்தனர் நூறு ஆண்டு பழைமையான மரத்தைக் காப்பதற்காக தொல்லியல் துறையினர் எடுத்த முயற்சியை பக்தர்கள் அனைவரும் பாராட்டி நெகிழ்ந்தனர். இது குறித்து தொல்லியல் துறை வட்டாரத்தில் பேசினோம், ``பெரிய கோயில் வளாகத்தைச் சுற்றி  நிறைய மரங்கள் இருந்தன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் கோயில் மறைக்காதவாறு அதன் அழகுக்காக சில மரங்கள் வெட்டப்பட்டன. இப்போது சில மரங்கள் மட்டுமே உள்ளன. அவை பட்டுப் போகாமல் இருப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வேகமாக காற்றடிக்கும்போது மரம் பக்தர்கள் மீது  விழாமல் இருப்பதற்கும், மரத்தைக் காப்பதற்கும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைத்துள்ளோம். மரத்தையும், மக்களையும் காப்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தோம்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!