"அக்காவுக்கு என் மேல இன்னும் கோபம் தணியலை!''- சாவித்திரி மகள் சாமுண்டீஸ்வரி

மிழில் `நடிகையர் திலகம்', தெலுங்கில் `மஹாநடி' என்கிற பெயரில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைச் சொன்ன படம், கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காக 100 நாள்களைக் கடந்த பிறகும், இன்னமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரம், படம் வெளிவரும் வரை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரியைத் தங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நடத்திவந்த ஜெமினியின் முதல் மனைவியின் மகளும் மருத்துவருமான கமலா செல்வராஜ், தங்கையுடனான உறவைத் துண்டித்துள்ளார். காரணம் என்ன? 

சாவித்திரி மகள்

`நடிகையர் திலகம்' படம் வெளிவந்ததும் சாவித்திரி மகன் சதீஷ், "அம்மாவின் கடைசி நாள்களில் அவங்க தனியா இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே காட்டியிருந்தார்கள்'' என்று நிம்மதி பெருமூச்சுவிட்டிருந்தார். மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், "எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்த மாதிரிதான் எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு'' என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். 

ஆனால், ஜெமினியின் மகள்களில் ஒருவரான கமலா செல்வராஜ், "என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்ததுபோலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்ததுதான் நடந்திருக்கிறது. என்னையும் என் அப்பாவையும் கூர்க்கா மற்றும் நாயைவிட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்'' என்று கோபமாகச் சொன்னார். 

கமலா செல்வராஜ்

இதெல்லாம் படம் வந்த புதிதில் நடந்தவை. அக்கா கமலா செல்வராஜின் அத்தனை கோபங்களுக்கும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாகவே இருந்தார் விஜய சாமுண்டீஸ்வரி. நீர் அடித்து நீர் விலகப்போவதில்லை என்பார்கள். தற்போது அக்கா, தங்கை உறவு எப்படி இருக்கிறது, விஜய சாமுண்டீஸ்வரியிடம் பேசினேன். மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

"பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னும் சரியாகலை. கமலா அக்கா இன்னும் என்னைவிட்டு தூரமாகத்தான் இருக்காங்க. எங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. ஆனா அவங்க பிள்ளைகள் என்கிட்டப் பேசிட்டிருக்காங்க. அக்கா கோபம் தணியறதுக்குக் கொஞ்ச காலம் ஆகலாம். நிச்சயம் சரியாகிடும்'' என்கிறார் நம்பிக்கையான வார்த்தையில்.

சமீபத்தில், `மஹாநடி' படத்துக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த விருது பற்றிக் குறிப்பிட்டவர், "ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சிட்டியில் நடந்த இந்தியன் சினிமா விழாவில், `மஹாநடி' படத்துக்கு `ஈகுவாலிட்டி ஆஃப் சினிமா' விருது கொடுத்தாங்க. அம்மாவாக நடித்த கீர்த்தி உட்படப் படக்குழுவினர் எல்லோரும் அந்த விழாவில் கலந்துக்கிட்டு விருதைப் பெற்றுக்கொண்டார்கள். எல்லாமே பாசிட்டிவாகப் போயிட்டிருக்கு. இதேமாதிரி என் அக்காவும் ஒரு நாள் என்கிட்டப் பேசுவாங்க. என்னை மட்டுமல்ல, எந்தத் தங்கையையும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு'' என்கிற விஜய சாமுண்டீஸ்வரியின் குரலில், அக்கா கமலா செல்வராஜின் மீதான பாசம் வெளிப்படையாகத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!