Published:Updated:

கல்வி கொடுக்கும் கலெக்டர்!

 கல்வி கொடுக்கும் கலெக்டர்!
கல்வி கொடுக்கும் கலெக்டர்!
 கல்வி கொடுக்கும் கலெக்டர்!

'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளி​களுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரை​யிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள். பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தை​களின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்​களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.

மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

ஆர்.ஆர்.கண்டிகை அரசுத் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 84 ஒடிசா மாணவர்களைச் சந்திக்கச் சென்றோம்.
நம்மிடம் பேசிய சரஸ்வதி என்ற மாணவி, ''ஒடிசாவுல பொலாங்கீர் மாவட்டத்தில இருக்கிற பஹாபூர், என்னோட ஊர். எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு. எங்க ஊர்ல நாலாவது வகுப்பு படிச்சுட்டிருந்தேன். அங்கே வேலை எதுவும் இல்லைங்கிறதால, இங்கே சேம்பர் வேலைக்கு வந்துட்டாங்க. அதனால் என் படிப்பைப் பாதியில விட்டுட்டேன். இங்கே இனிமே என்னோட படிப்பு அவ்வளோதான்னு நினைச்சேன். திரும்பவும் இங்கே நான் படிக்கிறதுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்காங்க. அதைப் பயன்படுத்தி நல்லாப் படிப்பேன்'' என்கிறார் ஆர்வமாக.

 கல்வி கொடுக்கும் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 230 சேம்பர்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில், பூந்தமல்லி பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், எல்லாபுரம் பகுதியில் இருப்பவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் இருக்கின்றனர். இப்படி தமிழ்நாட்டில் பல ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த குழந்தைகள் 1,366. மேலும், பீகாரைச் சேர்ந்த குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கான தனித் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவைச் சந்தித்துப் பேசினோம். ''ஜனவரி மாதத்தில் இருந்து இதற்கான வேலையைத் தொடங்கினோம். இங்கே செங்கல் சூளைகளில் வேலைக்கு வருபவர்கள் குடும்பத்தோடு  தங்கள் குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி தடைபடுகிறது. அவர்களின் கல்வி கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. சேம்பர் முதலாளிகளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கான பயண வசதிகள் ஏற்பாடு செய்யவும் அவர்கள் படிப்பதற்கு ஏதுவான இடத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் உத்தரவிட்டுள்ளேன்.

ஒரியா, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிக் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலங்களில் இருந்து படித்த இளைஞர்களை அழைத்துவந்து கல்வி கற்பிக்கிறோம். அந்த ஆசிரியர்களுக்கான ஊதியத்தை 'அனைவருக்கும் கல்வி இயக்கம்’ மூலமாக வழங்குகிறோம். நோட்டுப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு என இங்கே இருக்கிற மாணவர்களுக்கு வழங்குகிற அனைத்துச் சலுகைகளையும் வழங்குகிறோம். இங்கே வேலை முடிந்து அவர்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்லும்போது, அவர்கள் இங்கே எந்த வகுப்பு முடிக்கிறார்களோ அதற்கான சான்றிதழை வழங்குவோம். மீண்டும் அவர்களின் ஊருக்குச் சென்று படிப்பைத் தொடரலாம். இதுவரை 3,776 மாணவ மாணவிகளைப் பள்ளியில் சேர்த்துப் படிப்பைத் தொடர செய்திருக்கிறோம்'' என்றார்.

'அன்ன யாவினும் புண்ணியம்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று சும்மாவா சொன்னான் பாரதி?

- கவிமணி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி