துணிப்பைகளுடன் செல்ஃபி எடுத்து ஃபேக்ஸ்புக்கில் போட்டால் பரிசு! நெல்லை கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு, வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடைவிதித்துள்ளது. பால் மற்றும் பால் பொருள்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், மருந்துப்பொருள்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 

அந்தத் தடையை முழுமையாக அமல்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழுக்களோடு இணைந்து 'நெகிழி இல்லா  நெல்லை' எனும் திட்டத்தைத் தொடங்கியிருந்தது. அதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில், 'செல்ஃபி வித் மை பேக் கான்டெஸ்ட்' (Selfie with my bag contest) எனும் போட்டியையும் இப்போது  தொடங்கியுள்ளது. இதன்படி நெகிழி இல்லா நெல்லை திட்டம் வழங்கும் துணிப்பைகளுடன் செல்ஃபி எடுத்து முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று அறிவித்தார்.

இதை அறிவிக்கும் வேளையில், பிளாஸ்டிக் பைகளுடன் மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு, மாவட்ட ஆட்சியர் நெகிழி இல்லா நெல்லை திட்டம் வழங்கும் துணிப்பைகளை அளித்து, இனி  அதையே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். அவர்கள், மாவட்ட ஆட்சியருடன் தங்கள் துணிப்பைகளோடு செல்ஃபி எடுத்துக்கொண்டு, இனி துணிப்பைகளையே பயன்படுத்துவதாக உறுதி எடுத்துக்கொண்டனர்.

பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகளை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.  துணிப்பைகளை அதிக அளவில் பயன்படுத்துவது தொடர்பாக, பல கருத்தரங்குகளைப் பள்ளி, கல்லூரி அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். துணிப்பைகளைப் பயன்படுத்துவதை அவமானமாகக் கருதுவதை மக்கள் விட்டொழிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படுமாறு நம் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தாமிரபரணி ஆற்றின் கரைகளை மக்கள் உதவியோடு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளோம். மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்புகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நோய்த் தொற்றின் தாக்கம்குறித்து அம்மாநிலத்தின் கலெக்டர்களுடன் பேசியுள்ளோம். செங்கோட்டை எல்லைப் பகுதியின் வழியே நோய்த் தொற்று ஏதும் பரவாமல் தடுக்க குழு ஒன்றை ஏற்பாடுசெய்து, தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். சென்ற ஆண்டு, டெங்கு நோயின் தாக்கம் மாவட்டத்தில் கொஞ்சம் அதிகம் இருந்ததால், இந்த முறையும் டெங்கு நோயைத் தடுக்க குழு அமைத்துத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை உதவியோடு நடவடிக்கை எடுத்துவருகிறோம். பருவ காலங்களில் வரும் நோய்களைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!