இந்தியாவில், முதல் பயோஜெட் விமானம் வெற்றி... கட்டணம் குறையுமா?

பயோஜெட்

உலகின் மொத்த பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பு மட்டும் 2 சதவிகிதம். இந்த நிலையில், சூழலியலுக்குப் பாதிப்பு குறைக்கும் விதத்தில் வருகிறது,  பயோஜெட் விமானம்.

ஸ்பைஸ்ஜெட் பாம்பார்டியர்  Q400 விமானம், பகுதியளவு பயோஜெட் எரிபொருளைப் பயன்படுத்தி, 25 நிமிடத்தில் டெஹ்ராடூனில் இருந்து புறப்பட்டு, டெல்லியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில், 75 சதவிகிதம் ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) மற்றும் 25 சதவிகிதம் பயோஜெட் எரிபொருளின் கலவையைப் பயன்படுத்தியுள்ளது, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். ஏர் டர்பைன் எரிபொருளுடன் (ATF) ஒப்பிடுகையில், பயோஜெட் எரிபொருளைப் பயன்படுத்துவதன்மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பது மட்டுமில்லாமல், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தவும் முடியும்.

மொத்தம் 78 இருக்கைகள் உள்ள இந்த விமானத்தில், ஏறக்குறைய 20 பேர் கொண்ட டிஜிசிஏ மற்றும் ஸ்பைஸ்ஜெட் குழு, சோதனைப் பயணத்தில்  ஈடுபட்டிருந்தனர். 

காட்டாமணக்கு எரிபொருள்!

இந்த எரிபொருளை காட்டாமணக்கு பயிரைப் பயன்படுத்தி டெஹ்ராடூனில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர் -இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெட்ரோலியம் (ஐஐபி) உருவாக்கியுள்ளது. 
   
ஸ்பைஸ்ஜெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறுகையில், "உயிர் எரிபொருளின் (பயோஜெட் எரிபொருள்) விலை குறைவாக இருப்பதாலும், கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைக்க உதவுவதாலும், வழக்கமாகப் பயன்படுத்தும் விமான எரிபொருள் மீதான எங்கள் சார்புகளை ஒவ்வொரு விமானத்திலும் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் மற்றும் விமானச் சேவை கட்டணங்களையும் குறைக்க முடியும்" என்று கூறினார்.

 2008-ம் ஆண்டில்,  விர்ஜின் அட்லாண்டிக் போயிங் 747 விமானம், பயோஜெட் எரிபொருளைப் பயன்படுத்தி லண்டனிலிருந்து ஆம்ஸ்டர்டாம் வரை பறந்து, முதல் உலகளாவிய வெற்றியைக் கண்டது. இதைத் தொடர்ந்து, 2017-ல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விமானங்களில் பயோஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இவ்வாறான பயோஜெட் எரிபொருளை மட்டும் முழுமையாய் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வுகளை 80 சதவிகிதம் வரை குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. 

இனி பறப்போம்... பயோஜெட் விமானத்தில்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!